ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயன் அறிவாரில்லை;
தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே – 751
விளக்கம்:
தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து, ஓவியம் போன்ற சலனம் இல்லாத மனநிலையை அடைவோம். பூவில் இருக்கும் தண்டு போல, மனம் சுழுமுனையில் ஒடுங்கி நிற்கும் போது, பழைய தீவினைகளால் உருவான நம்முடைய உடல் புண்ணியம் பெற்று அக்கினி, திங்கள், கதிரவன் ஆகிய மூன்று மண்டலங்களிலும் பொருந்தி விளங்கும். யோகநெறி அறியாத பாவிகளுக்கு இதன் பலன் புரியாது.