கேள்விப்படாத பூ ஒன்று உண்டு!

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே – 844

விளக்கம்:
பரியங்கயோகத்தினால் கிடைக்கும் முக்கிய பலன் என்னவென்றால், நம் தலை உச்சியின் சகசிரதளத்தில் சிவ சக்தி சேர்க்கையினால் அங்கே ஆயிரம் இதழ் கொண்ட தாமரை ஒன்று மலர்வதை நாம் உணரலாம். நாம் இதுவரை கேள்விப்படாத அந்த தாமரை மலர நிலமும் தேவையில்லை, நீரும் தேவையில்லை. அத்தாமரைக்கு அரும்புமில்லை, வேருமில்லை. சூரிய ஒளியோ சந்திர ஒளியோ இல்லாமலேயே ஒளி வீசும் தன்னொளி கொண்டது, நமது தலை உச்சியில் உள்ள சகசிரதள தாமரை. அந்தத் தன்னொளிக்கு கீழ் திசை என்பதோ மேல் திசை என்பதோ கிடையாது, முழுமையான ஒளி அது.

பங்கயம் – தாமரை, தார் – அரும்பு, ஊர் – சூரிய ஒளி


இதம் தரும் பராசக்தி

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே – 843

விளக்கம்:
ஒரு சுழலின் உள்ளே அகப்பட்டாற் போல, யோக நிலையின் கும்பகத்தில் நின்று தன்னைத் தானே ஆகுதி செய்யும் யோகிகளுக்கு முதுமை என்பதே கிடையாது. கறுத்த தலைமயிருடன் எப்போதும் இளமையாக இருப்பார்கள். நம்முள்ளே குடியிருக்கும் பராசக்தி என்றும் நமக்கு துணை இருந்து இதம் தருவாள். நம்முடைய யோகநிலையின் பக்குவம் அறிந்து, நம்மை இந்த உலக பந்தத்தில் இருந்து விடுவிப்பாள்.

உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு), ஒரு சுழி – சுழல் போன்ற ஒரு ஆன்மிக நிலை, கதம் – ஓட்டம், பதம் – பக்குவம்


தன்னைத் தானே ஆகுதி செய்தல்

வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம்
ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே – 842

விளக்கம்:
பிராணாயாமப் பயிற்சியில் பூரகம், ரேசகம் ஆகியவற்றிற்கு இடையே நன்றாக இழுத்த மூச்சை கும்பகத்தில் நிறுத்தும் உபாயம் அறிந்தவர் இங்கு மிகவும் குறைவு. மூச்சை நன்கு உள்ளே இழுத்து கும்பகத்தில் நிறுத்தும் உபாயம் அறிந்து, அதனைப் பயிற்சி செய்பவர் உயர்ந்த நிலையை அடைந்து, தன்னைத் தானே சிவபெருமானுக்கு ஆகுதி செய்கிறார்.

வாங்கல் – பூரகம் என்னும் மூச்சை உள்ளிழுத்தல், இறுதல் – ரேசகம் என்னும் மூச்சை வெளியே விடுதல், வீங்க வலிக்கும் – மூச்சை நன்றாக இழுத்து கும்பகத்தில் நிறுத்துதல், விரகு – உபாயம், உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு)