தவத்தினால் தேவருலகின் செல்வன் ஆகலாம்

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.  –  (திருமந்திரம் – 634)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தன் மெய் வருத்தி ஆசனத்தில் அமர்ந்து தவம் செய்பவர்களை ’இவன் தேவர் உலகின் செல்வன்’ என தேவர்களின் தலைவர் இயம்புவார். அந்நேரம் முரசுகள் முழங்கும், புல்லாங்குழல் இசைக்கும். அந்த தேவர் உலகத்திலே ஈசன் அருளாலே நாம் இன்ப வாழ்வு பெறலாம்.


அட்டாங்கயோகத்தினால் மனத்தெளிவு பெறலாம்

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.  –  (திருமந்திரம் – 633)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தின் வழியில் சென்று, சிவபெருமானின் திருவடியைப் பற்றி, அவன் புகழைப் பாடி, நம் சிந்தையெல்லாம் அவன் திருவடியையே நாடி இருக்கச் செய்வோம். அப்படிச் சிந்தித்திருப்பவரை முனிவரெல்லாம் எதிர் கொண்டு அழைப்பர். மனத்தெளிவு பெற்று சிவபதம் அடைவது உறுதி.


அட்டாங்கயோகத்தின் பலன்

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.  –  (திருமந்திரம் – 632)

விளக்கம்:
சிவபெருமானுக்கு நாம் சூடும் மலர்கள் அவன் திருவடியை விரும்பிச் செல்கிறது. அது போல நம்முள்ளே வசிக்கும் குண்டலினி விருப்பத்துடன் சகசிரதளம் ஏறி சிவனடி சேரும் தன்மையுடையது. அட்டாங்க யோகம் அனைத்தையும் விரும்பி அதன் வழியில் நடப்பவர்கள் விண்ணுலகை அடைவார்கள். அவர்கள் விரும்பியதை எல்லாம் உமையுடன் மகிழ்ந்து நடனம் செய்பவனும், காளையை ஊர்தியாகக் கொண்டவனுமான நம் சிவபெருமான் அருள்வான்.

அட்டாங்கயோகத்தில் இருப்பவர்களுக்கு அந்தச் சிவபெருமான் வேண்டியதை எல்லாம் அருள்வான்.


சமாதியில் அறுபத்து நான்கு சித்திகள் கைகூடும்

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.  –  (திருமந்திரம் – 631)

விளக்கம்:
சமாதியில் இருப்பவர்களுக்குப் பல விதமான யோகங்கள் கைகூடும். அவர்கள் அறுபத்து நான்கு சித்திகள் கிடைக்கப் பெறுவார்கள். யோக நெறியில் நின்று இறைவனை அடைந்து விட்டவர்களுக்கு பிறகு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. ஏனென்றால் இறைவனை அடைந்தவர்கள் தாமும் சிவமாகி விடுவார்கள்.


சமாதி நிலையில் சிவன், சக்தி, ஆன்மா எல்லாம் ஒன்றே!

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும்  உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.  –  (திருமந்திரம் – 630)

விளக்கம்:
சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா,  நிகரில்லாத ஒளியாய் விளங்கும் சிவபெருமானோடும், ஆதி பராசக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும், கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடி பணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.


குண்டலினி வசப்பட்டால் கோபம் அகலும்

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே.  –  (திருமந்திரம் – 629)

விளக்கம்:
நம் சிரசின் மேல் உள்ள சகசிரதளத்தில் நாட்டம் செலுத்தி தியானித்திருந்தால் சமாதி நிலை கைகூடும். சமாதி நிலையில் ஆன்மாவைப் பற்றிய தத்துவங்கள் நன்கு விளங்கும், மெய்ப்பொருளை உணரலாம். குண்டலினி சக்தி வசப்படும். இத்தனை வருடங்களாக நாம் சேர்த்து வைத்திருக்கும் மிகுதியான கோபங்கள் அகலும். எதிலும் நடுவு நிலையோடு இருக்க இயலும்.


சிவனுடன் கலந்து விடும் நிலை சமாதி

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.  –  (திருமந்திரம் – 628)

விளக்கம்:
மனத்தில் தோன்றும் கற்பனைகளை எல்லாம் நிறுத்தி விட்டு, நமது நாட்டத்தை குண்டலினியிலே செலுத்தி, அந்தக் குண்டலினியை சுழுமுனை வழியாக மேலே சகசிரதளத்திற்குக் கொண்டு செல்வோம். அங்கே இந்த உலகையும், எல்லா உலகையும் படைத்த அந்த சிற்பனை அழகிய பேரொளி வடிவில் காணலாம். அவனை நாடி அந்த பரம்பொருளுடன் கலந்து நாமும் சிவமாகவே மாறுவோம். இந்த நிலையே குளிர்ச்சி தரும் சமாதியாகும்.

சிற்பன் – உலகை படைத்தவன்,   பொற்பு – அழகு,  தற்பரம் – பரம்பொருள்


குண்டலினியை வெவ்வேறு வடிவங்களில் உணரலாம்

மூலத்து மேலது முச்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.  –  (திருமந்திரம் – 627)

விளக்கம்:
கும்பகத்தின் போது நமது மூச்சுக்காற்று, மூலாதாரத்திற்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் நின்று பிறகு சுழுமுனை வழியாக மேற்செல்லும். அப்போது வானில் உள்ள பிறை போன்ற நமது நெற்றியில் குண்டலினியினை வெவ்வேறு வடிவங்களில் உணரலாம்.

காலத் திசையிற் – கால் அத்திசையில் (கால் – காற்று)


சமாதி நிலையில் சிவனைக் காணலாம்

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.  –  (திருமந்திரம் – 626)

விளக்கம்:
நம்பிக்கைக்கு உரியவனும், முதற்பொருளாக விளங்குபவனும், நான்கு வேதங்களாலும் ஓதப்படுபவனும், செம்பொன்னின் உள்ளே விளங்கும் சோதியைப் போன்றவனும் ஆனவன் சிவபெருமான். அன்பு மிகக் கொண்டு, ஆசைகளை ஒடுக்கி, நமது நாட்டம்  நடுநாடி வழியாக உச்சி ஏறுமாறு செய்து சிரசினில் தியானித்திருந்தால், சகசிரதளத்தில் அந்த சிவபெருமானைக் கும்பிட்டு அவனுடன் கலந்து நிற்கலாம்.

புகலிடம் தரும் சிவபெருமானின் திருவடியை அடைய அவனை வெளியுலகில் அலைந்து தேட வேண்டியதில்லை. குண்டலினியினை உச்சியில் ஏற்றி தியானித்திருந்தால் சகசிரதளத்தில் அந்த ஈசனைக் கண்டு அவனுடன் கலந்து விடலாம்.

நான்மறை – நான்கு வேதங்கள்,   அருத்தி – ஆசை,   கூட்டமிட்டார் – கலந்திருந்தார்


பாற்கடல் அமுதம் நமக்கும் உண்டு

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.  –  (திருமந்திரம் – 625)

விளக்கம்:
ஆன்ம சொரூபத்தை அறிந்து கொண்ட நமக்கு பரிசொன்று கிடைத்துள்ளது. அது தேவர்களுக்கும் கிடைக்காதது. குண்டலினியினை சிரசில் ஏற்றி தியானித்திருந்தால் உச்சியில் அமுதூறும். அவ்வமுதினை உண்போர்க்கு, முடிவில்லாத ஆசை கொண்ட மனம் அடங்கப்பெற்று சமாதி நிலை வாய்க்கும். இந்த முறை அறியாத தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுது உண்டார்கள்.

தேவர்கள் பாற்கடல் கடைந்து எடுத்த அமுதை விட நாம் அகத்தியானம் செய்து உச்சியில் ஊறச்செய்யும் அமுதம் உயர்வானது.

உரு – ஆன்ம சொரூபம்,   கருவரை – கருங்கல்லால் ஆன வரை,   அரு – உருவமில்லாத,  வரையா மனம் –  அடங்காத மனம்