தனக்கோர் தலைவன் இல்லாதவன்

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே. – (திருமந்திரம்)

விளக்கம்:
என்னால் வணங்கப்படும் இறைவனின் பேர் நந்தி. அவ்விறைவன் பொன்னாலே பின்னப்பட்ட சடையை பின்னால் உடையவன். நாம் வணங்கும் அந்த சிவனால் வணங்கப்படக்கூடிய தெய்வம் என்று உலகில் எதுவும் கிடையாது.


செய்வதை புரிந்து செய்க

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமானின் அருளால் சொல்லப்பட்ட ஆகமங்கள் எண்ணிக்கையில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த இறைவன் அருளிய உண்மைப் பொருளை புரிந்து கொள்ளாவிட்டால் அந்த எண்ணிலடங்கா கோடி ஆகமங்களும் நீர் மேல் எழுதியது போலாகும்.


உயிரின் உயிரே!

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. – (திருமந்திரம்)

விளக்கம்:
உலகின் அனைத்து உயிர்களுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவனை, இந்த உலகின் படைப்பிற்கு வித்தாக இருப்பவனை, தன்னிடம் அடைக்கலமாய் சேர என்னை அனுமதித்தவனை, பகலும் இரவும் பணிந்து வணங்கி என் அறியாமை நீங்கப் பெற்றேனே.


சேயினும் நல்லன்

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. – (திருமந்திரம்)

விளக்கம்:
தாழ்ந்த சடை கொண்ட சிவபெருமான் தீயை விட வெப்பமானவன், தண்ணீரை விட குளிர்ந்தவன். ஆனாலும் ஈசனின் அருளை அறிந்து கொள்பவர் இங்கு யாரும் இல்லை. அந்த சிவன் குழந்தையை விட நல்லவன், தாயை விட அன்பானவன். அவன் அடியவரின் பக்கத்தில் எப்போதும் துணையாக இருப்பான்.


வானில் நிற்கும் திங்கள்

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. – (திருமந்திரம்)

விளக்கம்:
நாள்தோறும் நிலையாய் நின்று வழிபடுவேன் என் இறைவனை. அந்த இறைவன் எரியும் நெருப்பைப் போன்ற வெளிச்சமுடையவன். வானில் நிற்கும் நிலவினைப் போல என் உடலினுள் வந்து பொருந்தி நிற்கின்றான், நான் உயிர்த்திருக்குமாறு.