கால்கட்டு எனப்படும் பிராணாயாமம்

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.    – (திருமந்திரம் – 592)

விளக்கம்:
உயிரில் கலக்கும் பிராணனை, கும்பகம் செய்யும் கால அளவை அறிந்து, உயிருக்கும் பிராணனுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்துவோம். உயிரில் கலந்த பிராணனை அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து கட்டினால், உயிரும் உடலும் வெகு காலத்திற்கு கலந்து நிற்கும்.

அறியில் – அறிந்தால்,  கால் – காற்று


கொக்குப் போல் தியானம் செய்வோம்

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.    – (திருமந்திரம் – 591)

விளக்கம்:
மூலாதாரத்தை அடைத்து பிராண வாயுவை மேலே எழுப்பி, இடையில் உள்ள புருவ மத்தியில் மனத்தை நிறுத்தி, நீர் ஓடும் கால்வாயில் மீனுக்காக காத்திருக்கும் கொக்குப் போல ஒரே குறிக்கோளுடன் தியானம் செய்ய வல்லவர்க்கு உடல் பல ஆண்டுகள் சிதையாமல் இருக்கும்.

கடைவாசல் – மூலாதாரம்,    இடைவாசல் – சுழுமுனை,   ஊழி – நெடுங்காலம்


குண்டலினிப் பயிற்சியால் பாலன் ஆகலாம்

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.    – (திருமந்திரம் – 590)

விளக்கம்:
மூலாதாரத்தில் வசிக்கும் குண்டலினியினை பயிற்சியினால் மேலே எழுப்பி நம் தலைக்கு மேல் இருக்கும் சக்தியுடன் சந்திக்கச் செய்தால், நாம் குழந்தை உள்ளம் கொண்டவராக மாறி விடலாம். இது நந்தியம் பெருமானின் ஆணையாகும்.

மூலாதாரத்தில் வசிக்கும் மூர்த்திக்கு தலைக்கு மேல் வசிக்கும் சக்தியினை நோக்கி  ஈர்ப்பு இருப்பதால், தகுந்த பயிற்சி செய்தால் குண்டலினியினை சிரசிற்கு கொண்டு செல்வது எளிதானதே என்பதை புரிந்து கொள்ளலாம்.

வேதகப் பெண்பிள்ளை – மாற்றங்களைச் செய்யும் சிற்சக்தி,  ஏல – மிக


ஆனந்த சோதியைக் காணலாம்

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.    – (திருமந்திரம் – 589)

விளக்கம்:
ஆழ்ந்த தியானத்தின் போது, மலை போன்ற தலையில் வான கங்கை நீர் பாய்வதையும் சுழுமுனை நாடி வழியாக ஓடுவதையும் உணரலாம். இனிய இசை ஒலிக்கும் சபையான நம் மனத்தில் அந்த ஒளி வடிவான சிவபெருமானின் ஆனந்தத் திருக்கூத்தை தொடர்ச்சியாக உணரலாம்.

மலையார் – மலை போன்ற,  வானீர் – வான் கங்கை,   நெடுநாடி – சுழுமுனை,   சிலை – நாதம்,   பொது – சபை


தியானத்தில் மனத்தை நிறுத்துவோம்

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வௌiயுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.    – (திருமந்திரம் – 588)

விளக்கம்:
கோணாத மனத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு, நம் மனம் கீழ் நோக்காதவாறு பார்த்துக் கொள்வோம். நடு நாடியின் வழியாகச் செல்லும் மூச்சுக்காற்றில் நம் மனம் பொருந்துமாறு செய்து கண்களைத் திறந்து வைத்து தியானம் செய்வோம். காணும் காட்சிகளிலும், காதில் விழும் ஒசைகளிலும் மனம் செல்லாமல் தியானம் செய்ய வல்லவர்க்கு வாழ்நாளைப் பற்றிய கவலை இராது.

குறிக்கொண்டு – குறிக்கோளாய்க் கொண்டு,   வீணாத்தண்டு – நடு நாடி,   வாணாள் – வாழ்நாள்


திருமூலரின் குறிப்பினுள் குவலயம் தோன்றும்

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே.  .    – (திருமந்திரம் – 587)

விளக்கம்:
திருமூலர் அருளியுள்ள அட்டாங்க யோகம் பற்றிய குறிப்புகளை நன்கு ஆராய்ந்து உணர்ந்தால், அவற்றின் உள்ளே  ஒரு பெரிய உலகமே தோன்றுவதைக் காணலாம். அவருடைய உபதேசத்தின் படி, மனத்தில் உள்ள வெறுப்பு இருளை அகற்றி, முறையான யோகப் பயிற்சி செய்து அந்த சிவபெருமானை நாடி இருப்போம். நம் சிந்தை சிறப்புறும், அந்த இறைவனைக் காட்சியாய் உணரலாம்.

திருமூலரின் குறிப்புகள் சுருக்கமாகத் தோன்றினாலும், அவற்றைத் தெளிவாக படித்து உணர்ந்தால், அவற்றில் உள்ள செய்திகள் விஸ்தாரமானவை என்பது புரியும்.


மூச்சை வசப்படுத்தினால் மனம் வசப்படும்

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.    – (திருமந்திரம் – 586)

விளக்கம்:
வெளியே விடும் மூச்சை சிறிது நேரம் உள்ளே நிறுத்தி, திறமையுடன் மனத்தை மூச்சுடன் பொருந்தி நிற்கச் செய்தால், மனத்தின் எண்ண ஓட்டம் நின்று மனம் வசப்படும். நம்முள்ளே குடியிருக்கும் நம் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான்.

திறமையுடன் கும்பகம் செய்தால் மனம் நம் வசப்படும்.


பிரத்தியாகாரத்தின் பெருமை

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.    – (திருமந்திரம் – 585)

விளக்கம்:
புருவ மத்தியில் தியானம் செய்யும் போது எற்படும் மாயையான உணர்வுகளைப் பிரித்துணர்ந்து, அம்மாயைகளில் சிக்காமல் கடந்து சென்று மேலும் உள்நோக்கு சிந்தையில் மனம் கரைந்து போக வேண்டும். அப்படி பயிற்சி செய்தால் உண்மையான பேரொளியை உணரலாம். பிரத்தியாகாரத்தின் பெருமை இதுவே!

தியானப் பயிற்சியின் போது மாயமான பல காட்சிகள் தோன்றும். அவற்றில் மனம் மயங்கினால் உண்மையான மெய்ப்பொருளை அடைய முடியாது. தோன்றும் காட்சிகளில் உள்ள மாயத்தன்மையை உணர்ந்து, உண்மையான பேரொளியைத் தேடி மேலும் உள்நோக்கு முகமாய்த் தியானம் செய்வோம்.

உபாதி – மாயையினால் உண்டாகும் தோற்றம்


மூலாதாரத்தில் மனத்தைச் செலுத்துவோம்

எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
கருவிடும் வாசற் கிருவிரல் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.    – (திருமந்திரம் – 584)

விளக்கம்:
நம் உடலில் மலம் கழிக்கும் வாசலுக்கு இரு விரல் அளவு மேலேயும், கருவினை உண்டாக்கக் கூடிய குறிக்கு இரு விரல் அளவு கீழேயும் உருப்பெற்றுள்ளது சோதி வடிவிலான குண்டலினி. அதில் மனம் செலுத்தி தியானம் செய்ய வல்லவர்களிடம், நம் பிறப்புக்குக் காரணமான அந்த பேரொளியாகிய சிவபெருமான்  கலந்து விளங்குவான்.


காலத்தை வெல்லும் வழி

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.    – (திருமந்திரம் – 583)

விளக்கம்:
மூலாதாரத்தை நோக்கி மனம் செல்ல விடாமல் தடுத்து, மனத்தை புருவ மத்தியில் வைத்திருப்போம். வேல் போன்ற கூர்மையான கண்களை மூடாமல் விழித்திருந்து மனம் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும்படி தியானம் செய்வோம். காலத்தை வெல்லும் வழி இதுவே ஆகும்.

முக்காரம் – தாழ்ப்பாள்