சித்தமெல்லாம் சிவனே!

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.  – (திருமந்திரம் – 492)

விளக்கம்:
உயிர்கள் பிறப்பது சிவசக்தியின் திருவிளையாடலால். அவர்கள் இந்த உடலுக்கு உயிர் கொடுத்தவர்கள். சிவசக்தியானவர்கள் அந்த உயிரை சுத்தமும் அசுத்தமும் ஆகிய இரண்டு மாயைகளில் சிக்கச் செய்து, உயர்ந்த ஒரு யோக நிலையை அடையவும் உதவி செய்கிறார்கள். நாம் பக்குவம் பெற்று அந்த உன்னதமான யோக நிலையை அடையும் போது நம்முடைய மனம் சிவமயமாகி விடும். நமக்கு சிவனைப் பற்றிய நினைப்பைத் தவிர வேறெதுவும் இருக்காது.


கடல் நீரில் உப்பு திரள்வது போல நம் பிறப்பு

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.  – (திருமந்திரம் – 491)

விளக்கம்:
ஒருவரின் வாழ்நாள் முடியும் அவருடைய பருவுடலைத் தகனம் செய்து விடுகிறோம். நுண்ணுடலான உயிர் வானுலகத்தில் கரைந்து பதிந்து விடுகிறது. கடல் நீரில் உள்ள உப்பு திரண்டு வந்து வடிவம் பெறுவது போல, நுண்ணுடலான உயிர் மறுபடியும் பிறப்பு எடுக்கிறது சிவன் அருளாலே!


தவத்தால் உணரலாம்

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினி னுள்ளே.  – (திருமந்திரம் – 490)

விளக்கம்:
இந்த உலகில் எல்லோரையும் விட பெருமை கொண்டவன் சிவபெருமான். அப்படிப்பட்ட பெருமை கொண்டவன், சிறுமை நிறைந்த நம் உடலில் கலந்து வசிக்கிறான். தேவர்களாலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத அந்த சிவபெருமானை, நாம் நம்முடைய உள் நோக்கிய தியானத்தால் அறிந்து கொள்ளலாம்.


சிவபெருமானுக்கு இன்பம் தரும் விஷயம்

முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாயின்ப மாவதுபோல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.  – (திருமந்திரம் – 489)

விளக்கம்:
செடி ஒன்று முதலில் மண்ணின் கீழ் கிழங்காக இருக்கிறது. அது முளைத்துப் பின் புதர் போல் வளர்கிறது. வளர்ந்த பருவத்தில் அது பழங்களைக் கொடுக்கிறது. இது போன்ற சரியான வளர்ச்சியே அந்தத் தாவரத்துக்குக் கிடைக்கும் இன்பமாகும். நம்முடைய வளர்ச்சியும் சரியான பாதையில் சென்று, நாம் ஆன்மிகத்தால் பக்குவம் பெறுவதே நமக்குள் இருக்கும் சிவபெருமானுக்கு இன்பம் தருவதாகும்.


தாயின் பெருமை

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 488)

விளக்கம்:
நாமெல்லாம் சிவபெருமானின் குழந்தைகள். குயில் தனது முட்டையை காக்கையின் கூட்டில் வைத்து விடுகிறது. காக்கையும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அந்த முட்டையை அடைகாத்து வளர்த்து விடுகிறது. அதே போல் சிவபெருமானும் தனது குழந்தையான நம்மை நமது தாயின் வயிற்றில் விட்டு வளரச் செய்கிறான். நமது தாயும் நம்மைத் தன்னுடைய குழந்தையாகவே நினைத்து மனச்சோர்வு இல்லாமல், தனது உடலுக்கு அதிக அசைவு கொடுக்காமல் ஜாக்கிராதையாக வளர்க்கிறாள்.


பழமையான சிவபெருமானை நாடுவோம்

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே.  – (திருமந்திரம் – 487)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்பத்தை நாடிக் கூடுகிறார்கள். அதன் விளைவாக துன்பம் நிறைந்த பாசத்தில் ஒரு புதிய உயிர் தோன்றி இந்த மண்ணில் பிறக்கிறது. பிறந்த அந்தக் குழந்தை வளரும் போது, சிவபெருமானை நாடி அவனைத் துதித்து தனது பற்றுக்களில் இருந்து விடுபட வேண்டும். நம் சிவபெருமான், இந்த நிலமெல்லாம் தோன்றுவதற்கு முன்பே உள்ள பழமையானவன். அவனால் மட்டுமே நம்மை நமது துன்பங்களில் இருந்து விடுவிக்க முடியும்.


மாயையின் கீழ்மை!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே.  – (திருமந்திரம் – 486)

விளக்கம்:
முந்தைய பாடலில் பார்த்தது போல, நமக்கு இந்த உடலைப் பற்றிய அறிவு மட்டும் தான் உள்ளது. அருவமாக உள்ள உயிரைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லை. நாம் பிறக்கக் காரணமான தந்தைக்கும் உயிரின் தன்மைப் பற்றித் தெரியாது. நம்மை வயிற்றில் சுமந்த தாய்க்கும் அது பற்றித் தெரியாது. நம்மைப் படைத்த பிரமனுக்குத் தெரிந்தாலும், அவன் அதை யாருக்கும் சொல்வதில்லை. உண்மை தெரிந்த சிவன் நமக்குள்ளே தான் இருக்கிறான். அவனை நாடினால் அவன் நமக்கு அந்த ரகசியத்தைச் சொல்வான். ஆனால் நாம் மாயையில் சிக்கிக் கொண்டு, சிவனை நாடாமல், இழிவான வாழ்க்கையை நடத்துகிறோம்.


உருவமில்லாத உயிர்!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.  – (திருமந்திரம் – 485)

விளக்கம்:
தாயின் வயிற்றில் உருவான கரு, பத்து மாதங்களில் முழு உருவம் பெறுகிறது. முழு உருவம் பெற்ற சரியான பருவத்தில் அக்குழந்தை இம்மண்ணில் வந்து பிறக்கிறது. மாயையில் சிக்கி வளரும் உடலைப் பற்றி மட்டும் தான் நாம் அறிவோம். நம் உடலைத் தாங்கியிருக்கும் உருவமில்லாத உயிரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.


வயிற்றில் உள்ள குழந்தை சோதியைப் போன்றது!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.  – (திருமந்திரம் – 484)

விளக்கம்:
திரண்ட வளைகரத்தைக் கொண்டப் பெண்ணின் வயிற்றில் உதிக்கும் குழந்தை, நம்முடைய யோக நிலையில், அண்ணாக்கில் அசையும் சோதியைப் போன்று ஒளிமயமானது. அக்குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தாயின் வயிற்றில் சூரியனைப் போன்ற செந்நிறம் கொண்டதாக வளர்ந்து உருவம் பெறுகிறது.


கலவியின் போது மூச்சு இயங்கும் முறை!

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே.  – (திருமந்திரம் – 483)

விளக்கம்:
கூடலின் போது ஆணின் மூச்சு இயங்கும் முறையே பிறக்கும் குழந்தையின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது என்று முந்தைய பாடல்களில் பார்த்தோம். அக்கூடலின் போது பெண்ணின் மூச்சும் ஆணின் மூச்சோடு ஒத்து இயங்க வேண்டும். அப்படி ஒத்து இயங்கினால், பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும். கலவியின் போது இருவருக்கும் மூச்சு தடுமாறினால், திரண்ட வளைகரத்தைக் கொண்ட அப்பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்காது.