எலும்பும் கபாலமும் ஏந்திய வலம்பன்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. – (திருமந்திரம் – 371)

விளக்கம்:
எலும்பும் கபாலமும் ஏந்தி வலம் வரும் சிவபெருமான், தேவர்களுக்கெல்லாம் மூத்தவன் ஆவான். அவன் எலும்பும் கபாலமும் ஏந்தாவிட்டால், இந்த உலகம் பரிணாம வளர்ச்சி இல்லாமல் எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விடும்.


திருமாலின் சக்கரம் வலுவிழந்த நேரம்

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே. – (திருமந்திரம் – 370)

விளக்கம்:
தக்கன் செய்த வேள்வியை அழித்த வீரபத்திரரின் தலை மீது திருமால் தனது சக்கரத்தை வீசினார். வீரபத்திரர் சிவபெருமானின் ஆணைப்படி போருக்கு வந்தவர் என்பதால், திருமாலின் சக்கரம் அவர் முன்பு வலிமை இழந்தது. வீரபத்திரரை அது காயப்படுத்தவில்லை.


திருமாலுக்கு தனது ஆற்றலில் பங்கு கொடுத்த சிவபெருமான்

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே. – (திருமந்திரம் – 369)

விளக்கம்:
சிவபெருமான் தனது பொறுப்பில் ஒரு பகுதியை திருமாலுக்குக் கொடுக்க முடிவு செய்தான். இந்த உலகைக் காக்கும் தன்மையை சக்கரத்திற்கு அளித்து, அந்தச் சக்கரத்தை திருமாலுக்கு அளித்தான். சக்கரத்தைத் தாங்கும் வலிமை தரும் பொருட்டு, தனது சக்தியின் ஒரு பகுதியை திருமாலுக்குக் கொடுத்தான். பிறகு தனது திருமேனியின் ஒரு பகுதியையும் திருமாலுக்குக் கொடுத்து அருளினான்.


திருமாலுக்கு வலிமை அளித்த சிவபெருமான்

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே. – (திருமந்திரம் – 368)

விளக்கம்:
தான் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு, திருமாலுக்குச் சக்கரத்தை அளித்தான் நம் சிவபெருமான். ஆனால் அந்தச் சக்கரத்தைத் தாங்கும் வலிமை முதலில் திருமாலுக்கு இல்லை. வலிமை வேண்டி திருமாலும் மிகுந்த விருப்பத்துடன் சிவபெருமானை வழிபட, நம் பெருமானும் திருமாலுக்குச் சக்கரத்தைத் தாங்கக்கூடிய வலிமையை அளித்து அருளினான்.


திருமாலுக்குச் சக்கரம் தந்த சிவபெருமான்

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதம் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே. – (திருமந்திரம் – 367)

விளக்கம்:
திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் நம் சிவபெருமான், பூமி முதலிய ஏழு உலகங்களைப் படைத்தான். அவற்றை நிலை நிறுத்தும் பொருட்டு திருமாலுக்குச் சக்கரம் தந்து அருளினான். இவ்வுலகில் உள்ள தீயவர்கள் அகங்காரத்தோடு தீச்செயல்களைச் செய்தால், திருமால் தனது சக்கராயுதத்தால் அவர்களை அழித்து, இவ்வுலகைக் காப்பான்.


பிரமனுக்குக் கிடைத்தப் பாடம்

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே. – (திருமந்திரம் – 366)

விளக்கம்:
நல்ல பண்புகளெல்லாம் அழியப் பெற்றவர்கள் தாம் சிவபெருமானைப் பழிப்பார்கள். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஒருமுறை சிவபெருமானை இகழ்ந்து பேசினான். அதனால் கோபம் கொண்ட சிவன், தன்னைப் பழித்த பிரமனின் விண்ணை நோக்கிய தலையைக் கொய்து, அவனுக்கு ஒழுக்கத்தைப் புரிய வைத்தான்.


சிவபெருமானை மனத்தில் இருத்துவோம்

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. – (திருமந்திரம் – 365)

விளக்கம்:
பிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவரும் தேவர்களும் திகைத்துப் போனார்கள். அவர்களது அச்சம் நீக்கிய நம் சிவபெருமான், அந்த பிரளயத்தின் நடுவே அக்னிப் பிழம்பாக நின்று அனைவரையும் காத்து அருளினான். வானுலகையும், மண்ணுலகையும் படைத்தவன் சுயம்புவான நம் சிவபெருமான். இதை உணர்ந்தவர்கள் நம் பெருமானை, தம்முடைய மனத்தில் இருத்தி வழிபடுகிறார்கள். நாமும் அதை உணர்ந்து சிவபெருமானை நம் மனத்தில் இருத்தி வணங்குவோம்.


எண்கடல் சூழ் எம்பிரானே!

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 364)

விளக்கம்:
பிரளயத்தின் போது சூழ்ந்த வெள்ளத்தை வற்றச் செய்தான் சிவபெருமான். இதைக் கண்ட தேவர்கள் எல்லாம் “கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் உன்னைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து கொள்ளட்டும்” என்று இறைஞ்சினார்கள். வெள்ளமெல்லாம் வற்றிய பிறகு, கடல் போன்ற விண்ணுலகை அமைத்துக் கொடுத்த அந்தக் கடவுளை, கண் கசிந்து நினைக்க மறந்து விட்டார்களே அந்தத் தேவர்கள்!


அஞ்ச வேண்டாம்! சிவபெருமான் அருள் உண்டு!

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே. – (திருமந்திரம் – 363)

விளக்கம்:
பிரளய வெள்ளத்தின் போது, அந்த அலை கடலை ஊடறுத்து நெருப்பு மலையாக நின்றான், இந்த உலகத்துக்கும் வானவர்க்கும் தலைவனான சிவபெருமான். உலக மக்கள் அந்த நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு “யாரும் அஞ்சாதீர்கள்!” என்று கூறி அருள் செய்தான்.


நெருப்பு மலையாக நின்ற சிவபெருமான்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே. – (திருமந்திரம் – 362)

விளக்கம்:
பிரளயத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது கரிய நிறம் கொண்ட பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. அந்நேரத்திலும் பிரமனும் திருமாலும் ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனர். நம் இறைவனான சிவபெருமான் ஒளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சிவபெருமானின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் சிவனே தலைவன் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்தான்.