பரத்தியானமும் சிவத்தியானமும்

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.  –  (திருமந்திரம் – 598)

விளக்கம்:
நம் பிறப்பிற்கு காரணமானவை பூதங்கள் ஐந்து, புலன்கள் ஐந்து, கரணங்கள் நான்கு, மாயை ஒன்று, ஆருயிர் ஒன்று. இந்த பதினாறு ஆதாரங்களிலும் நாம் தியானம் செய்வோம். தியானத்தினால் நம் அறிவும் புலன்களும் ஒன்றுக்கொன்று மாறுபாடு இல்லாமல் இயங்கச் செய்யலாம். வடிவுடைய சக்தியை நினைத்து செய்யப்படுவது பரத்தியானம். ஒளி உருவான சிவனை நினைத்து செய்வது சிவத்தியானம் ஆகும். இவ்விரெண்டும் யோகத்தின் இரண்டு பகுதிகளாம்.

வரும் ஆதி – வந்த காரணம்,   பொருவாத – உராய்தல் இல்லாத,  மேவல் – அடைதல்,    குரு – ஒளி

ஆன்மா சிவனோடு பொருந்தியிருக்கும் நிலை தாரணை

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.    –  (திருமந்திரம் – 597)

விளக்கம்:
பசி, நோய், மூப்பு ஆகியவற்றால் அரிக்கப்படும் இந்த உடல் ஐம்பூதங்களால் ஆனது. அப்பூதங்கள் சத்தாதி முதலான தன்மாத்திரைகளில் அடங்குபவை (தன்மாத்திரைகள் – சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்). மனாதி எனச் சொல்லப்படும் நினைவு, அகங்காரம், புத்தி ஆகியவை சித்தத்தில் அடங்குபவை. அது போல நம்முடைய ஆன்மா சிவனுடன் ஒடுங்கி இருக்கும் நிலை தாரணை ஆகும்.

வந்தவர் யாரும் தங்கியதில்லை

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.    –  (திருமந்திரம் – 596)

விளக்கம்:
இந்த உலகில் இதுவரை வந்தவர் யாரும் இங்கே தங்கியதில்லை, எல்லாரும் முடிந்து விட்டனர். அப்படி இருக்கும் போது புதிதாய் வருபவர் யாரும் நிரந்தரமாய் இருப்பார் என்று எப்படி உறுதிமொழி கொடுக்க முடியும்? இதுவரை வந்து போனவர்களைப் பற்றிப் பேசினால் அது அளவில்லாதவையாகும். இதில் மாயம் என்னவென்றால் ஆற்றின் கரை மெதுவாக நீரில் கரைவது போல, நாளும் நமக்குத் தெரியாமலேயே நமது உடல் அழிந்து கொண்டிருக்கிறது.

மனமெனும் குரங்கை மூட்டையாக கட்டி விடலாம்

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலு மாமே.    –  (திருமந்திரம் – 595)

விளக்கம்:
நாம் மூச்சு விடும் போது உடம்பின் உள்ளே நிறையும் காற்றுக்கள் பத்து. அவை  1. உயிர்க்காற்று, 2. மலக்காற்று, 3. தொழிற்காற்று, 4. ஒலிக்காற்று, 5. நிரவுகாற்று, 6. தும்மற்காற்று, 7. விழிக்காற்று, 8. கொட்டாவிக்காற்று, 9. இமைக்காற்று, 10. வீங்கற்காற்று. இந்த பத்தில் உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று என்னும் ஐந்தும் ஐயுயிர்ப்பு என சொல்லப்படுகிறது. பிராணாயாமப் பயிற்சி இல்லாமல் இந்த ஐந்து காற்றுக்களும் வீணாகப் போனால், பரிதாப வாழ்வைத் தவிர வேறு என்ன கிடைக்கும்? மூச்சுக் காற்றை தனது எல்லைக்குள் செலுத்தி தியானம் செய்ய வல்லவர்க்கு, உடலுக்குள் குறும்பு செய்யும்  மனம் என்னும் குரங்கை மூட்டையாகக் கட்டி விட முடியும்.

பிராணாயாமப் பயிற்சி செய்து மனம் என்னும் குரங்கை கட்டி வைத்து விடலாம்.

கோலி – தியானம் செய்து,   கொட்டு – உடம்பு,   பொதியல் – மூட்டையாகக் கட்டுதல்

தியானத்தினால் உடல் கோயிலாகும்

வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.    – (திருமந்திரம் – 594)

விளக்கம்:
மனத்தை ஊடுருவிச் செல்கின்ற மூச்சுக்காற்றை வீணாக்காமல் நடுநாடியின் வழியாக செலுத்தி தியானம் செய்திருந்தால், ஏழு சாளரங்களையும் இரண்டு பெரிய வாசல்களையும் கொண்ட கோயிலின் பள்ளியறையிலே பல காலம் வாழலாம்.

தியானம் பயில்பவர்க்கு இந்த உடலே கோயிலாகும். அதிலே நமது ஆன்மா வெகு காலத்திற்கு சுகமாக வாழும்.

போழ்கின்ற – ஊடுருவுகின்ற,  சாலேகம் – சாளரம்,   பாழி – கோயில்,   பள்ளி அறை – ஓய்வு பெறும் இடம்

தியானத்தோடு மௌனத்தையும் பழகுவோம்

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையுமாமே.    – (திருமந்திரம் – 593)

விளக்கம்:
தியானம் செய்பவர் வாய் திறவாமல் மௌனமாக இருந்து பழகினால் அவர் மனத்தில் ஆன்மிகச் செல்வம் பெருகும். வாய் திறந்து பேசுபவர் அந்த செல்வத்தை மூச்சுக்காற்று வழியே வீணாக வெளியே விட்டு விடுகின்றனர். மௌனம் பழகுபவர்கள் தன் அறிவை செலுத்தி ஆன்மிக உணர்வை மூட்டுவர். பேரின்பம் இருக்கும் செப்பைத் திறந்து பார்க்கும் ஆற்றல் இல்லாதவர்கள் கோழைகள் ஆவார்கள்.

தியானம் பயில்பவர்களுக்கு மௌனம் அவசியம்.

மாடு – செல்வம்,   வளி – காற்று,    கோய் – செப்பு

கால்கட்டு எனப்படும் பிராணாயாமம்

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.    – (திருமந்திரம் – 592)

விளக்கம்:
உயிரில் கலக்கும் பிராணனை, கும்பகம் செய்யும் கால அளவை அறிந்து, உயிருக்கும் பிராணனுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்துவோம். உயிரில் கலந்த பிராணனை அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து கட்டினால், உயிரும் உடலும் வெகு காலத்திற்கு கலந்து நிற்கும்.

அறியில் – அறிந்தால்,  கால் – காற்று

கொக்குப் போல் தியானம் செய்வோம்

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.    – (திருமந்திரம் – 591)

விளக்கம்:
மூலாதாரத்தை அடைத்து பிராண வாயுவை மேலே எழுப்பி, இடையில் உள்ள புருவ மத்தியில் மனத்தை நிறுத்தி, நீர் ஓடும் கால்வாயில் மீனுக்காக காத்திருக்கும் கொக்குப் போல ஒரே குறிக்கோளுடன் தியானம் செய்ய வல்லவர்க்கு உடல் பல ஆண்டுகள் சிதையாமல் இருக்கும்.

கடைவாசல் – மூலாதாரம்,    இடைவாசல் – சுழுமுனை,   ஊழி – நெடுங்காலம்

குண்டலினிப் பயிற்சியால் பாலன் ஆகலாம்

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.    – (திருமந்திரம் – 590)

விளக்கம்:
மூலாதாரத்தில் வசிக்கும் குண்டலினியினை பயிற்சியினால் மேலே எழுப்பி நம் தலைக்கு மேல் இருக்கும் சக்தியுடன் சந்திக்கச் செய்தால், நாம் குழந்தை உள்ளம் கொண்டவராக மாறி விடலாம். இது நந்தியம் பெருமானின் ஆணையாகும்.

மூலாதாரத்தில் வசிக்கும் மூர்த்திக்கு தலைக்கு மேல் வசிக்கும் சக்தியினை நோக்கி  ஈர்ப்பு இருப்பதால், தகுந்த பயிற்சி செய்தால் குண்டலினியினை சிரசிற்கு கொண்டு செல்வது எளிதானதே என்பதை புரிந்து கொள்ளலாம்.

வேதகப் பெண்பிள்ளை – மாற்றங்களைச் செய்யும் சிற்சக்தி,  ஏல – மிக

ஆனந்த சோதியைக் காணலாம்

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.    – (திருமந்திரம் – 589)

விளக்கம்:
ஆழ்ந்த தியானத்தின் போது, மலை போன்ற தலையில் வான கங்கை நீர் பாய்வதையும் சுழுமுனை நாடி வழியாக ஓடுவதையும் உணரலாம். இனிய இசை ஒலிக்கும் சபையான நம் மனத்தில் அந்த ஒளி வடிவான சிவபெருமானின் ஆனந்தத் திருக்கூத்தை தொடர்ச்சியாக உணரலாம்.

மலையார் – மலை போன்ற,  வானீர் – வான் கங்கை,   நெடுநாடி – சுழுமுனை,   சிலை – நாதம்,   பொது – சபை