தொட்டுத் தொடர்வோம் ஈசனை

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.  –  (திருமந்திரம் – 289)

விளக்கம்:
மேலான சோதி வடிவாய் இருக்கும் சிவபெருமானை நாம் ஏன்  நினைப்பதும் மறப்பதுமாய் இருக்கிறோம்? அவன் நினைவை உறுதியாகத் தொட்டுத் தொடர்ந்து அவனது முடிவில்லாத பெருமையை உணர்வோம். நம் ஆருயிராய் நிற்கும் அந்த ஈசனின் நினைவில் எப்போதும் கலந்திருப்பதே நாம் அவனுக்குச் செய்யும் திருமஞ்சனமாகும்.

ஈசனின் நினைவை பற்றுவதும் விடுவதுமாய் இல்லாமல், தொடர்ந்து அவனை நினைத்திருப்போம்.

(மேதகு – மேலான,  மஞ்சனம் – நீராடல்)


நம் அன்பை ஈசன் அறிவான்

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.   – (திருமந்திரம் – 288)

விளக்கம்:
இரவும் பகலும் தன் மேல் அன்பு கொண்டு பக்தி செய்பவர்களை அந்த சிவபெருமான் நன்றாக அறிவான்.  நாம் ஞானம் பெற்று நமக்கென ஒரு செயல் இல்லாமல் இருந்தால், அந்த ஈசன் வந்து நம் மனத்தில் எழுந்தருளி நிற்பான்.

(பரிவு – பக்தி,  தேசு – ஞானம்)


அன்பினால் இறைவனை அறிவோம்

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே.  – (திருமந்திரம் – 287)

விளக்கம்:
இந்தப் பிறவிக்கு முன்பு நாம் கொண்ட பிறப்பும் இறப்பும் பற்றி நம்மால் அறிய முடியாது. ஆனால் மனத்தில் அன்பு இருந்தால் நாம் இறைவனை அறிந்து கொள்ளலாம். அந்த நந்தியம்பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். அன்பினால் அவனை உணரும் எண்ணம் இல்லாதவராய் இருக்கிறோமே!

நம்முடைய பிறப்பையும் இறப்பையும் ஆராய்வதை விட்டு, பிறப்பும் இறப்பும் இல்லாத நந்தியை அன்பினால் அறிந்து கொள்வோம்.


இன்பத்தின் தித்திப்பு அவன்

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.  – (திருமந்திரம் – 286)

விளக்கம்:
சிவபெருமான் அனைவராலும் நம்பப்படுபவன். அவன் எல்லாவிதப் பொருளாகவும் இருக்கிறான். தேவலோகத்தில் உள்ள வானவர்கள் எல்லாம் சிவனைத் தான் போற்றி வணங்குகிறார்கள். நமக்கெல்லாம் இன்பம் தருபவன் அந்த இறைவனே! நமது இன்பத்தில் நின்று தித்திக்கும் பொருளாக இருப்பவன் அவனே! அந்த அன்பு வடிவான சிவனை நாம் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.

(இரதிக்கும் – தித்திக்கும்)


திருவடியைக் கண்டேன் அன்பினாலே

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.   – (திருமந்திரம் – 285)

விளக்கம்:
நறுமணம் தரும் கொன்றை மலரை அணிந்துள்ள சிவபெருமானின் திருவடியைக் கண்டேன். ஆணவம் எனும் யானையைக் கிழித்த ஈசனின் திருவடியைக் கண்டேன். என் இதயத் தாமரையில் எப்போதும் வீற்றிருக்கும் அவன் திருவடியைக் கண்டேன். அப்பெருமானின் திருவடியை நான் கண்டு கொண்டது என் அன்பினாலேயே!

(கமழ் – மணம்,  கரி – யானை,  கழல் – பாதம்)


ஈசனை அன்பால் வசப்படுத்தலாம்

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.  – (திருமந்திரம் – 284)

விளக்கம்:
பக்தியுடன் பணிந்து தொழும் அடியார்களுக்கு சிவபெருமான் முக்தி கொடுத்து காட்சியும் தருகிறான். தன்னையே சார்ந்திருக்கும் அடியார்களிடம் வசிக்கும் அந்த ஈசனின் அன்பிற்கு உருகும் தன்மையைப் பற்றி சித்தர்களும் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.


பேரின்பம் பெறும் வழி

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.  – (திருமந்திரம் – 283)

விளக்கம்:
சிவபோதத்தில் லயிக்கும் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்றால், கூடலின் போது ஆடவர் தனது பெண் துணையின் மேல் வைத்திருக்கும் அன்பின் அளவில் இருக்க வேண்டும். பிற உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், சிவபெருமானை நினைத்து போதத்தில்  சஞ்சரித்து மகிழ்வது பேரின்பமாகும். அப்போது அது என்று சொல்லப்படும் சிவத்தினுள் இது என்று சொல்லப்படும் நம் ஆன்மா கலந்து ஒன்றாய் நிற்கும்.

(ஆயிழை – பெண்,  ஒடுங்குதல் – லயிப்பு,  குலாவி – மகிழ்ந்து,  உலாவி – சஞ்சரித்து)


சிந்தையில் அன்பு இருந்தால் போதும்

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே. – (திருமந்திரம் – 282)

விளக்கம்:
நம் சிந்தையில் அன்பிருந்தால் அங்கே ஒளி வடிவான சிவபெருமான்,  இன்பம் தரும் அருட்கண்களை உடைய சக்தியுடன் சேர்ந்து அருள் புரிவான். துன்பம் தரும் ஐம்பொறிகளின் பிடியில் அகப்படாமல் நன்மை தரும் சிந்தையை நாடுவோம்.

(துடக்கற்று – அகப்படாமல்)


இன்பப்பிறவி

இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே. – (திருமந்திரம் – 281)

விளக்கம்:
இன்பப்பிறவி அடைவதற்கு வேண்டிய வழிகளை இறைவன் நமக்கு அருளியிருக்கிறான். துன்பம் மிகுந்த இப்பிறவியைப் பல கடமைகளைச் செய்துதான் கடக்க வேண்டியிருக்கிறது. நாம் அன்பினால் சிவபெருமானோடு கலந்திருந்தால், அவன் திருவருள் தரும் வலிமையால் இந்தப் பிறவியை இன்பமாய்க் கடக்கலாம்.

(முன்பு – வலிமை)


கொழுந்து விடும் அன்பு

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே. – (திருமந்திரம் – 280)

விளக்கம்:
நமக்கெல்லாம் மகிழ்ந்து அருள் செய்திடுவான் உத்தமநாதனான சிவபெருமான். நாம் அவனிடம் வைத்திருக்கும் அன்பின் அளவையும் தன்மையையும் தெரிந்தே இருக்கிறான். அவன் தன்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர்க்கு விரும்பி அருள் செய்வான். அந்த சிவபெருமான் அருளே வடிவானவன்.

(கொழுந்து அன்பு செய்து – சுவாலிக்கும் அளவு மிகுதியான அன்பு செய்து)