சிறந்த ஏழு ஆசனங்கள்

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு
முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.    – (திருமந்திரம் – 563)

விளக்கம்:
பத்திராசனம், கோமுகாசனம், பத்மாசனம், சிங்காதனம், சொத்திராசனம், வீராசனம், சுகாசனம் ஆகிய ஏழு ஆசனங்களும் மேலானவை. இவற்றையும் சேர்த்து மொத்தம் நூற்று இருபத்தாறு  ஆசனங்கள் உண்டு.

பங்கயம் – பத்மாசனம்,  கேசரி – சிங்காதனம்


சிங்காதனம் செய்யும் முறை

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.    – (திருமந்திரம் – 562)

விளக்கம்:
முழந்தாளிட்ட நிலையிலே அமர்ந்து  கைகளை முன்னால் நீட்டி, விருப்பத்தோடு வாய் பிளந்த நிலையில், கண்களின் பார்வை மூக்கு நுனியை நோக்கி இருந்தால் அது சிங்காதனம் ஆகும்.

பாணி – கை,    அங்காந்து – வாய் பிளந்த நிலை,   கோதில் – குற்றம் இல்லாத


குக்குட ஆசனம்

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.   – (திருமந்திரம் – 561)

விளக்கம்:
இரண்டு பாதங்களையும் ஒரு சேர எதிர் தொடைகளின் மேல் வைத்து, முழங்கையை கீழே ஊன்றி, முயற்சி செய்து உடலை மேலே ஏற்றி, உடல் பாரம் கைகளில் தங்கும்படியாக செய்ய வேண்டும். இந்த நிலையில் அசையாமல் இருந்தால் அது குக்குட ஆசனம் ஆகும்.

பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி உடலை மேலே ஏற்றி அசையாமல் இருப்பது குக்குட ஆசனம்.

ஒக்க – ஒரு சேர,   ஊரு – தொடை,   முக்கி – முயற்சி செய்து,   துளங்காது – அசையாது


பத்திராசனம் செய்யும் முறை

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளி லங்கையை நீட்டி
உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே.   – (திருமந்திரம் – 560)

விளக்கம்:
சரியான முறையில் வலது பக்க காலை  இடது பக்க தொடையின் மேல் வைத்து, இரு கைகளையும் முழங்காலின் மீது நீட்டி இருக்க வேண்டும். அந்நிலையில் உடல்  நேராக நிமிர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். விருப்பத்துடன் இதைச் செய்தால் இது நன்மை தரும் பத்திராசனம் ஆகும்.

துரிசு – குற்றம்,   அங்கை – உள்ளங்கை,   உருசி – விருப்பம்,   செவ்வே – நேராக


பத்மாசனம் செய்யும் முறை

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.   – (திருமந்திரம் – 559)

விளக்கம்:
சுகாசன நிலையில் அமர்ந்து ஒரு காலை அணைந்தவாறு தொடையின் மேல் ஏற்றி, நன்றாகப் பற்றிக் கொண்டு இடது கால் வலது தொடையிலும், வலது கால் இடது தொடையிலுமாக வைத்து, அழகாக கைகளை மலர்த்தி தொடையின் மேல் வைத்தால், அது உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.

ஊரு – தொடை,     சீர் – அழகு,    பார் – உலகம்


சோர்வை நீக்கும் ஆசனம்

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.   – (திருமந்திரம் – 558)

விளக்கம்:
பத்மாசனம் முதலாக பல ஆசன முறைகள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசன முறைகள் முக்கியமானவை ஆகும். சோர்வு நீக்கும் சுவத்திகாசனம் அவற்றில் சிறந்த ஒன்றாகும். இந்த ஆசனத்தில் பொருந்தி இருந்தால் சிறந்தவன் ஆகலாம்.

கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் ஆசனவகை இது. சுவத்திகாசனத்தை சுகாசனம் எனவும் உரைப்பர்.

பங்கயம் – பத்மாசனம்,     சொங்கு – சோர்வு,    சுவத்திகம் – சுவத்திகாசனம்