திருமாலின் சக்கரம் வலுவிழந்த நேரம்

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே. – (திருமந்திரம் – 370)

விளக்கம்:
தக்கன் செய்த வேள்வியை அழித்த வீரபத்திரரின் தலை மீது திருமால் தனது சக்கரத்தை வீசினார். வீரபத்திரர் சிவபெருமானின் ஆணைப்படி போருக்கு வந்தவர் என்பதால், திருமாலின் சக்கரம் அவர் முன்பு வலிமை இழந்தது. வீரபத்திரரை அது காயப்படுத்தவில்லை.


திருமாலுக்கு தனது ஆற்றலில் பங்கு கொடுத்த சிவபெருமான்

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே. – (திருமந்திரம் – 369)

விளக்கம்:
சிவபெருமான் தனது பொறுப்பில் ஒரு பகுதியை திருமாலுக்குக் கொடுக்க முடிவு செய்தான். இந்த உலகைக் காக்கும் தன்மையை சக்கரத்திற்கு அளித்து, அந்தச் சக்கரத்தை திருமாலுக்கு அளித்தான். சக்கரத்தைத் தாங்கும் வலிமை தரும் பொருட்டு, தனது சக்தியின் ஒரு பகுதியை திருமாலுக்குக் கொடுத்தான். பிறகு தனது திருமேனியின் ஒரு பகுதியையும் திருமாலுக்குக் கொடுத்து அருளினான்.


திருமாலுக்கு வலிமை அளித்த சிவபெருமான்

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே. – (திருமந்திரம் – 368)

விளக்கம்:
தான் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு, திருமாலுக்குச் சக்கரத்தை அளித்தான் நம் சிவபெருமான். ஆனால் அந்தச் சக்கரத்தைத் தாங்கும் வலிமை முதலில் திருமாலுக்கு இல்லை. வலிமை வேண்டி திருமாலும் மிகுந்த விருப்பத்துடன் சிவபெருமானை வழிபட, நம் பெருமானும் திருமாலுக்குச் சக்கரத்தைத் தாங்கக்கூடிய வலிமையை அளித்து அருளினான்.


திருமாலுக்குச் சக்கரம் தந்த சிவபெருமான்

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதம் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே. – (திருமந்திரம் – 367)

விளக்கம்:
திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் நம் சிவபெருமான், பூமி முதலிய ஏழு உலகங்களைப் படைத்தான். அவற்றை நிலை நிறுத்தும் பொருட்டு திருமாலுக்குச் சக்கரம் தந்து அருளினான். இவ்வுலகில் உள்ள தீயவர்கள் அகங்காரத்தோடு தீச்செயல்களைச் செய்தால், திருமால் தனது சக்கராயுதத்தால் அவர்களை அழித்து, இவ்வுலகைக் காப்பான்.