தியானம் – ஆறு ஆதார நிலைகளில் ஐந்து வகை ஒளியைக் காணலாம்.

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.  –  (திருமந்திரம் – 610)

விளக்கம்:
தியானத்தின் போது ஆறு ஆதாரங்களில் தோன்றும் ஐந்து வகை அக்கினியின் ஒளியினால், அக இருள் நீங்கும். ஐந்து தன்மாத்திரைகளில் சிறந்ததாகிய சத்தம் ஒடுங்குமாறு தியானம் செய்தால், நமக்கெல்லாம் புகலிடமாகிய  ஈசன் திருவடியை அடையலாம்.

ஆறு ஆதார நிலைகள் – மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு. உள்ளங்கி (உள்ளொளி) ஐந்து – மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்கினி, கதிரவன் அக்கினி, திங்கள் அக்கினி. தன்மாத்திரைகள் ஐந்து – சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்.

அதிக்கின்ற – சிறக்கின்ற


தியானத்தில் பராசக்தியைக் காணலாம்

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.  –  (திருமந்திரம் – 609)

விளக்கம்:
தியானத்தின் போது உணரக் கூடிய  நுட்பமான பத்து ஓசைகள் – மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியயவை ஆகும். இவற்றையும் கடந்து செல்வதை தியானத்தின் நோக்கமாகக் கொள்வோம். அவ்வோசைகளின் முடிவிலே இருப்பவள் அன்னை பராசக்தி. நல்ல யோகம் இருக்கும் இடம் அதுவே. அங்கே நீலகண்டப் பெருமானைக் காணலாம்.


தியானம் செய்பவர்கள் கடவுளை வாசனையாக உணர்வார்கள்

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.  –  (திருமந்திரம் – 608)

விளக்கம்:
தியானத்தின் மூலம் ஈசனை உணர வல்லவர்கள், அந்த ஈசனின் இயல்பைப் பெறுவார்கள். அவர்களுக்கு தேவர்களின் நட்பு கிடைக்கும், அன்பின் இயக்கத்தையும் உயிராய் நிற்கும் நாதத்தையும் உணர்வார்கள்.  பூவிலிருந்து வெளிப்படும் நறுமணம் போல, ஈசனை அந்த நாதத்தில் உணரலாம்.


தியானத்தில் மனம் திடமாக இருக்க வேண்டும்

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே.  –  (திருமந்திரம் – 607)

விளக்கம்:
தியானத்தில் நிலைத்திருக்கும் போது மனம் திடமாக இருக்க வேண்டும். மனத்திடத்துடன் தியானம் செய்ய வல்லவர்களால் பெருவெளியில் அறிவுச்சுடராகப் பரவியிருக்கும் நம் சிவபெருமானின் திருவருளால் கடல், மேகம், யானை, வீணை,  சங்கு ஆகியவற்றின் ஓசைகளை தியானத்தின் போது கேட்க முடியும்.


தியானிப்பவர்களால் நுட்பமான ஒசைகளைக் கேட்க முடியும்

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.  –  (திருமந்திரம் – 606)

விளக்கம்:
தியானத்தில் நிலைத்திருக்கும் போது நுட்பமான ஓசைகளைக் கேட்க முடியும். அவை – மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகிய பத்து ஒலிகள் ஆகும். இவையெல்லாம் தியானத்தில் பணிந்திருந்தால் கேட்க முடியும்.


தியானத்தில் எண்ணங்களை நீக்குவோம்

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.  –  (திருமந்திரம் – 605)

விளக்கம்:
கண்கள் இரண்டின் பார்வையையும் மூக்கின் மேல் பகுதியாகிய புருவ மத்தியில் வைத்து, மூச்சுக்காற்றை உயர்ந்தெழுந்து வெளியே போகா வண்ணம் உள்ளே அடக்கி, துன்பம் தரும் எண்ணங்களை நீக்கித் தியானித்திருப்போம். அப்படி தியானம் செய்வதால் உண்டாகும் பயன் என்னவென்றால், இந்த உடலைப் பற்றிய பயம் நீங்கும்.

மனத்தில் எண்ணமில்லாமல் செய்து, புருவ மத்தியில் தியானித்திருந்தால் மரண பயம் இராது.


தியானம் பழகலாம் வாங்க!

நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ நாமே.  – (திருமந்திரம் – 604)

விளக்கம்:
இரு கண்களின் பார்வையும் நடு மூக்கை நோக்கி இருக்குமாறு நிறுத்தி தியானம் செய்யப் பழகினால், வாழ்வில் வருத்தத்திற்கு  இடம் இராது. இந்த உடலுக்கு அழிவிருக்காது. மனத்தின் ஓட்டம் அடங்கும். புற உணர்வு மங்கும். தான் என்ற அகங்காரம் அழியும். தேடுதல் நிற்கும். நாம் சிவனாகவே மாறி விடலாம்.


தியானத்தில் மனம் உள்நோக்கி இருக்க வேண்டும்

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.  –  (திருமந்திரம் – 603)

விளக்கம்:
மனத்தை வெளியே செல்ல விடாமல், உள் நோக்கு முகமாக வைத்துத் தியானித்திருந்தால், நம் உள்ளத்தில் ஒளி கலந்திருப்பதை கண்ணாடி பிரதிபலிப்பது போல் பார்க்கலாம். மனம் உள் திரும்பாமல் எண்ணாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தாலும், கண்ணுள் மணியும், அம்மணியுணர் அமிழ்தும் போன்ற சிவனைக் கண்டு அறிய முடியாது.

உண்ணாடி – உள் நாடி


வெளிச்சப் பூவே வா

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப்  பூவே.  –  (திருமந்திரம் – 601)

விளக்கம்:
நாம் நமது உடலைப் பற்றியே நினைக்கிறோமே தவிர, ஒரு பொழுதும் இந்த உடலோடு பொருந்தியுள்ள உயிரைப் பற்றி நினைப்பதில்லை. அவ்வுயிரினுள் உறையும் சிவனை நினைப்பதில்லை. அந்தச் சிவனின் மீது சிந்தையை நிறுத்தி தியானம் செய்யும் முறையையும் நினைப்பதில்லை. தியானத்தினால் காணக் கிடைக்கும் சந்திரன் போன்ற வெண்மையான ஒளியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லை.

நம் உயிரினுள் உறையும் சிவனின் மேல் சிந்தையை நிறுத்தி தியானம் செய்தால், சந்திரன் போன்றதொரு வெண்மையான ஒளியை உள்ளே உணரலாம்.

உன்னார் – நினைக்க மாட்டார்,  சந்திரப்பூ – சந்திரன் போன்ற வெண்மையான ஒளி


தியானத்தில் வான்கங்கையைக் காணலாம்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.   –  (திருமந்திரம் – 600)

விளக்கம்:
ஞானக்கண் கொண்டு உணரப்படும் அந்த சோதியில்  இரண்டு கண்களும் பொருந்தியிருக்குமாறு செய்து, புருவங்களுக்கு மத்தியில் சலனமில்லாமல் தியானம் செய்வோம். அவ்வாறு தியானித்திருந்தால் வான்கங்கை பாயும் அருள்வெளியைக் காணலாம். அவ்வெளியிலே மனம் ஓடினால் சுயம்புவான மூர்த்தியைக் காணலாம்.

புருவ மத்தியில் தியானம் செய்து அதிலே கலந்து விட்டால், அருட்பெருவெளி ஒன்றைக் காணலாம், அங்கே சிவபெருமானை தரிசிக்கலாம்.

ஒண்ணா நயனம் – ஒன்றான ஞானக்கண்,   விண்ணாறு – வான கங்கை,  பண்ணாமல் நின்றது – செய்யப்படாத சுயம்பு மூர்த்தி