இல்லறமும் கரையேறும் வழிதான்

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே. – (திருமந்திரம் –258)

விளக்கம்:
நிறைந்திருக்கும் வினைக் கடலில் இருந்து கரையேறி சோர்வு நீங்கப்பெற இரண்டு வழிகள் உண்டு. அழியாப் புகழுடைய அந்த சிவபெருமான், நமக்கும் நம்மை சேர்ந்தோர்க்கும் காண்பிக்கும் ஒரு வழி தவம், இன்னொரு வழி இல்லறம் ஆகும். இவை இரண்டுமே சிறப்புற நல்வழி நடந்தால் மறுமைக்கு பயன் தருவதாகும்.

(இளைப்பு – சோர்வு.  கிளை – உறவினர், தன்னை சார்ந்தவர்.  கேடில் புகழோன் – அழியாப் புகழ் உடையவன்)


அறிவுடையவர்கள் தவத்தின் வழியே செல்கிறார்கள்

தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. – (திருமந்திரம் – 257)

விளக்கம்:
அறிவை தெய்வமாக மதிக்கும் மனிதர்கள், தவத்தின் வழியிலே செல்கிறார்கள். நாமும் அவ்வழியிலேயே செல்வோம். நம்மில் பலர் நமது உடலையே தெய்வமாக, அதாவது முக்கியமாக நினைக்கிறோம். அப்படி நினைப்பவர்களுக்கு யமன் வந்து நான் தான் தெய்வம் என்று உணர்த்துவான்.

மான் – அறிவினால் பெரியவன்,    ஊன் – உடல்


தருமத்தின் அளவுக்கேற்றபடி ஈசன் அருள்வான்

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே. – (திருமந்திரம் – 256)

விளக்கம்:
முற்றும் துறந்தவர்க்கு தனியாக சுற்றம் என்று யாரும் இல்லை. உலகம் முழுவதும் அவர்களுக்கு சுற்றம் தான். இறந்தார் போல் வாழும் ஞானியர்க்கு இந்த உலக இன்பங்களில் நாட்டம் இராது. தன்னை மறந்தவர்க்கு ஈசன் துணையாக வர மாட்டான். செய்யும் தருமத்தின் அளவுக்கேற்றபடி ஈசன் வெளிப்பட்டு அருள்வான்.


யமனுக்கு கண்மண் தெரியாது

தன்னை அறியாது தான்நலர் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.  – (திருமந்திரம் – 255)

விளக்கம்:
வலிமை மிகுந்த யமன் நம்மைக் கவர வரும்போது, நம்மை யாரென்று பார்க்க மாட்டான். நாம் நல்லவனா கெட்டவனா என்பது பற்றிய கவலை அவனுக்குக் கிடையாது. நம்முடைய வறுமை பற்றி அவனுக்குத் தெரியாது. நம்முடைய வயதும் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் வலிமையைக் காட்டுவான். அந்த யமன் வருவதற்கு முன்பே நாம் ஆற்றலுடன் நல்ல தவத்தை செய்து புண்ணியத்தை தேடிக் கொள்வோம்.


அழுக்கினை ஓட்டி அறிவை நிறைப்பீர்

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.  – (திருமந்திரம் – 254)

விளக்கம்:
நம் வாழ்நாளில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மன அழுக்குகளை போக்கி அறிவைப் பெருக்கிக் கொள்ளாமல் இருக்கிறோம். செழிப்பாய் இருக்கும் காலத்தில் தருமமும் செய்வதில்லை. அறம் செய்யாமல் உயிர் வாழ்ந்து என்ன பயன்? இந்த உடல் எரிந்து அழியும் நேரத்தில் நமக்கென ஒரு புண்ணியமில்லாமல் என்ன செய்யப்போகிறோம்?

தருமம் செய்யாதவரை ஏழை நெஞ்சீர் என சொல்கிறார் திருமூலர்.

(தழுக்கிய – செழிப்பாய் இருந்த,  வெம்மை – தீ)


யாவர்க்கும் எளியது

யாவர்க்கு மாமிறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. – (திருமந்திரம் – 252)

விளக்கம்
யாவர்க்கும் எளியது இறைவனுக்கு கொஞ்சம் பச்சிலை சாத்தி வணங்குதல்.
யாவர்க்கும் எளியது பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தல்.
யாவர்க்கும் எளியது உணவுக்கு முன் ஒரு கையளவு தர்மம் செய்தல்.
யாவர்க்கும் எளியது பிறரிடம் இனிமையாய் பேசுதல்.


என்னை அறிந்தால்!

தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே. – (திருமந்திரம் – 251)

விளக்கம்:
தன் இயல்பை அறிந்தவர் சிவபெருமானின் திருவடியை வணங்குபவர் ஆவார். தன் இயல்பை அறிந்தவர் அற வாழ்க்கை மேற்கொள்வார். தன் இயல்பை அறிந்தவர் சில தத்துவங்களை உணர்ந்தவர் ஆவார். தன் இயல்பை அறிந்தவர்க்கு சிவனே நெருங்கிய உறவினன் ஆவான்.

தன்னை அறிந்து கொள்வதே ஆன்மிகத்தில் முக்கியமானதாகும்.