ஆகமங்களை விரும்பிக் கற்போம்

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 217)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இரு வேறு மலர்களின் வண்டுகளைப் போன்றவர்கள். அவர்களுடைய விருப்பங்களும் வேறு வேறாகவே இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். வேதங்களையும் சிவாகமத்தையும் புரிந்து கொண்டுக் கற்கிறார்கள். இதனால் அவர்களிடம் குண்டலினி சக்தியும் ஞான சக்தியும் மேம்பட்டு விளங்குகிறது.


அட்டாங்கயோகத்தில் சமாதியின் பலன்கள்

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.  –  (திருமந்திரம் – 639)

விளக்கம்:
பரம்பொருளான சிவபெருமானைச் சேர்ந்திருக்கும் நிலை சமாதி. அந்த சமாதி நிலையால் கிடைக்கும் பலன்கள் மேலானவை.

உடல், மனம், இந்த உலகம், செல்வம் ஆகியவை எல்லாம் மாயையின் தோற்றங்கள் என உணர்ந்து அவற்றை நாம் கடந்து விடலாம். மாயத்தோற்றத்திற்குக் காரணமான ஏழு தத்துவங்களும் நம் அறிவுக்கு விளங்கும். தொடர்ந்து கிளைத்து வரும் வினைகளுக்கிடையே ஒழுங்குடன் நின்று பரம்பொருளுடன் சேர்ந்திருக்கும் சமாதி நிலையால் கிடைக்கும் பலன்கள் இவை.


அட்டாங்கயோகத்தால் ஈசன் திருவடியை அடையலாம்

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.  –  (திருமந்திரம் – 638)

விளக்கம்:
சமாதி நிலையில் இருந்து தூங்க வல்லவர்கள், ஏழு உலகங்களிலிருந்தும் மனத்தை வாங்கி உள்நோக்கித் திருப்பும் பிரத்தியாகரத்தில் இருக்க வல்லவர்கள், அந்த நிலையிலே நிலையாக நிற்கும் தாரணையில் தேங்க வல்லவர்கள், உள்ளூறும் அமுதத்தை தியானத்தில் இருந்து தாங்க வல்லவர்கள், இவர்கள் எல்லோரும் எதை நோக்கித் தியானம் செய்கிறார்களோ அந்த நிலையை அடைவார்கள். அதாவது ஈசனின் திருவடியை அடைவார்கள்.


அட்டாங்கயோகம் தரும் பரிசு

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.  –  (திருமந்திரம் – 637)

விளக்கம்:
அட்டாங்கயோகம் நம்மை சரியான பாதையில் நடத்திச் செல்லும் வழிகாட்டி ஆகும். அட்டாங்கயோகத்தின் பலன் நம்மை நல்வழியை மட்டுமே நாடியிருக்கச் செய்யும். எமனிடம் அழைத்துச் செல்லும் தீய வழியில் செல்ல விடாமல் தடுக்கும். மேலும் நமக்குக் கிடைக்கும் குறைவில்லாத பரிசு என்னவென்றால், நமக்குத் தேவலோகத்தில் உள்ள எல்லா வழிகளும் பூலோகத்தைப் போல எளிதாகவே இருக்கும். அங்கே எட்டுத் திசைகளிலும் தங்கு தடை இன்றி சென்று வரலாம்.


இவனும் சிவனே என தேவர்கள் வாழ்த்துவார்கள்

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.  –  (திருமந்திரம் – 636)

விளக்கம்:
நாம் சிவகதி அடையும் காலத்தில் சிவலோகத்தின் காவலர்கள் ”யார் இவன்?” என தேவர்களிடம் விசாரிப்பார்கள். அப்போது அந்த அழகு மிக்க தேவர்கள் “அட்டாங்கயோகத்தில் நின்ற இவனும் சிவனே ஆவான்!” என வாழ்த்தி வரவேற்பார்கள். அந்த உலகத்தில் நம் இறைவனாம் திருநீலகண்டப் பெருமானைக் காணலாம்.


அட்டாங்கயோகத்தால் வானுலகில் வரவேற்பு கிடைக்கும்

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.  –  (திருமந்திரம் – 635)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் தொடர்ந்து நின்று யோகப் பயிற்சிகளைச் செய்பவர்கள், செம்பொன் ஒளியுடைய சிவகதியை அடையும் காலத்தில் வானவர்கள் பூரண கும்பத்துடன் வந்து எதிர்கொண்டு ‘நம் தங்கத் தலைவன் இவன்’ என வாழ்த்தி வரவேற்பார்கள்.  அந்த வானவர்களின் சேர்க்கை கிடைக்கப் பெற்று அவ்வுலத்தில் இன்பமாய் இருக்கலாம்.


தவத்தினால் தேவருலகின் செல்வன் ஆகலாம்

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.  –  (திருமந்திரம் – 634)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தன் மெய் வருத்தி ஆசனத்தில் அமர்ந்து தவம் செய்பவர்களை ’இவன் தேவர் உலகின் செல்வன்’ என தேவர்களின் தலைவர் இயம்புவார். அந்நேரம் முரசுகள் முழங்கும், புல்லாங்குழல் இசைக்கும். அந்த தேவர் உலகத்திலே ஈசன் அருளாலே நாம் இன்ப வாழ்வு பெறலாம்.


அட்டாங்கயோகத்தினால் மனத்தெளிவு பெறலாம்

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.  –  (திருமந்திரம் – 633)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தின் வழியில் சென்று, சிவபெருமானின் திருவடியைப் பற்றி, அவன் புகழைப் பாடி, நம் சிந்தையெல்லாம் அவன் திருவடியையே நாடி இருக்கச் செய்வோம். அப்படிச் சிந்தித்திருப்பவரை முனிவரெல்லாம் எதிர் கொண்டு அழைப்பர். மனத்தெளிவு பெற்று சிவபதம் அடைவது உறுதி.


அட்டாங்கயோகத்தின் பலன்

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.  –  (திருமந்திரம் – 632)

விளக்கம்:
சிவபெருமானுக்கு நாம் சூடும் மலர்கள் அவன் திருவடியை விரும்பிச் செல்கிறது. அது போல நம்முள்ளே வசிக்கும் குண்டலினி விருப்பத்துடன் சகசிரதளம் ஏறி சிவனடி சேரும் தன்மையுடையது. அட்டாங்க யோகம் அனைத்தையும் விரும்பி அதன் வழியில் நடப்பவர்கள் விண்ணுலகை அடைவார்கள். அவர்கள் விரும்பியதை எல்லாம் உமையுடன் மகிழ்ந்து நடனம் செய்பவனும், காளையை ஊர்தியாகக் கொண்டவனுமான நம் சிவபெருமான் அருள்வான்.

அட்டாங்கயோகத்தில் இருப்பவர்களுக்கு அந்தச் சிவபெருமான் வேண்டியதை எல்லாம் அருள்வான்.


சமாதியில் அறுபத்து நான்கு சித்திகள் கைகூடும்

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.  –  (திருமந்திரம் – 631)

விளக்கம்:
சமாதியில் இருப்பவர்களுக்குப் பல விதமான யோகங்கள் கைகூடும். அவர்கள் அறுபத்து நான்கு சித்திகள் கிடைக்கப் பெறுவார்கள். யோக நெறியில் நின்று இறைவனை அடைந்து விட்டவர்களுக்கு பிறகு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. ஏனென்றால் இறைவனை அடைந்தவர்கள் தாமும் சிவமாகி விடுவார்கள்.