பூ மேல் அமரும் காற்றைப் போல லேசாக உணர்வோம்

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனு மாமே – 772

விளக்கம்:
நம்முடைய ஒவ்வொரு மூச்சுக்காற்றும், தாமே அழிந்து வெளியேறுகிறது. மூச்சுக்காற்றின் இயக்கத்தை உற்று நோக்கி தியானித்து வந்தால், அம்மூச்சுக்காற்றினில் நாமே உறைவதை உணரலாம். அதை உணரும் போது நாம் பூமேல் இருப்பதைப் போல லேசாக உணரலாம், அதற்கான பயிற்சி தானே கிடைக்கும். நம்மை நாமே லேசாக உணரும் போது, இந்த உலகமே நம் வசப்படும்.


நம் மனம் பழைய ரேடியோ போல இரைச்சல் மிகுந்தது

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த வுணர்வது வாமே – 771

விளக்கம்:
நாம் சும்மா இருந்தாலும், நம்முடைய மனம் சும்மா இருப்பதில்லை. நம் மனம் இரைச்சல் மிகுந்தது, அது இது என்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறது. யோகப்பயிற்சியின் நோக்கம், நம் மனம் சத்தம் இல்லாமல் அமைதி ஆகிவிட வேண்டும் என்பதாகும். பொதுவாக, நம்முடைய தியான நிலையில், மனத்தில் பலவித எண்ணங்களுடன் ஈசன் ஆங்காங்கே தென்படுவான். மனத்தில் எண்ணம் இல்லாமல் ஓசை அடங்கியவர் ஈசனைப் பெரிதாக நினைப்பார்கள். ஈசனும் அவர்களின் நெஞ்சில் நிலையாக அமர்வான். தொடர்ந்த பயிற்சியால் எண்ணமெல்லாம் ஈசனே ஆவான்.


ஆயுளை பரீட்சிக்கும் முறை

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே – 770

விளக்கம்:
நம்முடைய ஆயுளுக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை நாமே ஒரு சிறிய சோதனை செய்து தெரிந்து கொள்ளலாம். அது பற்றி திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார் – நம்முடைய கையை எடுத்து நம் தலையின் மேல் வைத்து கவனித்துப் பார்க்க வேண்டும். கையில் கனமில்லாமல், வழக்கம் போல் சாதாரணமாக நாம் உணர்ந்தால், நம் ஆயுளுக்கு இப்போதைக்கு ஏதும் ஆபத்து இல்லை. கை கொஞ்சம் கனத்துத் தோன்றினால், நம்முடைய ஆயுள் இன்னும் ஆறு மாதங்களாகும். கை மிகவும் கனத்து மிகுந்த எடையுடன் தோன்றினால், ஆயுள் இன்னும் ஒரு மாதமாகும்.