மரண நேரத்தில் பயமில்லாமல் இருக்கலாம்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ து அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. – (திருமந்திரம் – 186)

விளக்கம்:
நம்முடைய இறுதி நாள் என்பது நம் முதுமைக் காலத்தில் தான் வரும் என்று எந்தக் கணக்கும் கிடையாது. மரணம் எந்த நேரத்திலும் வரலாம், அப்போது நம் இளமை இன்னும் மிச்சம் இருக்கலாம். அதனால் நாம் நம் இளமைக் காலத்தில் இருந்தே அந்த ஈசனைப் புகழ்ந்து பாடி வணங்குவோம். அந்நேரத்தில் மரணம் வந்தால் கூட, நம்மை இந்த உலகத்தில் இருந்து யாரோ தூக்கி எறிவது போன்ற உணர்வு தோன்றாது. மரண நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பயமில்லாமல் பார்க்கலாம்.


தேயும் நிலா சொல்லும் பாடம்

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. – (திருமந்திரம் – 185)

விளக்கம்:
பதினாறு கலைகளும் நிரம்பப்பெற்ற பூரணச்சந்திரன், மறுநாளே தேய்ந்து குறைந்து போவதைப் பார்த்தும் நம் இளமை நிலையில்லாதது என்பதை உணர மறுப்பவர்கள் நீசர்கள். அவர்களை சினம் கொண்ட காலன் மறுபடியும் ஒரு கருப்பையில் வைப்பான். மனமயக்கம் நீங்காத அவர்கள் வேறு வழியில்லாமல் அந்தக் குழியில் போய் விழுவார்கள்.


திருமந்திரத்தை ரீமேக் செய்த ஔவையார்

முப்பதாம் வயது எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லும் ஒரு திருமந்திரப் பாடலை பிற்காலத்தில் ஔவையார் ரீமேக் செய்துள்ளார்.

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

என்பது திருமூலரின் பாடல்.

நாட்களையும் மாதங்களையும் நாம் கணக்கிடுவது, இந்த உலகத்துக்குள்ளேயே இருக்கும் குளிர்ந்த சந்திரனையும் வெப்பமான சூரியனையும் கொண்டுதான். அது போல நம் உடலில் சந்திரகலை, சூரியகலை ஆகியவை உள்நின்று நமது ஆயுளை அளக்கின்றன. ஒருவர் தன்னுடைய முப்பதாவது வயதில் ஆன்மிகத்தில் விருப்பத்துடன் ஈடுபட ஆரம்பித்தால், அவர் தன் வாழ்நாள் முடிந்த பிறகு விண்ணுலகத்தை அடையும் பேறு பெறுவார். மற்றவர்களெல்லாம் மறுபிறவி என்னும் சுழற்சியிலேயே சிக்குவார்கள்.

இதே விஷயத்தை ஔவையார் நல்வழியில்

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

என்று பாடியிருக்கிறார். “ ஒரு பெண்ணிற்கு முப்பது வயதில் இருக்கும் மார்பின் அளவுதான் அவளது முதுமையிலும் இருப்பதைப் போல, முப்பது வயதில் கற்கும் கலைகள் தான் முதுமை வரை வரும். அதனால் நாம் முப்பது வயதில் மூவாசைகளையும் ஒழித்து பரம்பொருளை நாடி தனக்குள் பெற வேண்டும்.” என்று சொல்கிறார்.

இதற்கு அடுத்த பாடலிலேயே திருமூலரைப் புகழ்ந்தும் பாடியுள்ளார். “திருக்குறள், நான்கு வேதங்கள், தேவாரம், திருவாசகம் – ஆகிய இவை யாவும் திருமூலரின் ஒரு வாசகத்திற்குச் சமம்.” என்கிறார்.


முப்பது வயது முக்கியமானது

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. – (திருமந்திரம் – 184)

விளக்கம்:
நாட்களையும் மாதங்களையும் நாம் கணக்கிடுவது, இந்த உலகத்துக்குள்ளேயே இருக்கும் குளிர்ந்த சந்திரனையும் வெப்பமான சூரியனையும்  கொண்டுதான். அது போல நம் உடலில் சந்திரகலை, சூரியகலை ஆகியவை உள்நின்று நமது ஆயுளை அளக்கின்றன. ஒருவர் தன்னுடைய முப்பதாவது வயதில் ஆன்மிகத்தில் விருப்பத்துடன் ஈடுபட ஆரம்பித்தால், அவர் தன் வாழ்நாள் முடிந்த பிறகு விண்ணுலகத்தை அடையும் பேறு பெறுவார். மற்றவர்களெல்லாம் மறுபிறவி என்னும் சுழற்சியிலேயே சிக்குவார்கள்.


ஐந்து பறக்கும் மிருகங்கள்

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. – (திருமந்திரம் – 183)

விளக்கம்:
ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் ஆகியவற்றை ஐந்து பருத்த ஊசிகள் என்று சொல்கிறார் திருமூலர். இந்த ஐந்து ஊசிகளும் நம் உடல் என்னும் தோல்ப் பைக்குள் வாழ்கின்றன. இந்த ஐந்து ஊசிகளும் பறக்கும் தன்மை கொண்ட மிருகங்களாகும். ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை தளர்ச்சி அடையும் போது, அந்த ஐந்து பரு ஊசிகளும் வெளியே பறந்து சென்று விடும். இந்தத் தோல்ப் பையும் கூடவே பறந்து விடும். அதனால் ஐம்பொறிகள் ஆரோக்கியமாக இருக்கும் இளமைக் காலத்திலேயே அந்த ஈசனை நினைத்து அவனைச் சார்ந்திருப்போம்.


வாழ்நாளை வீணாக்க வேண்டாமே!

காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே. – (திருமந்திரம் – 182)

விளக்கம்:
தினமும் காலையில் எழுகிறோம். மாலையில் உறங்கச் செல்லும்போது, ஒருநாள் நிறைவடைந்து, நமது வாழ்நாளில் ஒரு நாள் குறைகிறது. இதை உணர்ந்து, நாம் நமது வாழ்நாளை வீணாக்காமல், அந்த ஈசனை நினைத்து அவனைச் சார்ந்திருப்போம். அந்த ஈசன் கோபம் கொண்டவன் என்றாலும், தன்னை உணர்வுபூர்வமாக நினைப்பவர்களுக்கு இன்பம் அளிக்கிறான்.


திருவடியிலே விழுந்து கிடக்க விரும்புகிறேன்

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்துஅண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே.. – (திருமந்திரம் – 181)

விளக்கம்:
நம் வாழ்நாளில் மூன்று பருவங்களைக் கடக்கிறோம். பாலன், இளைவன், முதியவன் ஆகிய இந்தப் பருவ மாற்றம் சொல்லும் சேதியை நாம் உணர்வதில்லை. எந்தப் பருவத்திலும் நாம் நின்று விட முடியாது, நம்மை அறியாமலே அடுத்தப் பருவத்திற்கு சென்று விடுகிறோம். இதை உணர்ந்த நான், இந்த பூமி மட்டுமில்லாமல் எல்லா உலகத்திலும் ஊடிப் பரவியிருக்கும் அந்த ஈசனின் திருவடியிலேயே மேலும் மேலும் விழுந்து கிடக்க விரும்புகிறேன்.


இளமையில் கரும்பு, முதுமையில் எட்டிக்காய்

விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. – (திருமந்திரம் – 180)

விளக்கம்:
அது ஒரு காலம். அப்போது நான் இளமையாக இருந்தேன். மெல்லிய இயல்பு கொண்ட பெண்கள் என்னை இனிதாக விரும்புவார்கள். எந்த அளவு இனிமையாக என்றால், கரும்பைப் பிழிந்து அதன் கடைசிச் சாறையும் பிழிந்து எடுத்தால் எவ்வளவு இனிமை இருக்குமோ அவ்வளவு இனிமை. மெல்லிய அரும்பு போன்ற முலைகளைக் கொண்ட அந்தப் பெண்களுக்கு அப்போது கரும்பாக இனித்தேன். இப்போது என் இளமை போன பிறகு அவர்களுக்கு நான் எட்டிக்காயாக கசக்கிறேன்.


இளமை அது போனா திரும்பாது

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே. – (திருமந்திரம் – 179)

விளக்கம்:
நம்முடைய இளமை நாள்தோறும் தேய்ந்து அழியும் தன்மை கொண்டதாகும். இளமை குறுகி ஒழிந்தபின் முதுமையில் செயற்கரிய செயல்கள் செய்வது கடினமானது. தன்னுடைய சடையில் பாயும் தன்மை கொண்ட கங்கையை படர விட்டிருக்கும் சிவபெருமானை கூர்ந்து நினைத்து, அவன் நினைவில் பொருந்திக் கொள்வோம், உயிர் உள்ள போதே.

ஆன்மிக விஷயங்களில் அடியெடுத்து வைக்க இளமைப் பருவமே பொருத்தமானது.

கடைமுறை – முடிவில்,  ஆய்ந்து – குறுகி,  உற்று – கூர்ந்து,  ஓர்ந்து – நினைத்து


எவ்வளவு ஆயுள் கிடைத்தாலும் நாம் விளக்கின் சுடரை அறிவதில்லை

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.   – (திருமந்திரம் – 178)

விளக்கம்:
நம் வாழ்நாளில் பல ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆயினும் அப்பனாகிய ஈசனை நம் மனம் இன்னும் நாடவில்லை. சிவ போதத்தில் புகுந்து அவனை அறியவும் இல்லை. நமக்கு நீண்ட ஆயுள் கிடைத்தும், அது நீட்டிக்கப் பெற்றும் தூண்டு விளக்கின் சுடராய் விளங்கும் ஈசனை அறியாமல் இருக்கின்றோமே!