சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. – (திருமந்திரம் – 125)
விளக்கம்:
உடல் இருக்கும் போதே சிவலோகத்தை இங்கே கண்டவர்கள் சித்தர் ஆவார்கள். அவர்கள் சத்தங்களையும், சத்தங்களின் முடிவையும் தம்முள்ளே காண்பார்கள், அதாவது சத்தங்களைக் கடந்து அமைதியான நிலையை அடைவார்கள். அவர்கள் என்றும் அழிவில்லாதவராக, குற்றமில்லாத தூயவராக, நோய் ஏதும் இல்லாதவராக, தொடர்ந்து நீளும் முத்தி நிலையை அடைவார்கள். அவர்கள் முத்திக்கு வழியாக உள்ளது முப்பத்தாறு தத்துவங்கள் ஆகும்.
முப்பத்தாறு தத்துவங்கள் – ஆன்ம தத்துவம் – 24, வித்தியா தத்துவம் – 7, சிவ தத்துவம் – 5.