ஞானம் தரும் நந்தி!

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.   – (திருமந்திரம் –142)

விளக்கம்:
ஞானத்தை தரும் புண்ணிய வடிவான எங்கள் நந்தியம் பெருமானை புத்தியில் வைத்து வழிபடுவர் புண்ணியர் ஆயினர். அவர் தம் வாழ்நாள் முடிந்த பின்னர் விண்ணை அடைந்து நாதனான சிவபெருமானின் நடனத்தை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து, அப் பெருமானை நோக்கி வேதம் துதித்திடுவார்.

(போதம் – ஞானம், அறிவு.   நயனம் – கண்)


திருவடி ஞானம்

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே.  – (திருமந்திரம் –141)

விளக்கம்:
நான் எப்போதும் சேர்ந்திருப்பது நந்தியம்பெருமானின் திருவடியை. என் நினைவில் எப்போதும் இருப்பது அப்பெருமானின் திருமேனி. நான் வணங்குவதும், பெயர் சொல்லித் துதிப்பதும் நந்தியின் திருநாமத்தை. என் அறிவில் நிலைத்து நிற்பது நந்தியின் திருவடி பற்றிய ஞானமே!


புலன்கள் எல்லாம் நம் வசமாகும்

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.  – (திருமந்திரம் –140)

விளக்கம்:
நம் தலைவனான சிவபெருமானை விருப்பத்தோடு சந்தித்தால், புலன்கள் ஐந்தும் நம் வசம் ஆகிவிடும். ஆசையின் வசம் இருந்து புலன்கள் விடுபட்டு உள்முகமாகத் திரும்பும்.

புலன்களை அடக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. சிவபெருமானின் தரிசனம் கிடைத்தால் அதெல்லாம் தானே நடக்கும்.


குருவே சரணம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.  – (திருமந்திரம் –139)

விளக்கம்:
குருவை நேரில் பார்த்தால் நமக்கு மனத்தில் தெளிவு உண்டாகும். குருவின் பெயரை உச்சரித்தாலும் தெளிவு உண்டாகும். குரு சொல்லும் வார்த்தைகள் தெளிவு தரக்கூடியவை. குருவின் உருவத்தை நினைத்துப் பார்த்தால் கூட தெளிவு கிடைக்கும்.


சிவலோகம் அவன் திருவடியில்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.  – (திருமந்திரம் –138)

விளக்கம்:
ஆராய்ந்து பார்த்தால், சிவனின் திருவடியே சிவம் என்பது நமக்குப் புரியும். இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் திருவடியே சிவலோகம் என்பதும் புரியும். சொல்லப் போனால் திருவடியே மோட்சத்திற்குரிய வழியாகும். உள்ளம் தெளிந்தவர்க்கு சிவனின் திருவடியே புகல் இடம் ஆகும்.

(தேரில் – ஆராய்ந்தால்)


திருவடியை உறுதியாகப் பற்றுவோம்

அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. – (திருமந்திரம் – 137)

விளக்கம்:
சிறு அணுவாகிய நாம், படைப்பு அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த சிவபெருமானின் திருவடியைக் கண்டாலும், அங்கே நிலை கொண்டு தங்குவதில்லை. நமக்கு அவன் திருவடியை விட்டால் வேறு போக்கிடம் ஏது?   தன் உடலில் நிற்கும் உயிர் கடைசியாகச் சேரும் இடம் எதுவென்று உணர்ந்து கொள்பவர்கள், இறைவனின் திருவடியை  உறுதியாகப் பற்றிக் கொள்வார்கள்.

https://www.youtube.com/watch?v=xL9omtbwqcw


நாமெல்லாம் உப்பு பொம்மைகள்

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. – (திருமந்திரம் – 136)

விளக்கம்:
கடல் நீரில் உள்ள உப்புத் தன்மை சூரியனின் வெப்பத்தினால் உப்பு என்கிற பெயருள்ள உருவம் பெறுகிறது. அந்த உப்பு மறுபடியும் நீரில் கலக்கும் போது நீரோடு நீராக மாறி விடும். அது போலவே நம்முடைய சீவனும் சிவத்தினில் இருந்து உருவம் பெற்று வந்துள்ளது. நமது ஆயுள் முடியும் போது, நாம் மறுபடியும் சிவத்தினுள் கலந்து விடுவோம் .


நமக்கு வேறு போக்கிடம் கிடையாது

சத்தமுதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடறிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.   – (திருமந்திரம் – 135)

விளக்கம்:
பஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய உடல், ஐந்து தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றைச்  சார்ந்திருக்கின்றன. ஆனால் நமது ஆன்மாவிற்கு பரமாத்மாவான சிவனை விட்டால் சேர்விடம் வேறு ஏது? சுத்தமான பரவெளியில் நம்முடைய ஆன்மா என்னும் சுடர், பேரொளியாகிய அந்த சிவனைச் சேரும். இதைப் புரிந்து கொண்டு, அந்த சிவனது அருட்கடலில் நாம் கலந்திருப்போம்.

நம்முடைய உடல் தன்னுடைய மூலமான ஐம்பூதங்களைச் சார்ந்திருக்கிறது. அது போல நம்முடைய ஆன்மா, தன்னுடைய மூலமான பரமாத்மாவை சார்கிறது.


உபதேசம் பெற தெளிந்த மனம் அவசியம்

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.   – (திருமந்திரம் – 134)

விளக்கம்:
குற்றம் இல்லாத பாலில் நெய் கலந்திருப்பதைப் போல, அலையற்ற மனத்தில், குருவாகிய ஆசிரியர் சொல்லும் உபதேசம் பேதமில்லாமல் நிறைந்து நிற்கும். பேச்சற்ற மவுன நிலையில் நாம் அதை உணரலாம். உபதேசப் பொருளை உணர்ந்தோர்க்கு உடம்பு இங்கு அழிந்தாலும், கரையற்ற சோதியாம் மெய்ப்பொருளில் கலந்து விடலாம்.

குழப்பம் இல்லாத தெளிந்த மனத்தில் குருவின் உபதேசம் நன்றாக பதியும். உபதேசப் பொருளை நன்கு உணர்ந்தவர்கள் தன் வாழ்நாள் இறுதியில் மெய்ப்பொருளாம் சிவசோதியோடு கலந்து விடுவார்கள்.

(புரை – குற்றம்,   திரை – அலை,   ஆரியன் – குரு, ஆசிரியர்,    உரையற்று – பேச்சற்று,   சத்து – மெய்ப்பொருள்)


ஒருமையுள் ஆமை போல!

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. – (திருமந்திரம் – 133)

விளக்கம்:
சிவபெருமான் பக்தர்களாகிய நம் பெருமைகளையும், சிறுமைகளையும் அறிந்து கொள்வதில் வல்லவர். பெருமை உடையர்க்கு எளிதாகக் காட்சி தருகிறார், சிறுமை உடையவர்க்கு அரிதாகக் காட்சி தருகிறார். உடல் உறுப்புக்களை  தனது ஓட்டிற்குள் அடக்கிக் கொள்ளும் ஆமை போல, ஐந்து புலன்களையும் உள்ளடக்கி இருப்பவர்கள், இந்த உலகிலும், மறு உலகிலும் இன்பம் அடைந்து, குற்றமற்றவர்களாக இருப்பார்கள்.