அன்பிருக்கும் இடத்தில் சிவன் இருப்பான்

அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. – (திருமந்திரம் – 279)

விளக்கம்:
இறைவன் நமக்கு உள்ளேயும் இருக்கிறான், வெளியேயும் இருக்கிறான். நமக்குள்ளே அன்பே வடிவாய் இருக்கிறான். அவன் நமது உடலாகவும் இருக்கிறான். இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே அவன் இருக்கிறான். அவன் முனிவர்களுக்கெல்லாம் தலைவன். அன்பிருக்கும் இடத்தில் எல்லாம் அவன் இருப்பான். அன்பிருப்பவர்களுக்கு அவன் என்றும் துணையாக இருக்கிறான்.


எல்லாம் தெரிஞ்சவங்க இப்படி பண்ணலாமா?

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே. – (திருமந்திரம் – 278)

விளக்கம்:
இறைவன் நமது வினைகளுக்கு ஏற்ப பிறப்பையும் இறப்பையும் வைத்ததன் காரணத்தைப் புரியாதவர்களை விடுங்கள். அதைப் புரிந்தவர்களும் உலக போதத்திலே தான் ஆசை கொள்கிறார்கள். நம் இறைவனான சிவபெருமானை ஆசையுடன் நாடிச்சென்று வணங்குவதில்லை.


அன்பினால் விருத்தி கிடைக்கும்

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. – (திருமந்திரம் – 277)

விளக்கம்:
உருக்கும் போது ஒளிரும் செம்பொன் போன்ற ஒளி வடிவானவன் இறைவன். அவனை நம் நினைவில் இருத்தி எப்போதும் வணங்கி இருப்போம். அன்பு கொண்டு சிவனருளை யார் வேண்டினாலும், அவன் விருத்தி கொடுப்பான்.


உலகைப் படைத்தவன் இன்பத்தையும் படைத்திருக்கிறான்

முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே. – (திருமந்திரம் – 276)

விளக்கம்:
நமக்கெல்லாம் மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது இந்த வாழ்வினை நடத்துவதற்கு. இந்த உலகத்தைப் படைத்த இறைவன் இன்பங்களையும் படைத்திருக்கிறான் என்பதை நாம் அறியவில்லை.  அந்த இறைவனிடம் அன்பு கொள்ளவும் நமக்குத் தெரியவில்லை. அகண்ட உலகமாய் உள்ள இறைவன் அன்பையும் படைத்திருக்கிறான். அன்பினாலே நம் துயரமெல்லாம் நீங்கும்.


ஒரு முறை வணங்கினாலும் என்றும் துணையாய் வருவான்

தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே. – (திருமந்திரம் – 275)

விளக்கம்:
சிவபெருமானை சுயம்பு என்று உணர்ந்து அவனைச் சில காலமே நாம் வழிபட்டாலும், அவன் வானம் உள்ள காலம் வரைக்கும் நமக்கு வழித்துணையாய் நிற்பான். தேன் போன்ற மொழி பேசும் உமையை தன்னொரு பாகத்தில் கொண்டவனும், கொன்றைப்பூவை அணிந்திருப்பவனுமாகிய சிவபெருமான் என் அன்பில் அழகுற நின்றானே!


திருமூலருக்குக் கிடைத்த அருள் நமக்கும் கிடைக்கும்

என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே. – (திருமந்திரம் – 274)

விளக்கம்:
திருமூலர் தன்னைப் போலவே உள்ளம் உருக இறைவனை வழிபடச் சொல்லி நமக்கு உபதேசிக்கிறார்.

முதலில் நாம் அன்பு உருக அந்த முதல்வனை நாடுவோம். பிறகு அந்த பெருமைக்குரிய நந்தி பெருமான் தன் அன்பால் உருகி நமக்குத் தோன்றுவான். அவன் திருமூலருக்கு அருளியது போலவே நமக்கும் அருள் செய்வான்.


துன்பத்திலும் அன்பு மாறாதிருக்க வேண்டும்

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே. – (திருமந்திரம்-272)

விளக்கம்:
இந்த வாழ்க்கையில் நாம் படுகின்ற துன்பத்தால் நம்முடைய எலும்புகள் எல்லாம் விறகாக எரிவது போல் இருக்கிறது. அந்த வெப்பத்தில் தசைகளெல்லாம் அறுபட்டு கனலில் வறுபடுவது போல தோன்றுகிறது. அப்படிப்பட்ட கடுமையான துன்பத்திலும் இறைவனை நினைத்து அன்போடு மனம் உருகி நெகிழ்பவர்களாலேயே அவனை அடைய முடியும். சிறு துன்பத்துக்கே மனம் துவண்டு விடும் என்னால் அவனை அடைய முடியாது.


பின்னிக் கிடப்பேன் பேரன்பிலே

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. – (திருமந்திரம்-271)

விளக்கம்:
பொன்னை விடப் பிரகாசிக்கும் புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான்.  அவன் மின்னி மிளிரும் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பவன். நெற்றியில் எப்போதும் திருநீறுடன் இருப்பவன், கூத்தாடுபவன். பேரன்பினாலே அவன் நினைவில் பின்னிக் கிடந்தேனே!

(துன்னி – பொருந்தியிருக்கின்ற,  சுடுபொடி – திருநீறு).


அன்பே சிவம்

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. – (திருமந்திரம்-270)

விளக்கம்:
அன்பும் சிவமும் வேறானவை என்று ஒருவர் சொன்னால், அவர் ஒன்றும் அறியாதவர் ஆவார். அன்புதான் சிவம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வதில்லை. அன்புதான் சிவனை அறியும் வழி என்பதை ஒருவர் அறிந்தபின், அவர் அன்பானவராய் இருப்பார், சிவத்தன்மை அடைவார்.


அற்பர்களைப் போற்ற வேண்டாம்

செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. – (திருமந்திரம் – 269)

விளக்கம்:
ஒரு வில் வீரனுடைய குறி இலக்கை நோக்கியே இருப்பது போல, நமது நோக்கம் வீடுபேறு அடைவதாக இருக்க வேண்டும். வீடுபேறு அடைவதற்காக நாம் இறைவனைத் துதிப்போம். தர்ம சிந்தனை இல்லாத செல்வந்தர்கள் அற்பர்கள். பணத்துக்காக அவர்களைப் போற்றிப் புகழ்ந்து, பிறகு வருத்தத்தில் வாட வேண்டாம்.