கேள்விப்படாத பூ ஒன்று உண்டு!

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே – 844

விளக்கம்:
பரியங்கயோகத்தினால் கிடைக்கும் முக்கிய பலன் என்னவென்றால், நம் தலை உச்சியின் சகசிரதளத்தில் சிவ சக்தி சேர்க்கையினால் அங்கே ஆயிரம் இதழ் கொண்ட தாமரை ஒன்று மலர்வதை நாம் உணரலாம். நாம் இதுவரை கேள்விப்படாத அந்த தாமரை மலர நிலமும் தேவையில்லை, நீரும் தேவையில்லை. அத்தாமரைக்கு அரும்புமில்லை, வேருமில்லை. சூரிய ஒளியோ சந்திர ஒளியோ இல்லாமலேயே ஒளி வீசும் தன்னொளி கொண்டது, நமது தலை உச்சியில் உள்ள சகசிரதள தாமரை. அந்தத் தன்னொளிக்கு கீழ் திசை என்பதோ மேல் திசை என்பதோ கிடையாது, முழுமையான ஒளி அது.

பங்கயம் – தாமரை, தார் – அரும்பு, ஊர் – சூரிய ஒளி


இதம் தரும் பராசக்தி

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே – 843

விளக்கம்:
ஒரு சுழலின் உள்ளே அகப்பட்டாற் போல, யோக நிலையின் கும்பகத்தில் நின்று தன்னைத் தானே ஆகுதி செய்யும் யோகிகளுக்கு முதுமை என்பதே கிடையாது. கறுத்த தலைமயிருடன் எப்போதும் இளமையாக இருப்பார்கள். நம்முள்ளே குடியிருக்கும் பராசக்தி என்றும் நமக்கு துணை இருந்து இதம் தருவாள். நம்முடைய யோகநிலையின் பக்குவம் அறிந்து, நம்மை இந்த உலக பந்தத்தில் இருந்து விடுவிப்பாள்.

உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு), ஒரு சுழி – சுழல் போன்ற ஒரு ஆன்மிக நிலை, கதம் – ஓட்டம், பதம் – பக்குவம்


தன்னைத் தானே ஆகுதி செய்தல்

வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம்
ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே – 842

விளக்கம்:
பிராணாயாமப் பயிற்சியில் பூரகம், ரேசகம் ஆகியவற்றிற்கு இடையே நன்றாக இழுத்த மூச்சை கும்பகத்தில் நிறுத்தும் உபாயம் அறிந்தவர் இங்கு மிகவும் குறைவு. மூச்சை நன்கு உள்ளே இழுத்து கும்பகத்தில் நிறுத்தும் உபாயம் அறிந்து, அதனைப் பயிற்சி செய்பவர் உயர்ந்த நிலையை அடைந்து, தன்னைத் தானே சிவபெருமானுக்கு ஆகுதி செய்கிறார்.

வாங்கல் – பூரகம் என்னும் மூச்சை உள்ளிழுத்தல், இறுதல் – ரேசகம் என்னும் மூச்சை வெளியே விடுதல், வீங்க வலிக்கும் – மூச்சை நன்றாக இழுத்து கும்பகத்தில் நிறுத்துதல், விரகு – உபாயம், உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு)


மின்னிடையாளும் மின்னாளனும்!

மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே – 841

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, மின்னிடையாளான பராசக்தியையும் மின்னாளனான சிவபெருமானையும் துவாதசாந்த வெளியில் கூடச் செய்வோம். அந்நிலையில் நம் மனத்தை சிரசின் மேலேயுள்ள துவாதசாந்த வெளியில் நிலையாக நிறுத்தி தொடர்ந்து தியானம் செய்தால் இந்த உலகத்தில் நாம் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

மின்னிடையாள் – பராசக்தி, மின்னாளன் – சிவபெருமான், பொன்னிடை வட்டம் – துவாதசாந்தம்


மின்னிடையாள்!

மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே – 840

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, மேலாந்தலமான துவாதசாந்தம் என்னும் வெளியை அறிவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு முன்பு இந்நிலையை அறிந்தவர் யாரெல்லாம் என்று பார்த்தால் – திருமால், பிரமன், நந்திதேவர் ஆகியோர் ஆவர். இதிலிருந்தே நாம் பரியங்கயோகத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். யோகத்தின் உயர்நிலையான துரியநிலையின் நடு நாயகரான சிவபெருமான் நம்முடைய பரியங்கயோக சிரத்தையை உணர்வார், தம்முடன் சேரும் மின்னிடையாளான பராசக்தியிடம் நம்முடைய யோகப்பயிற்சியின் மேன்மையை எடுத்துச் சொல்வார். இதனால் நமக்கு சிவபெருமான் அருளுடன், பராசக்தியின் அருளும் கிடைக்கும்.

மேலாந்தலம் – சிரசின் உச்சியில் விளங்கும் துவாதசாந்தம், மால் – திருமால், திசைமுகன் – பிரமன், நாலாம் நிலம் – துரியம், மின்னிடையாள் – பராசக்தி


ஆலம் கடந்த சிவபெருமானை நினைப்போம்

நாலும் கடந்தது நால்வரும் நால்அஞ்சு
பாலம் கடந்தது பத்துப்பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்துஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்றுஆர் ஆரறிவாரே – 745

விளக்கம்:
இதுவும் காலச்சக்கரம் பற்றிய பாடல். காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது, நாம் அதை உணர்ந்து யோக வழியில் செல்லாமல், இன்னும் நிறைய காலம் மீதம் இருப்பதாக நினைத்து காலம் கடத்துகிறோம்.

நான்கு வயதைக் கடந்தோம், அதைச் சிறு வயது என்று விட்டு விடலாம். பாலன் எனச் சொல்லப்படும் பத்துப் பதினைந்து வயதைக் கடந்தோம், அப்போதும் நாம் யோகத்தைத் தொடங்கவில்லை. அழகிய கோலம் கொண்ட இளமைக் காலத்தையும் கடந்து விட்டோம், இன்னும் நாம் ஆலம் கடந்த அந்த சிவபெருமானை உணர்ந்து அறியவில்லை.


நாள் தவறாமல் யோகம் செய்வோம்

மனைபுகு வீரும் அகத்திடை நாடி
என இருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு
வினைஅறி ஆறும் விளங்கிய நாலே – 744

விளக்கம்:
நம் மனம் புற உலகில் அலைவதை நிறுத்தி, அகத்தை நாடி, மனத்தை உள்ளே செலுத்தி யோகப்பயிற்சி செய்வோம். வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களும், மாதத்தின் 30 நாட்களும், அதாவது நாள் தவறாமல் யோகப்பயிற்சி செய்து வந்தால், தன்னை அறியலாம். தன்னை அறிவதால் ஆறு ஆதாரங்களிலும் யோகநிலையில் பொருந்தி இருந்து சிவம், சக்தி, நாதம், விந்து ஆகியவற்றைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

இருபத்தஞ்சு – இரு + பத்தஞ்சு (முப்பது நாட்கள் – 1 மாதம்),  ஈராறு – ஈர் + ஆறு (பன்னிரெண்டு மாதங்கள்), ஏற அட்டுதல் – கூடச் சேர்த்தல், தற்குறி ஆறு – ஆறு ஆதாரங்கள்


பயிற்சி தொடங்க ஆகாத நாட்கள்

திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – 743

விளக்கம்:
யோகப்பயிற்சி தொடங்க கீழ்கண்ட நாட்களைத் தவிர்த்தல் நலம்.

பிறந்த நட்சத்திரம் வரும் நாள் மற்றும் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் எட்டாவது நட்சத்திரம் வரும் நாட்கள். மற்ற நாட்களில் இருந்து சிறந்த ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து யோகப்பயிற்சியைத் தொடங்கலாம்.


வயது என்பதே இல்லாமல் இருக்கலாம்

அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண்டு என்பது
எழுகின்ற ஈரைம்பது எண்அற்று இருந்தே – 742

விளக்கம்:
நம்முடைய வாழ்நாளை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இருபத்து எட்டு வயது வரைக்கும் முதல் பகுதி, முப்பத்து மூன்று வயது வரைக்கும் இரண்டாம் பகுதி, அறுபத்து இரண்டு வயது வரைக்கும் மூன்றாம் பகுதி, நூறு வயது வரைக்கும் நான்காம் பகுதியாகும். யோகத்தில் நின்று சகசிரதளத்தில் சிவபெருமானைக் கண்டவர்கள், மேற்கண்ட நான்கு பகுதிகள் எதிலும் அடங்க மாட்டார்கள். அவர்கள் காலச்சக்கரத்துக்கு அப்பாற்பட்டவர்கள், அவர்கள் தங்களுக்கு வயது ஆவதையே உணர மாட்டார்கள்.

ஐயைஞ்சு மூன்று – இருபத்து எட்டு
ஈரைம்பது  – நூறு


காலம் கழிந்து கொண்டே இருக்கிறது

உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறு ஏழும்
கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியாது அழிகின்ற வாறே – 741

விளக்கம்:
உற்றறிவு ஐந்து – சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை ஆகியவற்றால் அறியும் அறிவு
ஆறாவது அறிவு – மனம், அறிவு ஆகியவற்றால் எதையும் பாகுபடுத்தி அறியும் அறிவு
ஏழாவது அறிவு – பாகுபடுத்துவதால் வரும் முடிவைச் சார்ந்து இருத்தல்
எட்டாவது அறிவு – நூல்களைக் கற்று அறியும் அறிவு
ஒன்பதாவது அறிவு – நூல்களில் கற்றவற்றை அனுபவமாக அறியும் அறிவு
பத்தாவது அறிவு – அனுபவமாக உணர்ந்தவற்றைக் பற்றிக் கடைபிடிக்கும் அறிவு

இந்த அறிவுநிலைகளால் பல உலக விஷயங்களில் ஈடுபட்டு, நம்முடைய கால அளவு கழிந்து வீணாவதை உணராமல் இருக்கிறோம்.