ஏ இவளே!

முத்துப்பாண்டிக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் அவன் கூப்பிடுவான். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு கூப்பிட்டுகிட்டிருந்தான். ரெண்டாமவள் வந்ததும் முதலாமவள் அவளே ஆகிட்டா. ரெண்டாமவள் இவளே ஆகிட்டா. இதுவரைக்கும் ரெண்டு பேரையும் அவன் ஒப்பிட்டு பார்த்ததில்லை.  அவளேங்கிறவ நல்ல செவப்பு நிறம், கச்சிதமான அமைப்புள்ளவ. ஆனா கொஞ்சம் பொம்மைத்தனம் இருக்கும். இவளே வேற மாதிரி. மாநிறம், கொஞ்சம் சுமாரா இருப்பா, ஆனா உயிர்ப்புள்ளவ. அவ இருக்கிற எடத்துல யாரும் சோம்பலா இருக்க முடியாது. பேச்சும் சரி, செயலும் சரி ஒரே படபடப்பு தான்.

ஏழு பிள்ளைக அவங்க வீட்டுல. எந்த பிள்ளை யார் பெத்ததுங்கிறது இப்போ முத்துப்பாண்டிக்கு ஞாபகத்துல இல்ல. அதெல்லாம் ஒரு விஷயமா! பிள்ளைகளுக்கே அதப்பத்தி கேள்வி இல்ல.  வீட்டுல சண்ட வருமான்னு கேட்குறீங்களா? சண்ட இல்லாத வீடெல்லாம் ஒரு வீடா!

ஒரு தடவ அவளேயான மூத்தவகிட்ட அந்த தெரு பெரிய மனுஷன் ஒரு ஆளு ஜாடமாடயா வீட்டு அந்தரங்கத்த பத்தி கேக்க, இளையவளுக்கு தெரிய வந்து, இப்போ அந்தாளு சின்ன மனுஷனாயிட்டாரு. இவளே அவர்கிட்ட கேட்ட கேள்விக்கெல்லாம் தெருவுக்கே காது கூசிப்போச்சு.

முத்துப்பாண்டிக்கு தொழில் சொந்தமா ஒரு சின்ன பலசரக்கு கடை. வேலைக்கு சம்பள ஆள் கிடையாது. ”ஏ இவளே! வந்து கொஞ்சம் கடைய பாத்துக்கோ”ன்னா வந்துருவா. இவ வந்ததில ரெண்டு வகைல லாபமாச்சு. நிறைய கடன் கொடுத்தா. கடன் கொடுக்குற வியாபாரத்துல லாபம் அதிகம்ன்னு சொல்லுவா. கடன திரும்ப வாங்குறதில டெரர் மொகம் காண்பிப்பா. கொள்முதலும் இப்ப அவ பொறுப்பா ஆகிடுச்சு. வெலை அடிச்சு பேசுவா. யார் யாருக்கு என்ன வெலைல சப்ளை ஆகுதுன்னு லிஸ்ட் போடுவா. இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்ன்னு முத்துபாண்டிக்கே புரியலை. “இவளே! நீ இங்க இருக்க வேண்டியவளே இல்ல”ன்னு சொல்லுவான். “அடப் போடா”ம்பா.

கடைல கணக்கெல்லாம் எழுதி வச்சுகிடுறதில்ல. எல்லாம் மனக்கணக்கு தான். கொஞ்ச கொஞ்சமா வீட்டுல துட்டு சேர ஆரம்பிச்சது. அவ வீட்ட பாத்துகிட்டா, இவ கடைய பாத்துகிட்டா. பக்கத்து தெருவில் ஒரு கடை வாடகைக்கு இருக்கிறதா தெரிய வந்ததது. துட்டு எவ்வளவு இருக்குன்னு எண்ணி பாத்தாங்க, ஒரு முப்பதினாயிரம் தேறிச்சு. சரின்னு இன்னொரு கடை ஆரம்பிச்சாங்க. புதுக்கடைய முத்துபாண்டி பாத்துகிட்டான், மொத கடைய இவ பாத்துகிட்டா.

முத்துபாண்டிக்கு கொஞ்சம் சிரமமா தான் இருந்தது. இவ அளவுக்கு அவனுக்கு சாதுர்யம் போதாது. இப்படித்தான் ஒரு நாள் பவுடர்  டப்பா வாங்கிட்டு போன ஒருத்தன் திரும்ப சண்டைக்கு வந்துட்டான்.

“ஒரு டப்பால அஞ்சு ரூவாயா கூட வச்சு விப்பீங்க?”ன்னு ஒரே சண்டை.

அந்த நேரம் வாடிக்கையா சாமான் வாங்குற பெண் உதவிக்கு வந்தது. பதிலுக்கு கூச்சல் போட்டது.

“இன்னொரு கடைல வெல கம்மியா இருந்தா, அதுல என்ன மாசம் போட்டிருக்குன்னு பாத்தியா? அத பாத்துட்டு வா மொதல்ல. பழைய டப்பா வெலைல புது டப்பா குடுப்பாங்களா?”

அவனும் அத நம்பி திரும்ப போயிட்டான்.

“சரி. நான் வாங்குனது எவ்வளவு ஆச்சு?”ன்னு கேட்டா அந்த பொண்ணு.

“நாப்பத்தாறு”

“எனக்கு வாங்க வேற கடை இல்லாமலா ரெண்டு தெரு தள்ளிருக்கிற ஒங்க கடைக்கு வாரேன். இந்தாங்க நாப்பது ரூவா போட்டுக்குங்க.”

“சரி இவளே”ன்னான்.