என்னோட அனுபவத்துல சொல்றேன், கோபத்தை அடக்கி வைக்காதீங்க. இப்படி சொல்றதுனால கோபம் வந்தா எதிர்ல இருக்கிறவங்களை கடிச்சு குதறணும்னு அர்த்தம் இல்லை. ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கோம், திடீர்னு வார்த்தைகள் உரசிக்கிடுது, அதுலே ஒரு வார்த்தை தன்மானத்தை பதம் பார்க்கும் போது சுருக்குனு கோபம் வரும். சம்பந்தப்பட்டவங்க நமக்கு அடங்கினவங்களா இருக்கும் போது பிரச்சினை இல்லை. மேலே விழுந்து பிறாண்டி வைக்கலாம், பிறகு சமாதானப்படுத்திக்கிடலாம். இதே கோபத்தை உண்டாக்குறது நமக்கு அன்னியரா இருந்தால் பேச்சை நிறுத்திட்டு வந்திருவோம். சம்பந்தப்பட்டவரை நாம் சார்ந்திருக்கும் நிலை இருக்கும் போதுதான் கஷ்டம். கோபிக்க முடியாதது மட்டுமில்லை, அபத்தமா சிரிச்சு சமாளிக்க வேண்டி வரும். அதனால ஒண்ணும் தப்பில்லை.
அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி சூழ்நிலைல கோபப்பட்டுக் காரியத்தை கெடுத்துகிடாதீங்க. முதலாளி, மேனேஜர், அதிகாரி, இவங்க கிட்ட ஒரு தடவை முறைச்சுகிட்டோம்னா அப்புறம் நம்மை ஜென்ம விரோதியாத்தான் பார்ப்பாங்க. அந்த நேரம் சூடு, சொரணை எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மறந்து, ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ங்கிற பாவனையில் நின்று சமாளிச்சுகிடலாம். அவங்களுக்குத் தெரியும், இவனுக்கு கோபம் இருக்கு, மரியாதைக்காக பேசாம போறான்னு. இந்த குற்ற உணர்ச்சி நாளை நமக்கு சாதகமாகலாம்.
அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி அடக்கி வைச்ச கோபம் உள்ளே குமுறிக்கிட்டே இருக்கும். அதை வீட்டில உள்ளவங்க கிட்ட போய் கொட்டிடாதீங்க. அவங்க எல்லாம் நமக்கு அடங்கின மாதிரி பாவனை பண்றவங்க. போய் அவங்களை சீண்டுனா, அந்த பாவனையெல்லாம் கழட்டி வச்சிருவாங்க.
அனுபவத்துல சொல்றேன், இந்த கோபத்தை எல்லாம் உள்ளே ரொம்ப சேமிச்சு வைக்கக்கூடாது. அது நம்மை மெல்ல கொல்கிற விஷமாம். அதை செலவழிச்சு தீர்க்க நிறைய வழி இருக்கு. ஒரு நோட்டுல சம்பந்தப்பட்டவங்க பேரை எழுதி, அந்த பேரை பேனாவாலேயே ஆசை தீர குத்தலாம். கொஞ்சம் பெரிய கோபம்னா ஒரு தலகாணில அவங்க பேர் எழுதி தலகாணி பிஞ்சு போற அளவுக்கு ஏதாவது செய்யலாம். கொஞ்சம் வரையத் தெரிஞ்சிருந்தா சுவத்தில கோபப்படுத்தினவங்களோட படத்தை வரையலாம், அப்புறம் உள்ளதெல்லாம் உங்க இஷ்டம்தான்.
இதுக்காகவே வீட்டில் தனி அறை இருந்தால் நல்லதுன்னு ஓஷோ சொல்றார். நான் அனுபவத்துல சொல்றேன், இதுக்கான தனி அறை ஒன்று அவசியம். இந்த முறையில ஆத்திரத்தை உள்ளேயே வைத்து புழுங்க வேண்டியதில்லை, நேரடியாக வெளிப்படுத்தி சங்கடப்படவும் வேண்டியதில்லை. இது நினைத்துப் பார்க்க கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றும். நாம் முட்டாள்தனமாக நடந்துகொள்வது ஒன்றும் புதிதான செயல் இல்லையே?
அனுபவத்துல சொல்றேன், நான் இப்படி யாரையும் அடிச்சதில்லை. அந்த அளவு என்னை யாரும் கோபப்படுத்தியதில்லை. ஆனாலும் அனுபவத்துல சொல்றேன், என் மனைவிக்கு என் மேல் நிரந்தர கோபம் கிடையாது. அவர் ஓஷோவின் யோசனையை பின்பற்றுகிறார்.