வெற்றிலை விற்கும் கிழவி

எங்க ஊர்ல வெற்றிலை மொத்தமாக வாங்கனும்னா ரெண்டே கடைகள் தான் உண்டு. ஒரு கடை  சுமார் முப்பது வயதுள்ள இளந்தாரியால் நடத்தப்படுவது. இன்னொன்று ஒரு பாட்டியால் நடத்தப்படும் கடை. பாட்டிக்கு எழுபது வயசு இருக்கும், கொஞ்சம் கோபக்கார பாட்டி. துணை யாரும் தேவைப்படாமல் தானே எல்லா வேலையும் பார்த்துக் கொள்வார். வெற்றிலை முக்கிய வியாபாரம், அது போக பூஜைக்கு தேவையான பொருட்களும் வியாபாரம் உண்டு.

நான் முப்பது ரூபாய்க்கு வெற்றிலை வாங்குவேன். இளந்தாரி கடையில் வாங்கினால் வெற்றிலை எண்ணிக்கை கொஞ்சம் அதிகமிருக்கும். பாட்டியிடம் வாங்கினால் எண்ணிக்கை கம்மி தான், ஆனால் எடைக்கணக்கு ஒரே மாதிரிதான், 100 கிராம் பத்து ரூபாய்னா, ரெண்டு பேர் கிட்டயும் அதே விலை தான். நான் வாடிக்கையாய் வாங்குவது பாட்டியிடம் தான்.

எண்ணிக்கை வித்தியாசத்திற்கு காரணம் இதுதான் – இளந்தாரி வரும் வெற்றிலையை வாங்கி ஒரு கட்டு மட்டும் பிரித்து வைப்பார், தேவைப்படும் போதுதான் அடுத்த கட்டு பிரிப்பார். கேட்பவர்களுக்கு அப்படியே எடை போட்டு கொடுப்பார். பாட்டியின் வியாபார முறை வேறு. வரும் வெற்றிலையை பூராவும் பிரித்து தண்ணீரில் நனைத்து அடுக்கி விடுவார். வெயிலாக இருந்தால் அடிக்கடி தண்ணீரில் நனைத்து வாடாமல் பார்த்துக்கொள்வார். எடை போடும் போது ஒரு முறை தண்ணீரில் நனைத்துக் கொள்வார். தண்ணிரின் எடை சேர்ந்து கொள்வதால் வெற்றிலை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

பாட்டிக்கு லாபமும் அதிகம், நல்ல வெற்றிலையாக தருகிறார் என்ற பெயரும் கிடைக்கிறது. இது மாதிரி பாட்டிகள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். வேறு வியாபாரங்களும் செய்கிறார்கள், அவர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. அவர்களை நினைத்து கண்ணீர் விடும் கட்டுரைகள் சிலவற்றை படிக்க நேர்ந்தது. கண்ணீர் விடுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான் – ‘எங்க பாட்டி ஒரு மொதலாளிங்க’.


தற்பெருமை ஒழி நெஞ்சே!

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே.  – (திருமந்திரம் – 2513)

விளக்கம்:
கரிய கால்களைக் கொண்ட கருடன் வான் வழியே கடந்து செல்வதை பார்த்து, பசுமையான செடிகள் நிறைந்த குளத்தினில் உள்ள கருநாகப் பாம்பு ஓடி ஒளிந்து கொள்ளும். அது போல, ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது கண்டு நாம் நம்முடைய தற்பெருமையை பேசாதிருப்போம்.

ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது போல், நாம் விதி முடிந்து இறைவனுடன் கலந்து விடும் போது, வாழ்நாளில் நாம் தேடிய பெருமைகளெல்லாம் பொருள் இல்லாமல் போய் விடும். இதை உணர்ந்து நாம் பெருமை பேசுவதை விட்டு அடக்கமாய் இருப்போம்.

(கருந்தாள் கருடன் – கரிய கால்களை உடைய கருடன்,   விசும்பு – ஆகாயம்,  இற – கடந்து செல்ல,  கருந்தாள் கயம் – பசுமையான செடிகள் உள்ள நீர்நிலை)

When the black footed bird, Garuda, fly over the sky,
black snake in the pond below will hide itself.
Like this, seeing that the river water cannot be consumed
once it merge with ocean, we should stop speaking our self pride.