வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஒரே சண்டை. இடையில் மாட்டிக் கொண்ட ஒரு ராகு காலம் மயிரிழையில் செத்துப்போனது. இருவருக்கும் இடையே சமரசம் பண்ண இறங்கி வந்த டிசம்பர் மாசம் வாங்கிக் கட்டிக்கொண்டது.
“ஒனக்கே ஒரு நெலையான எடம் கெடையாது. பாதி நாள் கார்த்திகைலயும் மீதி நாள் மார்கழிலயும் இருக்கே. நீ எங்களுக்கு நாட்டாமையா?” எப்பிடி மடக்கினேன் பாத்தியா என்று தொலைக்காட்சி விவாத்தில் கலந்து கொண்டவர் போல பெருமிதப்பட்டுக் கொண்டது வியாழன்.
“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” பஞ்சாயத்துக்காரரின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிந்தது.
“ஏன்? பிரச்சனை இருந்தாத்தான் சண்டை போடணுமா?” இப்போ வெள்ளி ‘இது எப்படி’ என்பது போல் வியாழனைப் பார்த்தது. வெளியில் இருந்து ஒருவர் எட்டி எட்டிப்பார்த்தார், பார்க்க வெளிநாட்டுக்காரர் போல இருந்தது.
“என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். முகநூல் என்ற பெயரில் அறியப்படுபவன் நான். என்னைத் தவிர்த்து இந்த உலகில் எந்த சச்சரவும் நடக்க முடியாது. இங்கே ஒரு வன்கொடுமை நடப்பதாக அவதானித்து உணர்ந்தேன். உங்கள் கருத்து மோதலை என் இடத்தில் வந்து நீங்கள் நிகழ்த்தலாம்”
“ஸார், நீங்க ஆங்கிலத்திலேயே பேசுவது தமிழுக்கு நல்லது” வியாழனும் வெள்ளியும் சேர்ந்து கொண்டன.
“ஓகே. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”
“இட் இஸ் அவர் ப்ராப்ளம்!”
சம்பந்தம் இல்லாமல் வந்தவர்களை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இரண்டு வயது முதிர்ந்தவர்களும் (இளமைக்கு எதிர்ப் பதம் கிழமை தானே) சிரித்துக் கொண்டார்கள். திடீரென வெள்ளி கறுப்பாக மாற ஆரம்பித்தார்.
“நீ ஒரிஜினல் தான்” வியாழன் சொன்னார். “கறுக்கிற வெள்ளி தான் ஒரிஜினலாமே!”