வெள்ளி கறுத்தால் சனி

வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஒரே சண்டை. இடையில் மாட்டிக் கொண்ட ஒரு ராகு காலம் மயிரிழையில் செத்துப்போனது. இருவருக்கும் இடையே சமரசம் பண்ண இறங்கி வந்த டிசம்பர் மாசம் வாங்கிக் கட்டிக்கொண்டது.

“ஒனக்கே ஒரு நெலையான எடம் கெடையாது. பாதி நாள் கார்த்திகைலயும் மீதி நாள் மார்கழிலயும் இருக்கே. நீ எங்களுக்கு நாட்டாமையா?” எப்பிடி மடக்கினேன் பாத்தியா என்று தொலைக்காட்சி விவாத்தில் கலந்து கொண்டவர் போல பெருமிதப்பட்டுக் கொண்டது வியாழன்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” பஞ்சாயத்துக்காரரின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“ஏன்? பிரச்சனை இருந்தாத்தான் சண்டை போடணுமா?” இப்போ வெள்ளி ‘இது எப்படி’ என்பது போல் வியாழனைப் பார்த்தது. வெளியில் இருந்து ஒருவர் எட்டி எட்டிப்பார்த்தார், பார்க்க வெளிநாட்டுக்காரர் போல இருந்தது.

“என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.  முகநூல் என்ற பெயரில் அறியப்படுபவன் நான். என்னைத் தவிர்த்து இந்த உலகில் எந்த சச்சரவும் நடக்க முடியாது. இங்கே ஒரு வன்கொடுமை நடப்பதாக அவதானித்து உணர்ந்தேன். உங்கள் கருத்து மோதலை என் இடத்தில் வந்து நீங்கள் நிகழ்த்தலாம்”

“ஸார், நீங்க ஆங்கிலத்திலேயே பேசுவது தமிழுக்கு நல்லது” வியாழனும் வெள்ளியும் சேர்ந்து கொண்டன.

“ஓகே. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”

“இட் இஸ் அவர் ப்ராப்ளம்!”

சம்பந்தம் இல்லாமல் வந்தவர்களை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இரண்டு வயது முதிர்ந்தவர்களும் (இளமைக்கு எதிர்ப் பதம் கிழமை தானே) சிரித்துக் கொண்டார்கள். திடீரென வெள்ளி கறுப்பாக மாற ஆரம்பித்தார்.

“நீ ஒரிஜினல் தான்” வியாழன் சொன்னார். “கறுக்கிற வெள்ளி தான் ஒரிஜினலாமே!”


மரணம் என்னும் ஒரு வசீகர மர்மம்

மரணத்தைப் போல ஒரு வசீகரமான விஷயம் இருக்குமான்னு தெரியலை. அந்த வசீகரத்தின் முக்கிய காரணம் அதன் பின்னால் இருக்கும் மர்மம். மர்மமான விஷயங்கள் வசீகரித்தை உண்டாக்குவது தானே இயற்கை? மரணம் வாழ்வுக்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் சாவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. கவிஞர் வைரமுத்து தவம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பார் “எனக்குத் தெரியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல், எனக்குத் தெரியாமல் என் இறப்பும் நேர வேண்டும்”. எவ்வளவு அர்த்தமுள்ள தவம்!

சமீபத்தில் நேர்ந்த அம்மாவின் மரணம் இப்படி ஒரு ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது. அப்பேர்ப்பட்ட சாவு அது, விஜயதசமி அன்று மதிய நேரம், கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தார். சிகிச்சைக்காக போன ஆஸ்பத்திரியின் உள்ளே நடந்தே தான் போனார், நாடி பிடித்துப் பார்த்த டாக்டர் பல்ஸ் ரொம்ப குறைந்து விட்டதாக சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதற்குள் உயிரை விட்டு விட்டார்.

தன்னைத் தேடி வந்த மரணத்திடம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தன்னை ஒப்படைத்ததாகவே தோன்றியது எனக்கு.  சாகும் கலை என்னும் தலைப்பில் ஓஷோ மணிக்கணக்கில் பேசியிருக்கிறார், நானும் கேட்டிருக்கிறேன். ’நீங்க எல்லாம் பேசுவீங்க, எழுதுவீங்க, படிப்பீங்க, ஆனா அது எனக்கு கை வந்த கலை’ன்னு பத்து நிமிஷத்தில் செய்து காட்டி விட்டார் அம்மா.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)

திருமூலர் சொன்ன மாதிரி காலப்போக்கில் இறந்து போன அம்மாவை மறந்தாலும் ‘dead like me’ எனச் சொல்லாமல் சொன்ன செய்தியை மறக்க முடியாது.