மெய்த்தவம் செய்பவரிடம் வந்து அமர்வான் சிவன்

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.  –  (திருமந்திரம் – 19)

விளக்கம்:
சிவபெருமான் ஏலம் போன்ற வாசனை கமழும் எழு உலகங்களைப் படைத்தவன். அவற்றை அழிப்பவனும் அவனே! பிறைச்சந்திரனை அணிந்திருக்கும் அவன், அனைத்தும் அறிந்த மூதறிவாளன். அவன் தன்னை நோக்கி மெய்த்தவம் செய்பவரின் மனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு அருள்பவன்.

The Lord created the fragrant seven worlds.
He is the destroyer of all worlds too.
He is the wisest of all. For those who do penance
over Him, He'll abide in their hearts.

ஈசன் உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை!

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.  –  (திருமந்திரம் – 17)

விளக்கம்:
நாமெல்லாம் பருவுடல், நுண்ணுடல் ஆகிய இரண்டு கூறுகளால் ஆனவர்கள். மாயையின் தொடர்புடைய நுண்ணுடலில் வாசனை மிகுந்திருக்கும். அந்த நுண்ணுடலில் மனத்தை செலுத்தி நம்முடைய ஒரே தெய்வமான ஈசனுடன் தொடர்பு கொள்வோம். ஈசன் உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை.

The body and soul mingle to form a being.
The soul has a fragrance, which is connected to Maya.
Let us fix our mind on our Soul to 
have relationship with our only God Siva.

வாள்நுதல் பாகன்

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.  –  (திருமந்திரம் – 16)

விளக்கம்:
நன்கு திருத்தப்பட்ட சுருண்ட முடியில் கொன்றை மலரை அணிந்திருப்பவன் சிவபெருமான். அவன் ஒளி விளங்கும் நெற்றியுடைய உமையம்மையைத் தன் பாதியாகக் கொண்டவன். அமரரும் தேவர்களும் தாம் விரும்பியதை அடைய, தம் குற்றங்களைக் களைந்து, நற்குணங்களைப் பயின்று சிவபெருமானை நாடி இருப்பார்கள்.

Lord Siva wears laburnum flower on His curling hair.
He is always with Sakthi, who has a bright Forehead.
To fulfill their own wishes, the Devas & Celestials
Practice good deeds and adore the Lord.

ஆதியும் அவனே! முடிவும் அவனே!

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.  –  (திருமந்திரம் – 15)

விளக்கம்:
இந்த உலகை படைத்தவன் அவனே! அழிப்பவனும் அவனே! அந்த சிவபெருமான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இந்த உடலை இயக்கும் வேதியாய் விரிந்து பரவி உள்ளான். குறையாத தன்மையுடைய அருள்சோதியாய் இருப்பவனும் அவனே. அவன் என்றும் அழியாத தன்மையுடன் நின்று நீதி வழங்குகிறான்.

ஆதியும் அவனே! முடிவும் அவனே! இரண்டுக்கும் இடையே இயக்கமும் அவனே!

The Lord creates all. He is the destroyer too.
He is the one who transmutes inside our body.
He is the supreme light, which never shrinks.
And He is the eternal one.

சிரசில் நிற்கிறான் ஈசன்

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.  –  (திருமந்திரம் – 14)

விளக்கம்:
சிவபெருமான் சுவாதிட்டானத்தில் விளங்கும் நான்முகனைக் கடந்து விளங்குகிறான். மணிப்பூரகத்தில் விளங்கும் திருமாலைக் கடந்துள்ளான். அவர்க்கு அப்புறம் அநாகதச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனைக் கடந்துள்ளான். இவை எல்லாவற்றையும் கடந்து சிரசின் மேல் நின்று யாவற்றையும் கவனித்தவாறு உள்ளான்.

Lord Siva transcends Brahma, He who resides in Swadishtana.
The Lord also transcends Thirumal, He who resides in Manipuraka.
Then the Lord transcends Urithira, He who resides in Anahata.
Witnessing all these our Lord Siva stands in the space above our head.

விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.  –  (திருமந்திரம் – 13)

விளக்கம்:
மண்ணளந்த திருமால், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் முதலான தேவர்களும் இன்னும் ஈசனின் பரந்து விரிந்திருக்கும் தன்மையை முழுமையாக அறிந்திருக்கவில்லை. சிவபெருமான் விண்ணளவிலும் விரிந்திருக்கிறான், அவனுக்கு மேலானவர் யாரும் கிடையாது. அவன் நம் கண்ணால் பார்க்க முடிந்த இடமெல்லாம் உள்ளான், நம் பார்வைக்கு அப்பாலும் இருக்கிறான்.

ஈசன் இல்லாத இடம் என்று உலகில் எதுவுமே இல்லை.

Celestials including Lord Thirumal who spanned the earth and
Lord Brahma, the lotus seated, are not knowing the boundary of Lord Siva.
The Lord spreads all over the sky. He remains in all the things
that we can see and also there beyond our vision.

நெற்றிக்கண்ணை திறந்தது குற்றமா?

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே.  –  (திருமந்திரம் – 12)

விளக்கம்:
நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் அருள் பாவித்து நின்ற போது, எண்ணில்லாத தேவர்கள் அழிவில்லாத அமர வாழ்வு பெற்றார்கள். மண்ணில் வாழ்பவர்களும் விண்ணில் வாழ்பவர்களும் சிவபெருமானை அண்ணல் இவன் என்று தெரிந்துகொள்ளாமல் நெற்றிகண்ணால் நிறைய பேர் இறந்து விட்டதாக சொல்கிறார்கள். அவர்கள் அறியாமையை என்ன சொல்வது?

சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்ததால் நிறைய தேவர்கள் இறந்து விட்டதாக நினைக்கிறோம். அவர்கள் இறக்கவில்லை, அழிவில்லாத அமர வாழ்வே பெற்றார்கள்.

The Lord who have third eye, when he stood in love,
so many celestials got eternal life there after.
People don't understand the Grace of Lord Siva,
they are telling that the celestials were dead. How ignorant they are!

அது ஒரு காலம்

அது ஒரு காலம் –
மனிதன் அன்புடன் இருந்தான்.

அது ஒரு காலம் –
அவன் குரலிலே தன்மை இருந்தது.

அது ஒரு காலம் –
உலகில் நிபந்தனையற்ற அன்பு இருந்தது.

அது ஒரு காலம் –
வாழ்க்கை ஒரு இனிய பாடலாய் ஒலித்தது.

அது ஒரு காலம் –
அந்த பாடல் உணர்வு மிக்கதாய் இருந்தது.

பிறகொரு நாள் –
எல்லாம் மாறிற்று.

கனவு கண்டேன் ஒரு நாள் –
கனவினுள் கனவு வந்தது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அது பயமறியாத இள வயது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அப்போது வாழ்வதில் அர்த்தம் இருந்தது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அன்பு ஒரு நாளும் சாகாதெனெ.

கனவு கண்டேன் ஒரு நாள் –
கடவுளை கருணை உள்ளவராக.

பிறகொரு நாள் –
கனவெல்லாம் செலவழிந்த நிலை.
வாழ்வு கனவைக் கொன்றது.

Inspired by the movie – Les Misérables 2012


ஒப்பிட முடியாத கடவுள் சிவன்!

முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.  –  (திருமந்திரம் – 7)

விளக்கம்:
படைப்பெல்லாம் தோன்றுவதற்கு முன்பே உள்ள பழமையானவன் சிவபெருமான். அவன் அயன், அரி, அரன் ஆகிய மூவர்க்கும் மூத்தவன். தன்னை எதனோடும் ஒப்பிட முடியாத தனித்துவமிக்க தலைமகன் அவன். தன்னை அப்பா என்று அழைப்பார்க்கு அப்பனுமாய் உள்ளவன். அவன் பொன்னைப் போன்ற ஒளிமயமான உபதேசங்களைத் தருபவன்.

He is the Primal, older than the creation
and the three Gods. The Lord cannot be equal to anything.
For those who call Him Father, He'll be a father to them.
He gives us the golden flame like Spiritual Teachings.

அவனன்றி எதுவுமில்லை!

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.  –  (திருமந்திரம் – 6)

விளக்கம்:
சிவனை விட மேன்மையான தேவர் யாரும் இல்லை. சிவனை நோக்கிச் செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. சிவனருள் இல்லாமல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் இல்லை. சிவன் இல்லாமல் முக்தி அடையும் வழியை நான் அறியேனே!

No celestial is supreme than Lord Siva.
Without Him, there will be no real Penance.
Without Him, there will be no creation, protection and destruction.
Without Him, I couldn't find the way to Heaven.