திருமந்திரம் – சிவபெருமானின் உபதேசம்

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே.   – (திருமந்திரம் – 91)

விளக்கம்:
இதற்கு முந்தைய பாடலில் திருமூலர், திருமந்திரத்தில் விளக்கப்பட்ட பொருட்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். இந்தப் பாடலில் அவர் சொல்வது “இந்தத் திருமந்திர நூலில் உள்ள பொருளெல்லாம் மேலான மெய்ஞ்ஞானச் சோதியாகிய சிவபெருமானின் உபதேசங்களாகும். அந்த ஆனந்த நந்தி பெருமான் அளவில்லாத பெருமைகளை உடையவன். தன் நிலையில் அசையாதிருக்கும் அந்த ஆனந்தக் கூத்தனின் ஆணையின்படி, அந்த சிறந்த திருக்கயிலாய மலையில் இருந்து நான் இங்கு வந்தேன்”.

(பரம் – மேலான,  அளப்பில் – அளவற்ற, துளக்கறும் – அசைவு இல்லாத)


திருமந்திரத்தில் விளக்கப்படும் பொருட்கள்

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.  – (திருமந்திரம் – 90)

விளக்கம்:
திருமந்திரம் என்னும் இந்நூலில் விளக்கப்படுபவை – அறியப்படும் பொருள் (பரம்பொருள்), அறிந்து கொள்ள உதவும் ஞானம், அறிந்து கொள்பவனின் தன்மை (ஜீவாத்மா), மாயை, மாயையில் விளங்கும் சக்திகளின் கூட்டம், அந்த சக்திகளில் விளங்கும் சிவன், வாக்கு மனம் ஆகியவற்றிற்கு எட்டாத அந்த சிவபெருமானே அனைத்துக்கும் வித்தாக இருக்கும் தன்மை ஆகியவையாகும்.

(ஞேயம் – அறியப்படும் பொருள், ஞாதுருவம் – அறிபவன்,  பரை ஆயம் – சக்திகளின் கூட்டம்,  அகோசர வீயம் – புலன்களுக்கு எட்டாத விதை)