அரட்டைக்கு அடுத்தபடியா பாட்டு கேட்குறதுன்னா நமக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை. பாட்டு கேட்கும் முறையிலும் தனித்தனி ரசனை உண்டு. முப்பது வருஷத்துக்கு முன்னால, பரமசிவத்தோட அண்ணன் ஸ்பீக்கருக்கு மேல மண்பானைய கவுத்திப் போட்டு பாடலின் தாளத்தை ரசிப்பார். பக்கத்து வீட்டு ஆசாரி அண்ணன் 10 band equalizer உள்ள டேப் ரிக்கார்டர் வைத்திருந்தார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு விதமா equalizerயை அட்ஜஸ்ட் பண்ணுவார். ரமாக்கா வீட்ல சோனி வாக்மேன். அதில் தென்பாண்டி சீம ஓரமா பாட்டு கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கு. மத்தபடி நிறைய வீட்டுல ரேடியோ தான். இப்போ நெலமையே வேற மாதிரி இருக்கு. ஃபோன் பேசுற கருவியில பாட்டு கேட்கிற ஐடியா எந்தப் படுபாவிக்கு வந்ததுன்னு தெரியல. ரயில்ல நடு ராத்திரி மூணு மணிக்கு சோதனை மேல் சோதனை, போதுமடா சாமின்னு அலற விடுறாங்க. சினிமா தியேட்டர வீட்டுக்குள்ள கொண்டு வந்துட்டோம். ஹோம் தியேட்டர்ங்கிற ஆறு ஸ்பீக்கர் செட்ட ஹால்ல மாட்டி, ப்ளுரே டிஸ்க்ல படத்த ஓட விட்டு LED TVல படம் பார்ப்போம்னு 20 வருஷத்துக்கு முன்னால நாம யாருமே நெனச்சுக் கூட பார்த்திருக்க மாட்டோம். சரவுண்ட் சவுண்ட்ல படம் பார்க்கிறவர்களுக்கு பழைய பாடல்களை இன்னும் ஸ்டீரியோவில தான் கேட்க வேண்டியிருக்கேன்னு ஒரு வருத்தம் இருக்கு.
ஸ்டீரியோவில் உள்ள ஒரு mp3 பாடலை நீங்களே 5.1 DTS க்கு மாற்றிக் கொள்ளலாம். Goldwave என்றொரு software உள்ளது. இதை பயன்படுத்தி பாடலில் உள்ள இரண்டு சேனல்களை ஆறு சேனல்களாக ஹோம் தியேட்டரக்கு ஏற்றவாறு பிரிக்கலாம். இது பற்றி விவரமாகச் சொல்லித்தரும் ஒரு வலைப்பக்கத்தின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். பிரித்து வைத்த ஆறு சேனல்களை SurCode DTS encoder பயன்படுத்தி 5.1 DTS பாடலாக மாற்றிக் கொள்ளலாம். Mp3ல் நாலரை mb இருக்கும் பாடல் dts பாடலாக 53 mb வருகிறது. கணினியில் windows media player பாடாது. VLC media playerல் கேட்கலாம்.
பழைய பாடல்களை DTS முறையில் கேட்பது நல்ல அனுபவமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் சில விஷயங்களை அதற்கு முன் தெரிந்து கொள்ளுங்கள்.
- பாடல் ரெக்கார்ட் செய்யும் போது ஆறு ட்ராக்காக பதிவது தான் உண்மையான DTS அனுபவத்தை தரும். software கொண்டு ட்ராக் பிரிப்பதை மேம்படுத்துதல் (enhancement) என்று வேண்டுமானால் சொல்லலாம். (சில பாடல்கள் வேறு விதமாகவும் ஆகலாம்.)
- எந்த சாஃப்ட்வேராலும் ஒரு இசைக் கருவியின் சத்தத்தை மட்டும் தனியாக பிரித்து எடுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட frequency rangeஐ தனியாகப் பிரித்து எடுக்கிறது. அவ்வளவு தான்.
- இந்த DTS பாடலை ஸ்டீரியோ ஸ்பீக்கரிலோ, ஹெட்ஃபோனிலோ கேட்டால் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது.
- 5.1 ஹெட்ஃபோன் என்றொன்று விற்கிறது. இது அடிப்படையிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சரவுண்ட் சவுண்ட் என்பது ஒரு பெரிய அறையில், தியேட்டர் எஃபக்ட்டில் படம் பார்ப்பதற்கானது. ரொம்பப் பெரிய அறையாக இருந்தால் 7.1 தேவைப்படும்.
- 5.1 ஹோம் தியேட்டரையே நாம் இன்னும் முறைப்படி உபயோக்கவில்லை. ஒவ்வொரு ஸ்பீக்கருக்கும் இடையே உள்ள தூரத்தை அளந்து DVD ப்ளேயரில் இன்புட் செய்து calibrate செய்ய வேண்டும். ஆனால் இந்த வசதி நிறைய ப்ளேயர்களில் கிடையாது. இருந்தாலும் நிறைய பேருக்கு இது பற்றித் தெரியாது.
- அப்புறம் இன்னொரு விஷயம். இந்த DTS ஆக மாற்றப்பட்ட பாடலை நீங்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்ளலாம். இதை நீங்கள் விற்க முடியாது. அதற்கான உரிமை உங்களுக்குக் கிடையாது. உரிமை கோருவதும் அர்த்தமில்லாதது.
ஸ்டீரியோ பாடலை DTS முறைக்கு மாற்றுவது பற்றி விவரமாக இங்கே – http://originaltrilogy.com/forum/topic.cfm/You-can-convert-your-stereo-audio-to-51-channel-DTS-audio/topic/15177/