காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே. – (திருமந்திரம் – 167)
விளக்கம்:
உயிர் இல்லாத நிலையில், நம்முடைய இந்த உடல் வெறும் தோல்பை ஆகும். இந்த உடலினுள் நின்று உயிர் கொடுத்து உடல் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவன் கூத்தன் என்று அழைக்கப்படும் ஈசன். அவன் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு, அதாவது நாம் செத்துப் போன பிறகு, இந்த உடலை காக்கை வந்து கொத்தி தின்றால் என்ன? பார்ப்பவர் இகழ்ந்தால் என்ன? தகனம் செய்து பால் ஊற்றினால் என்ன? பலரும் பழித்துப் பேசினால் என்ன? உயிர் இல்லாத இந்த வெறும் கூட்டைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
தொழில் அறச் செய்து – இந்த உடல் நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல் தானாக இயங்குகிறது.