Eyes Wide Shut – ஒரு ரசனைப் பார்வை

Eyes-wide-shut_2

கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள்  உலகமயமானவை. உடைகள் மாறினாலும், பழக்க வழக்கங்கள் மாறினாலும், எல்லா நாட்டிலும் திருமண உறவு, அடிப்படையில், ஒரே மாதிரியே இயங்குகிறது. Eyes Wide Shut படம் பார்த்தால் இதை இன்னும் புரிந்து கொள்ளலாம். பிரபல மருத்துவர் பில் ஹார்ஃபோர்ட், அவரது மனைவி அலிஸ். இவர்களது தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் மனச்சிக்கல்களை தெளிவாக அலசும் படம் இது. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மிகுதியான அன்பு அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்துகிறது, அதனால் நிகழும் சில தடுமாற்றங்கள், அவை ஏற்படுத்தும் வலிகள் ஆகியவற்றை சுவாரசியாமான சம்பவங்களாக தொகுத்திருக்கிறார்கள்.

பில்லும் அலிஸும் ஒரு மது விருந்துக்குக் கிளம்புவதில் கதை ஆரம்பிக்கிறது. விருந்தில் கிடைத்த அனுபவங்களை இருவரும் மறுநாள் தங்கள் படுக்கையறையில் போதையின் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் போது மன உரசல்கள் ஏற்படுகின்றன. தான் ஒருமுறை வழியில் பார்த்த கப்பல்படை அதிகாரியிடம் தன் மனத்தை பறிகொடுத்ததாக அலிஸ் சொல்கிறாள். “ஒரு வேளை அந்த அதிகாரி என்னைக் கூப்பிட்டிருந்தால் என்னுடைய கணவனாகிய நீ, நம் குழந்தை, எதிர்கால வாழ்க்கை ஆகிய எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனுடன் போயிருப்பேன். நல்ல வேளை! அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை” பில்லின் பெருந்தன்மை அலிஸை வெளிப்படையாக பேச வைக்கிறது. ஆனால் பில் உள்ளுக்குள் குமைய ஆரம்பிக்கிறான்.

குடும்ப நண்பர் ஒருவரின் மரணச்செய்தி கேட்டு, அந்த இரவு நேரத்தில் பில் துக்க வீட்டுக்கு போக வேண்டியதாகிறது. அந்த ஒரு இரவில் பில்லுக்கு பல விதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறந்து போன குடும்ப நண்பரின் மகள் பில்லிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். அவளை சமாதானப்படுத்தி விட்டு ஒரு வழியாக வெளியே வருகிறான். சாலையில் எதிர்ப்படும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண் பில்லை தன் வீட்டுக்கு அழைக்கிறாள். அவளை நெருங்கும் சமயம் அலிஸிடம் இருந்து வரும் ஃபோன், பில்லை அந்த சூழ்நிலையில் இருந்து விடுவிக்கச் செய்கிறது. பிறகு ஆர்வக் கோளாறினால், உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாத ஒரு ரகசிய கூட்டத்துக்கு பொய் சொல்லி உள்ளே போகிறான். அங்கே மாட்டிக்கொண்ட அவனை ஒரு பெண் தன் உயிரை பலி கொடுத்துக் காப்பாற்றுகிறாள்.

ஒரே இரவில் ஏற்பட்ட சம்பவங்கள் தந்த கலவையான உணர்வுகளைத் தாங்க முடியாமல், நடந்த எல்லாவற்றையும் அலிஸிடம் சொல்லி அழுகிறான். மறுநாள் மகளுக்காக கிறிஸ்துமஸ் பரிசு வாங்க  கடைக்குச் செல்கிறார்கள். அங்கே பில் அலிஸிடம், நாம இப்போ என்ன செய்வது என்று குற்றவுணர்வோடு கேட்கிறான். அதற்கு அலிஸ் சொல்லும் பதில் தான் படத்தில் முக்கியமான விஷயம். இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது இந்த விஷயம் தான். “எப்படியோ இத்தனைச் சூழ்நிலைகளையும் சமாளித்து, அதிலிருந்து தப்பி வாழப் பழகியிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஷயம்?” வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையுடன் அலிஸ் சொல்லும்  இந்த நிதானமான பதிலைக் கேட்டு பில் ஆச்சரியப்படுகிறான். “அப்போ இனிமேல் எப்பவுமே இப்படி சமாளித்து விடுவோமா” எனக் கேட்க ஆரம்பித்த பில்லை அலிஸ் தடுத்துச் சொல்கிறாள் “அதைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். நினைத்தாலே பயமாக இருக்கிறது!”.

ஸ்டான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. படத்தின் இயக்கத்தை செய்நேர்த்தி என்று  நான் சுருக்கமாகச் சொன்னாலும், அவருடைய மேதா விலாசம் சுருக்கமான விஷயம் இல்லை. பில்லாக டாம் க்ரூஸும் அலிஸாக நிக்கோல் கிட்மனும் தங்கள் நடிப்பை  அநாயாசமான கொடுத்திருக்கிறார்கள். சிறு வயதினர்க்கு இது கொஞ்சம் கூட ஏற்ற படம் இல்லை. படத்தின் கதை ஓட்டத்தில் கலந்து விட்ட எனக்கு சில காட்சிகளில் வரும் நிர்வாணங்கள் உறைக்கவில்லை, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

நேற்று இந்தப் படத்தை எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன், இதன் கதையை இன்னும் எத்தனை பேருக்குச் சொல்லி கழுத்தறுப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை.