பனங்கிழங்கு வாசம்

யார் வீட்டுல யாரு பனங்கிழங்கு அவிச்சாலும், அந்த வாசம் அரசிய ஞாபகப்படுத்துது. அவள யாரும் மங்கையர்க்கரசின்னு முழுப்பேரு சொல்லி நான் கேட்டதில்ல. மஞ்சப்பொடியும் வியர்வையும் கலந்த அவளோட வாசத்துல நான் மூச்சு முட்டி தவிக்கிற நேரம் மங்கை யாருக்கு அரசின்னு கேப்பேன் அல்லது கூப்பிடுவேன். அது ஏன்னு தெரியல, அவளோட வாசம் பனங்கிழங்க ஞாபகப்படுத்துது. எங்க பனங்கிழங்கு வாசம் வந்தாலும் அவ மூச்சுக் காத்து மேல வந்து தடவுற மாதிரி இருக்கு. வாசம் மட்டுமில்ல, குட்டையா, குண்டா உருண்டு இருக்குற  பனங்கிழங்க பாக்கும்போதும் அவள பாக்குற மாதிரியே இருக்கு.

அரசியோட அம்மா வீடுகளுக்கும் விஷேசங்களுக்கும் போய் கைமுறுக்கு சுத்திக் கொடுப்பாங்க. “செந்திலு! நா ஒரு விஷேசத்துக்கு போவ வேண்டியிருக்கு. அரசி தனியா இருக்கா, நீ இங்க வந்து கொஞ்ச நேரம் டிவி பாத்துக்கிட்டு இரு”ன்னு அரசியம்மா சொல்லும் போது ‘வேற வேல இல்லயா எனக்கு?’ன்னு தோணும். “ஆளுதான் வளந்திருக்கா எரும மாதிரி! ஒரு சொரணையும் இல்ல, வாசக்கதவ தொறந்து போட்டு தூங்குறாடா. சும்மா ஒரு தொணைக்கு இரேன்” எனக்கு பாதி மாசம் நைட் ஷிஃப்ட் வேலைங்கிறதால பகல்ல தூக்கம் தான். அவங்க வீட்டுல டிவி பாத்துகிட்டே தூங்கிருவேன். அரசி ஆதித்யா சேனல் பாத்து காரணமே இல்லாம சிரிக்கிறது எரிச்சலா இருக்கும். எக்கேடும் போன்னு ஒரு மொற மொறச்சிட்டு கொறட்ட விட்டு தூங்க ஆரம்பிச்சிருவேன்.

மணி என்ன பாக்கும் போதெல்லாம் அரசியப் பத்தியே பேசுவான். அவனும் எங்க தெரு தான். “லூசுப்பய மாதிரி பேசாத“ன்னு எரிச்சலா சொன்னாலும் ஒரு மாதிரியா பல்லக் காட்டுவான். “ஏல! கல்யாணம் முடிஞ்சு ஃபஸ்ட் நைட்ட ஏன் பொண்ணு வீட்ல வைக்கிறாங்கன்னு தெரியுமா? தன்னோட வீட்டுல தான் பொண்ணுங்க சகஜமா கூச்சமில்லாம இருப்பாங்க. புதுசா ஒரு வீட்டுக்கு போகும் போது கொஞ்ச நாளைக்கு பயமும் கூச்சமுமா இருக்கும்”. “இப்போ அதுக்கென்னல? ஏன் சம்மந்தம் இல்லாம பேசுற?”ன்னு கேட்டப்போ “போடா போ! ஒனக்கு எப்படி ஒரு சான்ஸ் கெடச்சிருக்குன்னு தெரியாம இருக்க”ன்னு மணி சிரிச்சான்.  எனக்கு வாயில கெட்ட வார்த்தையா வந்தது.

பாவிப்பய மணி எந்த நேரத்துல அத சொல்லித் தொலச்சானோ? அன்னைக்கு அரசி வீட்டுல காவல் இருந்தப்போ சரியான மழை. குளிர்ந்த காத்து வேற. குளிருக்கு எதமா அப்ப தான் அவிச்ச பனக்கிழங்கு இருந்தது. சூடான கெழங்க எடுத்து உரிக்கும் போது அதோட வாசம் மழை வாசத்தோட சேர்ந்து ஒரு புது தினுசா இருந்தது. நாலாவது கெழங்க கடிச்சு உரிக்கும் போது “சூடா இருக்கா?”ன்னு அரசி கேட்டா. பாவம் டிவில எதுவும் ஓடலேன்னு என்கிட்ட பேசுறான்னு நெனச்சுகிட்டேன். “நானும் அப்படித்தான் இருக்கேன்” பிசிறு தட்டின குரல்ல அரசி சொன்னப்போ எனக்கு என்னன்னு நெனைக்கன்னே தெரில. அமைதியா கெழங்க உரிச்சு பயத்தையும் சேர்த்து மென்னு தின்னேன். “இங்க ஒருத்தி கெழங்கு மாதிரி இருக்கேன். நீ என்னடான்னா பனங்கெழங்க உரிக்கிற. லூசு!”. பனங்கிழங்கு வாசத்தோட அரசி வாசமும் சேர்ந்துச்சு. மழை வாசம், பனங்கிழங்கு வாசம், அரசியோட வாசம், என்னோட வாசம் எல்லாமும் சேர்ந்து மூச்சு முட்டித் தவிச்சேன். எல்லாத்துக்கும் மேல இன்னொரு வாசத்தையும் மொத மொதலா அனுபவிச்சேன். அரசி தன்னோட நெலைல இல்ல. அவளும் மூச்ச வேகமா இழுத்து எல்லா வாசத்தையும் தீர்த்துடுற வேகத்துல இருந்தா.

ரொம்ப நாள் கழிச்சு அரசிய நேத்து வழில பாத்தேன். மொதல்ல அடையாளமே தெரில, ரொம்பவே பூரிச்சிருந்தா. ஊர்ல இருந்து அம்மா வீட்டுக்கு வர்றா போல, அவ கூட மணி ஒரு கைல பச்சப்புள்ளையவும் இன்னொரு கைல சூட்கேசையும் தூக்கிட்டு நடந்து வந்தான். அதே சிரிப்பு இப்பவும்.  அப்பத்தான் வாங்கின பனங்கிழங்கு கட்டு என் கூடைல இருந்தது. அரசிதான் மொதல்ல பேசுனா “நல்லாயிருக்கியாடே? இன்னும் பனங்கெழங்கு வாசத்த மறக்கல போல!”.