தருமத்தின் அளவுக்கேற்றபடி ஈசன் அருள்வான்

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே. – (திருமந்திரம் – 256)

விளக்கம்:
முற்றும் துறந்தவர்க்கு தனியாக சுற்றம் என்று யாரும் இல்லை. உலகம் முழுவதும் அவர்களுக்கு சுற்றம் தான். இறந்தார் போல் வாழும் ஞானியர்க்கு இந்த உலக இன்பங்களில் நாட்டம் இராது. தன்னை மறந்தவர்க்கு ஈசன் துணையாக வர மாட்டான். செய்யும் தருமத்தின் அளவுக்கேற்றபடி ஈசன் வெளிப்பட்டு அருள்வான்.


யமனுக்கு கண்மண் தெரியாது

தன்னை அறியாது தான்நலர் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.  – (திருமந்திரம் – 255)

விளக்கம்:
வலிமை மிகுந்த யமன் நம்மைக் கவர வரும்போது, நம்மை யாரென்று பார்க்க மாட்டான். நாம் நல்லவனா கெட்டவனா என்பது பற்றிய கவலை அவனுக்குக் கிடையாது. நம்முடைய வறுமை பற்றி அவனுக்குத் தெரியாது. நம்முடைய வயதும் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் வலிமையைக் காட்டுவான். அந்த யமன் வருவதற்கு முன்பே நாம் ஆற்றலுடன் நல்ல தவத்தை செய்து புண்ணியத்தை தேடிக் கொள்வோம்.


அழுக்கினை ஓட்டி அறிவை நிறைப்பீர்

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.  – (திருமந்திரம் – 254)

விளக்கம்:
நம் வாழ்நாளில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மன அழுக்குகளை போக்கி அறிவைப் பெருக்கிக் கொள்ளாமல் இருக்கிறோம். செழிப்பாய் இருக்கும் காலத்தில் தருமமும் செய்வதில்லை. அறம் செய்யாமல் உயிர் வாழ்ந்து என்ன பயன்? இந்த உடல் எரிந்து அழியும் நேரத்தில் நமக்கென ஒரு புண்ணியமில்லாமல் என்ன செய்யப்போகிறோம்?

தருமம் செய்யாதவரை ஏழை நெஞ்சீர் என சொல்கிறார் திருமூலர்.

(தழுக்கிய – செழிப்பாய் இருந்த,  வெம்மை – தீ)


சிவஞானியர்க்கு உணவு அளிக்க வேண்டும்

அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயனறி யாரே. – (திருமந்திரம் – 253)

விளக்கம்
பற்றுக்களை நீக்கிய சிவஞானியர்க்கு உணவு அளிப்பதே அறம் ஆகும் என்னும் உண்மையை மனிதர்கள் படித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கிணற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ அமர்ந்திருக்கும் சிவஞானியரைத் தேடிப் போய் அழைத்து வந்து உணவு உண்ணச் செய்வதில்லை. அதன் பயனை  இன்னும் அவர்கள் அறியவில்லை.


யாவர்க்கும் எளியது

யாவர்க்கு மாமிறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. – (திருமந்திரம் – 252)

விளக்கம்
யாவர்க்கும் எளியது இறைவனுக்கு கொஞ்சம் பச்சிலை சாத்தி வணங்குதல்.
யாவர்க்கும் எளியது பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தல்.
யாவர்க்கும் எளியது உணவுக்கு முன் ஒரு கையளவு தர்மம் செய்தல்.
யாவர்க்கும் எளியது பிறரிடம் இனிமையாய் பேசுதல்.


என்னை அறிந்தால்!

தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே. – (திருமந்திரம் – 251)

விளக்கம்:
தன் இயல்பை அறிந்தவர் சிவபெருமானின் திருவடியை வணங்குபவர் ஆவார். தன் இயல்பை அறிந்தவர் அற வாழ்க்கை மேற்கொள்வார். தன் இயல்பை அறிந்தவர் சில தத்துவங்களை உணர்ந்தவர் ஆவார். தன் இயல்பை அறிந்தவர்க்கு சிவனே நெருங்கிய உறவினன் ஆவான்.

தன்னை அறிந்து கொள்வதே ஆன்மிகத்தில் முக்கியமானதாகும்.


உணவைப் பகிர்வோம்

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. – (திருமந்திரம் –250)

விளக்கம்:
யாவர்க்கும் அன்னம் இடுங்கள். அவருக்கா, இவருக்கா என்று பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் இடுங்கள். சாப்பிடும் முன் மற்றவர்க்கு பரிமாறியாயிற்றா என பார்த்து விட்டு சாப்பிடுங்கள். பழைய பொருள்களை சேர்த்து வைக்காமல், பிறருக்கு தானமாக கொடுங்கள். பிடித்த உணவானாலும் வேகமாக உண்ணாதீர்கள். காகங்கள் உண்ணும் காலம் அறிந்து, அவற்றிற்கும் உணவு இடுங்கள்.


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.  – (திருமந்திரம் – 249)

விளக்கம்:
மலைப்பகுதிகளில் நின்று பெய்யும் அருவி போன்ற மழையைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. மழையைப் பார்த்தால் உள்ளத்திலும் உற்சாக மழை ஊறும். மழை நீரில் நுரையில்லை, அழுக்கு இல்லை. அது தெளிவான நீர் ஆகும். மழைக்கு கரை கிடையாது, அது பெய்யும் பரப்பு அவ்வளவு அகன்றதாகும். மழை என்பது நம் தலைவனாம் சிவபெருமான் நமக்குத் தரும் சுத்தமான இரத்தினம் ஆகும்.


மழையே வருக! வளமெல்லாம் தருக!

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.  – (திருமந்திரம் – 248)

விளக்கம்:
மாமழை நீரினாலே உணவுப் பொருட்கள் பெருகும். உலகமெங்கும் இனிமையான பல மரங்கள்  உண்டாகும். பாக்கு, தென்னை, கரும்பு மற்றும் வாழை மரங்கள் செழிக்கும். இவற்றோடு மருத்துவ குணம் கொண்ட எட்டி மரங்களும் அங்கே உருவாகும்.

அமுது என்னும் சொல்லுக்கு முதல் வரியில் உணவு என்னும் பொருளும், அடுத்த வரியில் இனிமை என்னும் பொருளும், கடைசி வரியில் மருந்து என்னும் பொருளும் பொருத்தமாய் அமைகிறது. வானச் சிறப்பு சொல்லும் இப்பாடலைப் பாடி மழை வேண்டுவோம்.

(கமுகு – பாக்கு,  தெங்கு – தென்னை,  காஞ்சிரை – எட்டி)


அவரவர் சமயத்தில் நிற்க வேண்டும்

தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே. – (திருமந்திரம் – 247)

விளக்கம்:
ஒவ்வொருவரும் அவரவர் சமயத்தின் நெறியிலே நிற்க வேண்டும். அப்படி நில்லாதவர்க்கு சிவ ஆகமத்தில் சொல்லி உள்ளபடி, அவர்களுடைய மறுபிறவியில் என்ன தண்டனை வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஆனால் இந்த பிறவியிலேயே தண்டனை கொடுத்து அவர்களைத் திருத்த வேண்டியது மன்னனின் கடமையாகும்.