அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. – (திருமந்திரம் – 248)
விளக்கம்:
மாமழை நீரினாலே உணவுப் பொருட்கள் பெருகும். உலகமெங்கும் இனிமையான பல மரங்கள் உண்டாகும். பாக்கு, தென்னை, கரும்பு மற்றும் வாழை மரங்கள் செழிக்கும். இவற்றோடு மருத்துவ குணம் கொண்ட எட்டி மரங்களும் அங்கே உருவாகும்.
அமுது என்னும் சொல்லுக்கு முதல் வரியில் உணவு என்னும் பொருளும், அடுத்த வரியில் இனிமை என்னும் பொருளும், கடைசி வரியில் மருந்து என்னும் பொருளும் பொருத்தமாய் அமைகிறது. வானச் சிறப்பு சொல்லும் இப்பாடலைப் பாடி மழை வேண்டுவோம்.
(கமுகு – பாக்கு, தெங்கு – தென்னை, காஞ்சிரை – எட்டி)