உள்ளே ஊறும் அமுதத்தை நாடுவோம்!

உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே. – (திருமந்திரம் – 336)

விளக்கம்:
நம்முள்ளேயே அமுதம் ஊறும் ஒரு ஊறல் உள்ளது. அந்த ஊறலைத் திறந்து நாம் அமுதம் பருகுவதில்லை. நம் சிவபெருமானின் திருவடியையும் நாம் எண்ணுவதில்லை. சமாதி நிலையை நாடி அதில் பொருந்தி இருப்பதுமில்லை. சமாதியில் இருந்தால் அருள் நீரால் நலம் பெறலாம். சமாதி நிலையில் நின்று தொடர்ந்து கவனித்துப் பார்த்தால் பிராணன் செயல்படும் முறையைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பாடலுடன் திருமந்திரத்தின் முதல் தந்திரம் நிறைவு பெறுகிறது.


மது அறிவை அழிக்கும்!

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே. – (திருமந்திரம் – 335)

விளக்கம்:
சிவயோகியர்  தங்கள் பிராணனை வசப்படுத்தி, புருவ மத்தியில் ஊறும் அமிர்தத்தை உணர்ந்து அனுபவிக்கிறார்கள். மற்ற சிலர் மதுவினால் எண்சித்திகளைப் பெறலாம் என்னும் பொய்யான உபதேசத்தை நம்பி மதுவை நாடுகிறார்கள். அவர்கள் மது மயக்கத்தினால் தங்கள் அறிவை இழக்கிறார்கள்.


சிவானந்தமே பரமானந்தம்!

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே. – (திருமந்திரம் – 334)

விளக்கம்:
நம்முள்ளே ஊறும் சிவானந்தத் தேறலே நமக்கு உண்மையான இன்பம் தரும் மதுவாகும். அந்தச் சிவானந்தத் தேறல் நம்முடைய அறிவு மயக்கத்தைப் போக்கும். பொய்யான தத்துவங்களை நீக்கும். நாமே சிவம் ஆவோம். பொய்யான தவமுறைகளை நீக்கி உண்மையான போகத்துள் போகச் செய்யும். நாம் உண்மை என்று நம்பும் இந்த உலக இன்பத்தை மறந்து, பரமானந்தம் பெறுவோம்.


சிவசக்தியை வழிபட்டால் எண்சித்திகள் கிடைக்கும்

சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. – (திருமந்திரம் – 333)

விளக்கம்:
சக்தியை உடையவன் நம் சிவபெருமான். நம் சிவபெருமானின் அருள் நமக்குக் கிடைத்தால், சக்தியின் அருளும் கிடைத்த மாதிரிதான். அதே போல சக்தி நமக்கு அருள் செய்தால், சிவன் அருளும் சேர்ந்தே கிடைக்கும். சிவன், சக்தி இருவரையும் நம் மனத்தில் வைத்து வழிபட்டால் எட்டுப்  பெருஞ்சித்திகளும் நம்மை வந்தடையும்.

எண்சித்திகள் – அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்வம், வசித்வம்


மது நம் ஆற்றலை அழிக்கும்

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. – (திருமந்திரம் – 332)

விளக்கம்:
சக்தியின் அருளை வேண்டிச் சிலர் மது அருந்துகிறார்கள். இது அறியாமை ஆகும். மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள். தம்மை மறந்தால் அவர்களுடைய ஆற்றல் அழியும். உண்மையில் சக்தி என்பது சிவஞானத்தினால் கிடைப்பது. நாம் சிவஞானம் பெற முயற்சி செய்வோம். அந்தச் சத்திய ஞானத்தைப் பெறுவதே ஆனந்தமாகும்.


இரட்டை நிலைகளைக் கடக்கலாம்

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே. – (திருமந்திரம் – 331)

விளக்கம்:
பிற எண்ணங்களைத் தவிர்த்து, நினைப்பும் இல்லாத, மறப்பும் இல்லாத நிலையில் அமர்ந்திருந்தால் உள்ளே சிவானந்தத் தேன் ஊறும். நிறைய பேர் இதைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை. இரவு, பகல் என்னும் இரட்டை நிலைகளைக் கடந்தவன் நம் சிவபெருமான். அவனுடைய திருவடி இன்பத்தில் திளைத்து, இரவு, பகல் என்னும் மாயைகளை அகற்றி நின்றேன்.


மதுவினால் மனச்சஞ்சலம் உண்டாகும்

மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. – (திருமந்திரம் – 330)

விளக்கம்:
மது தடுமாற்றத்தையும், மனச்சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். வாய்மை முதலிய நல்ல குணங்களை அழிக்கும். மது அருந்துபவர்கள் இன்பத்துக்காக பொதுமகளிரை நாடி அவர்களிடமே முயங்குவார்கள். இல்லாளிடம் கிடைக்கும் இன்பமே இனிமை என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்களுக்கு இடையறாத ஆனந்தம் கிட்டுமோ?

தியங்கு – மனச்சஞ்சலம்


மது மயக்கம் வேண்டாமே!

மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே. – (திருமந்திரம் – 329)

விளக்கம்:
சமயத்தின் பெயரால் மது அருந்துபவர்கள் மூடர்கள். மயக்கம் தரும் மதுவை அருந்தும் மூடர்கள் எதையும் ஆராய்ந்து அறியும் திறன் இல்லாதவர்கள். உலகப்பற்று என்பது பெரும் மயக்கம். மது என்னும் மயக்கத்தினால் உலகப்பற்று என்னும் மயக்கத்தை தெளிவிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஒரு மயக்கத்தினால் இன்னொரு மயக்கம் தெளியாது. இன்னும் மயக்கம் அதிகமாகவே ஆகும்.


மது உண்மையை மறைக்கும்

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 328)

விளக்கம்:
மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் வேதங்களின் கருத்தை அறிய மாட்டார்கள். பதி, பசு, பாசம் என்பவற்றில் உள்ள உட்பொருளை அவர்கள் உணர்வதில்லை. அருளை வாரி வழங்கும் வள்ளலான சிவபெருமானிடம் அருள் பெற்று நல்லதொரு வாழ்க்கை வாழ மது அருந்துபவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தெளிந்த ஞானம் பெற்ற சிவயோகியரோடும் சேர மாட்டார்கள்.


நம் உள்ளே ஊறும் மது

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. – (திருமந்திரம் – 327)

விளக்கம்:
தீயவர்கள் தான் மது அருந்துகிறார்கள், அதனாலேயே சீக்கிரம் சாகிறார்கள். காமத்தை மதுவாக நினைத்துக் கொண்டாடுபவர்கள், வாழ்க்கையில் மிகுந்த துன்பத்துக்கு ஆளாவார்கள். வெளியே கிடைக்கும் மதுவால் தான் இத்தனை துன்பம் எல்லாம். வேள்வியினால் நமக்குள்ளே தோன்றும் உள்ளொளியில் ஒரு மது ஊறும். சிவ நாமத்தை ஓதுபவர்கள் அதை உணர்வார்கள். உள்ளூறும் அந்த மதுவை ருசிக்கும் சிவனடியார்கள் அன்றே சிவனை சமீபத்தில் காணும் இன்பம் பெறுவார்கள்.