சூக்கும உடலும் அழிய வேண்டும்

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.   – (திருமந்திரம் – 426)

விளக்கம்:
மூன்று வகையான சங்காரங்களை வேறு விதமாகச் சொல்வதென்றால், நித்திய சங்காரத்தில் தூல உடலும் சூக்கும உடலும் தற்காலிக ஓய்வு பெறும் (தூக்கம்). ஆயுட் சங்காரம் என்பது தூல உடல் மட்டும் அழிவது (மரணம்). சருவ சங்காரம் என்னும் சுத்த சங்காரத்தில் தூல உடலும் அழிந்து, சூக்கும உடலும் அழியும். நமது ஆணவம் அழியப் பெற்றால் சிவனருளைப் பெற்று உய்வடையலாம்.

நமது மரணத்தின் போது, சூக்கும உடலும் அழிய வேண்டும். அதுவே நாம் உய்வடையும் வழி. அதற்கு வேண்டிய சிவனருளை வாழும் போதே பெற வேண்டும்.


மூவகைச் சங்காரங்கள்!

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே.   – (திருமந்திரம் – 425)

விளக்கம்:
சிவபெருமான் மூன்று வகையான சங்காரங்கள் செய்வது உண்டு. அவை நித்திய சங்காரம், ஆயுட் சங்காரம், சருவ சங்காரம் ஆகியனவாகும். நித்திய சங்காரம் என்பது நம்முடைய அன்றாடத் தூக்கம் போன்றது. ஆயுட் சங்காரம் என்பது நமது ஆயுள் முடிந்தவுடன் நமது உடல் மட்டும் அழிவதாகும். சருவ சங்காரம் என்பது உடலுடன் நமது ஆன்மாவும் தனது தொழிலை விட்டுச் செயலற்று இருப்பது.

ஆணவம் அழியப் பெறுவதே நம்மை உய்வடையச் செய்யும் சங்காரமாகும். நாம் அந்தச் சங்காரத்தைச் செய்தால் சிவனருள் கிடைப்பது உறுதி.


அழிவு நிச்சயம்!

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.   – (திருமந்திரம் – 424)

விளக்கம்:
மலைகளின் மேலே உள்ள மேகங்களில் இருந்து மழையாக இறங்கி வரும் குலமகள், நீர்நிலைகளிலும், கடலிலும் தங்கி நமக்கெல்லாம் வாழ்வளிக்கிறாள். அதே நேரத்தில், நம் சிவபெருமான் தான் பக்குவம் செய்த இந்த மொத்த உலகத்தின் மீது நெருப்பை திரட்டி வைக்கிறான். அதனால் இந்த உலகிற்கு அழிவு என்பது உண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.


சிவபெருமானின் வல்லமை

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.   – (திருமந்திரம் – 423)

விளக்கம்:
பல வகையான உயிர்கள் வாழ இடம் தரும் நிலப் பகுதி, உச்சியில் பனி படர்ந்திருக்கும் மலைகள், நீர் நிறைந்த ஏழு கடல்களின் பரப்பு, இவை அனைத்தையும் சிவபெருமான்  அக்கினியால் அழித்து வெட்டவெளி ஆக்கி விடுவான். இதைச் செய்ய அவனுக்குத் தும்மல் போடும் நேரம் போதும். அவனது வல்லமையை உணர்ந்தவர்க்கு இதில் வியப்பு அடைய எதுவுமில்லை.

பதம் – இடம், உத(க)ம் – தண்ணீர், குதம் – தும்மல், ஓதம் – கடல் அலை


கற்ப சங்காரம்

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.   – (திருமந்திரம் – 422)

விளக்கம்:
மூன்று வகையான சங்காரங்களில் கற்ப சங்காரம் என்பதும் ஒன்று. அச்சங்காரத்தின் போது இந்த மொத்தப் படைப்பும் அழிக்கப்படும். அந்நிகழ்வை கற்பனை செய்து பார்த்தால், கற்ப சங்காரத்தின் போது இந்த உலகம் உலையில் கொதிக்கும் மெல்லிய அரிசி போல் உழன்று தவிக்கும். அப்போது மலைகள் நிரம்பிய பெரிய நிலப்பகுதிகளும் கூட எரிந்து அழியும்.

சங்காரம் – அழித்தல்


நெருப்பு – சிவபெருமானின் கை அம்பு!

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.   – (திருமந்திரம் – 421)

விளக்கம்:
சிவபெருமான் உலகை அழிப்பது நெருப்பினாலே. கடல் நீர் மிகாதவாறு தடுப்பதும் நெருப்பினாலே. அசுரர்களை அழித்ததும் நெருப்பினாலே. நெருப்பு சிவபெருமானின் கை அம்பாக விளங்குகிறது.


உள்ளொளி நாடி ஞானம் பெறுவோம்!

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.   – (திருமந்திரம் – 420)

விளக்கம்:
சிவன் நாம் அணுகுவதற்கு எட்டாத தூரத்தில் இருப்பவன் போலத்தான் தோன்றும். நாம் நமது உள்ளொளியான குண்டலினியை நாடித் தியானம் செய்தால் ஞான வடிவில் சிவபெருமானை உணரலாம். ஞானத்தினால் மட்டுமே அவனை உணரலாம், அவனை அடையலாம், பிறவி அறுக்கலாம். உள்ளொளி நாடி ஞானம் பெறாமல், அவனைப் பணிந்தாலும், நாம் ஞானம் பெறும் வரை அவன் நமக்கு அடுத்தடுத்து பிறவிகளைத் தந்து கொண்டே தான் இருப்பான்.


யோக வழியில் நின்றால் அவனைக் காணலாம்

தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.   – (திருமந்திரம் – 419)

விளக்கம்:
நமது உடலுக்கு உயிரைத் தாங்கும் தன்மையைத் தருபவன் சிவபெருமான். வாழும் காலம் முடிந்து உயிர் உடலை விட்டுப் பிரியும் போதும், நம் உயிருக்கு அவன் ஒருவனே துணையாவான். ஏழு பிறவிகளிலும் அச்சிவபெருமானை நாம்  யோக வழியில் நின்று காணலாம். நம்மை யோக வழியில் நிலையாக நிற்கச் செய்பவனும், கொன்றை மாலையை அணிந்துள்ள நம் சிவபெருமான் தான்.


உடலாய் உயிராய் உணர்வாய்

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே.   – (திருமந்திரம் – 418)

விளக்கம்:
தூய உயிராகிய நந்தியம் பெருமான் பரந்த பெருவெளி எங்கும் இலங்கும் ஒளியாக விளங்குகிறான். அவன் நமது உடலாகவும், உள்ளே விளங்கும் உயிராகவும் இருக்கிறான். உயிராக இருப்பது மட்டுமல்லாமல், நமது உணர்வாகவும் இருந்து, நமது உயிர் உடலை விட்டு நீங்காமல் காக்கவும் செய்கிறான் நந்தியம் பெருமான்.


வனைய வல்லான்!

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.   – (திருமந்திரம் – 417)

விளக்கம்:
நமக்கெல்லாம் உருவம் கொடுத்தவன் சிவபெருமான். உலகில் நாம் காணும் அனைத்துப் பொருட்களையும் உருவமைத்தவன் அவனே! அனைத்து உயிர்களிலும் அவனே இருந்து நமக்கெல்லாம் வடிவம் தருகிறான். தான் படைத்த உலகையும் அதில் வாழும் உயிர்களையும் காப்பவன் நம் சிவபெருமானே. உலகில் வாழும் உயிர்களுக்கு பிறவியை நிர்ணயிப்பவனும் அவனே. மனிதர்களை மட்டுமல்ல, சின்னஞ்சிறு உயிரினம் முதல் பெரிய விலங்குகள் வரை எல்லாவற்றையும் படைப்பவன் அவனே. அவனே வனைய வல்லான்.