உலகின் மிகப்பெரிய மலர்

அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.   – (திருமந்திரம் – 525)

விளக்கம்:
மிகப்பெரிய மலராக மலர்ந்து நிற்கும் சிவபெருமானின் அதோமுகத்தின் அழகைப் பற்றிக் கேளுங்கள். அம்முகம் நூறு இதழ்களைக் கொண்ட பெரிய மலராக விரிந்து நிற்கிறது. பார்க்க மலரைப் போல இருந்தாலும் அதோமுகத்தின் சக்தி முடிவில்லாதது. அளவில்லாத அந்த சக்திக்குக் காரணம் அம்முகம் நம் சிவபெருமானுடையது ஆகும்.


அதோமுகன்!

அதோமுகம் கீழண்ட மான புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.   – (திருமந்திரம் – 524)

விளக்கம்:
மிகப் பழமையானவன் நம் சிவபெருமான். அவன் தனது அதோமுகத்தின் கீழே இந்த உலகத்தைப் படைத்திருக்கிறான். அவனே இந்த உலகமாக இருக்கிறான். இவ்வுலகின் அனைத்து உயிர்களிலும் கலந்திருந்து அவற்றை இயக்குகிறான். அதோமுகமாக இயங்கும் அதே சிவபெருமான்தான் தாமரை மலரை மாலையாக அணிந்துள்ள நான்முகன் பிரமனாகவும் விளங்குகிறான். பிரளயத்தால் இந்த உலகம் அழியும் காலத்தில் ஊழித்தலைவனாக நிற்பதும் நம் சிவபெருமானே!


உந்து சக்தியாக நிற்கும் அதோமுகம்!

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.   – (திருமந்திரம் – 523)

விளக்கம்:
மூலாதாரத்தில் எழுந்து சுழுமுனை வழியாக ஓங்கி வளரும் நந்தியம்பெருமான் சகஸ்ரதளத்தில் செந்தீயாகச் சுடர் விடும் போது சிவனென நிற்பார். அங்கே சிவபெருமானின் அதோமுகம் வெளிப்படும். அந்தி நேரத்தின் நிறம் கொண்ட சிவபெருமானின் அதோமுகம் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் உந்து சக்தியாகக் கலந்திருந்து வலம் வருகிறது.