இவைதான் அட்டமாசித்திகள்!

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாதல் என்றெட்டே. – (திருமந்திரம் – 668)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தினால் நாம் பெறும் அணிமா முதலான அட்டமாசித்திகள் இவையாகும்.

1. அணிமா – அணுவில் அணுவாக இருத்தல
2. மகிமா – அனைத்தையும் விட பெரிதாக இருத்தல்
3. இலகிமா – புகை போல லேசாக இருத்தல்
4. கரிமா – அசைக்க முடியாத கனம் உடையதாக இருத்தல்
5. பிராத்தி –  விரும்பியவற்றை அடைதல்
6. பிராகாமியம் – எல்லாப் பூதங்களிலும் கலந்து எழுதல்
7. ஈசத்துவம் – அனைத்தையும் ஆளும் திறன்
8. வசித்துவம் – எல்லாவற்றையும் வசியம் செய்யும் ஆற்றல்


தியானத்தினால் திருவருளைப் பெறலாம்

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே. – (திருமந்திரம் – 667)

விளக்கம்:
தியானத்தின் போது நாடியின் உள்ளே மங்கல ஒலியைக் கேட்கலாம். தியானத்தில் நாம் தேடும் திருவருளைப் பெற்று அத்திருவருளின் துணை கொண்டு, நம்முள் உள்ள காமம், குரோதம் முதலான பகைவர்களைச் செயல் இழக்கச் செய்வோம். தியானத்தில் நாம் பெறும் திருவருள், ஆன்மிகத்தில் நாம் இன்னும் உயர்நிலையை அடைய மணிவிளக்காகத் துணை வரும்.


சிவனை மடக்கலாம்! வசப்படுத்தலாம்!

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே. – (திருமந்திரம் – 666)

விளக்கம்:
புலன்கள் ஒடுங்கி பிராணாயாமத்தில் மனம் ஒருமைப்பட்டு இருந்தால் மூச்சுக்காற்றின் போக்கு மடங்கி அடங்கி நம் வசப்படும். பிராணாயாமத்திலேயே மனம் லயித்திருந்தால், நடங்கொண்ட கூத்தனான சிவபெருமானும் நம்மை நாடி வருவான். வந்து நம் உயிரோடு மடங்கிக்  கலந்திடுவான்.


மிடைவளர் மின்கொடி!

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை யாறேழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே. – (திருமந்திரம் – 665)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடகலை, பிங்கலை வழியாக நாம் மூச்சை முறைப்படுத்தும் போது, நமது மூச்சின் ஓட்டம் சாந்தப்படும். மின்கொடியாகிய குண்டலினி தடை தகர்ந்து மேல் எழும். நம்முள்ளே ஒரு குளிர்ந்த ஒளி தோன்றும். அவ்வொளியில் நம் மனத்துக்கு நெருக்கமாக குண்டலினி வளர, நம் மனமும் யோகத்தில் ஒடுங்கி அமைதி பெறும்.