உடல் இன்பத்தை விட்டு யோக இன்பத்தைப் பெறுவோம்

போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே – 826

விளக்கம்:
புறக்கலவி என்னும் உடல் இன்பத்தில் நம் மனம் லயித்திருக்கும் வரை, நமக்கு சகசிரதளம் என்னும் படிக்கதவு திறக்கப்படாது.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களால் சூதை விட முடியாது, சூதும் அவர்களை விடாது. சூதனாகிய சிவபெருமானை பொருத்தவரை, மென்முலைகள் கொண்ட குண்டலினி சக்தி ஒரு சூதுப்பொருள். இருவருக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு, சூதுக்கும் சூதாடுபவனுக்கும் இருக்கும் ஈர்ப்பு போன்று அடர்த்தியானது. பரியங்க யோகத்தினால், குண்டலினியாகிய சக்தியை, சகசிரதளத்தில் இருக்கும் சிவபெருமானை அடையச் செய்தால், தேனில் குழைந்தது போல் விந்து நாதத்தில் கலந்து விடும்.

பரியங்கயோகத்தினால் விந்து என்னும் உயிர்சக்தி வீணாகமல் சிவத்தில் கலந்து விடும்.

போகம் – புறக்கலவி இன்பம், உன்னுதல் – நினைத்தல், வெள்ளி – வெண்ணிற விந்து, வியாழம் – நாதம், நற்சூதன் – சிவன், தாது – தேன்