உண்மையான இன்பம் தரும் மது

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே. – (திருமந்திரம் – 325)

விளக்கம்:
மனம் உருக அந்தச் சிவபெருமானை நினைத்து சமாதி நிலையில் இருக்கும் போது, சிவானந்தம் என்னும் மது தொடர்ந்து ஊறும். அதுவே உண்மையான இன்பம் தரும் சுத்தமான மதுவாகும். நம் உள்ளே ஊறும் அந்த சிவானந்த மதுவை நாம் விட்டு விடக்கூடாது. வெளியே கிடைக்கும் மற்ற மதுக்கள் எல்லாம் கீழானவை ஆகும். அவை நம்மை செயலற்றவராய் கிடக்கச் செய்து விடும்.


மது விலக்கு

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே. – (திருமந்திரம் – 324)

விளக்கம்:
அரிசி வடித்த நீரான கழுநீரை விரும்பிக் குடிக்கும் பசுக்கள், குளங்களைத் தேடிச் சென்று நல்ல நீரைப் பருகாது. நல்ல நீரைப் பருகாமல் கழுநீரை மட்டுமே பருகுவதால், அந்தப் பசுக்கள் தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றன. சில மனிதர்களும் அது போலத்தான். மதுவில் தனக்கு தேவையான எல்லாமே இருப்பதாக நினைத்துப் பருகுகிறார்கள். அப்படி மது அருந்துபவர்கள் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து விலகுகிறார்கள். அவர்கள் உயர்வு தரும், உண்மையான இன்பம் மிகுந்த சிவானந்தத் தேனை அறியாதவர்கள்.


தோன்றிய துயரெல்லாம் துடைப்பான்

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. – (திருமந்திரம் – 323)

விளக்கம்:
நம் மனத்தில் தோன்றும் மாயைகளை எல்லாம் துடைப்பவன் சிவபெருமானே அன்றி வேறு யார்? அந்த ஈசனின் திருவடியை எந்நாளும் ஏற்று நிற்போம். முதல்வனான அவன் திருநாமத்தை இடைவிடாமல் பற்றி நிற்க முயற்சி செய்வோம். அப்படிப் பற்றி நின்றால் நடுநிலையாகிய யோகநிலையில் நின்றவர் ஆவோம்.

ஏன்று – ஏற்று,  மூன்று – முயன்று என்பதன் திரிபு, நான்று – பற்றி


நடுவுநிலையில் நின்று சிவன் ஆவோம்

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.  – (திருமந்திரம் – 322)

விளக்கம்:
நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானி ஆவார்கள். சிலர் சிவலோகத்தில் தேவர் ஆவார்கள். சிலர் சிவத்தன்மை அடைந்து சிவனாகவே ஆவார்கள்.

“அப்படிப்பட்ட நடுவு நிலை நிற்கும் அடியார்களில் ஒருவனாக நானும் நடுவு நிலையில் நின்றேனே” என்கிறார் திருமூலர்.


சிவத்தன்மை பெறலாம்

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.  – (திருமந்திரம் – 321)

விளக்கம்:
கரிய நிறம் கொண்ட அந்தத் திருமாலும் நடுவு நிலையில் நிற்கிறான். நான்கு வேதங்களை ஓதும் அந்த பிரமனும் நடுவு நிலையில் நிற்கிறான். நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானிகள் ஆவர். நாமும் நடுவு நிலையில் நின்றால், சிவத்தன்மை பெறலாம்.


நடுவு நிலையில் நிற்போம்

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.  – (திருமந்திரம் – 320)

விளக்கம்:
நடுவு நிலையில் நிற்பவர்க்கே ஞானம் கிடைக்கும். நடுவு நிலையில் நிற்பவர்க்கு நரகம் கிடையாது. நடுவு நிலையில் நிற்பவர் சொர்க்கத்தை அடைந்து அங்கே தேவர் ஆவார்.

“நானும் அவ்வழி நின்றேனே!” என்கிறார் திருமூலர்.


நம்முள்ளே சுடர் விடும் சோதி

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே. –  (திருமந்திரம் – 319)

விளக்கம்:
ஆதிக் கடவுளான நம் சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் மேலான ஒளியாகத் திகழ்பவன். அந்த சோதியே, அடியார்களாகிய நாம் தொடர வேண்டிய பெருந்தெய்வம் ஆகும். அந்த சோதியை நாம் வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நமக்குள்ளேயே அந்த சோதி சுடர் விட்டு விளங்குகின்றது. தம் உள்ளே இருக்கும் அந்த சோதியை வழிபட்டு உணரக்கூடிய கல்வி இல்லாதவர்கள், தமக்கும் அந்த மேலான சோதிக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்.


கல்வி என்பது வீண் வாதத்திற்காக அல்ல!

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.  –  (திருமந்திரம் – 318)

விளக்கம்:
சிலர்  ஞானம் பெறுவதற்கல்லாமல், தர்க்கம் செய்வதற்காகவே ஆன்மிக நூல்களைக் கற்பார்கள். அவர்கள் தீய குணம் உடையவர்கள், தங்கள் சுற்றமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடமாட்டார்கள்.  தன் குற்றங்களை நீக்கிக் கொள்ளாத அந்த மூடர்கள் எந்த விஷயத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். ஞானக் கல்வி பெற்று அன்பில் நிற்பவர்கள், வாழும் முறை அறிந்தவர் ஆவார்கள்.

கல்லாதவர்களை விட வீண் தர்க்கத்திற்காகவே கற்பவர்களால் ஏற்படும் தீமை அதிகம்.

(கலதி – தீயவர்,  வீடார் – விட மாட்டார்,   துரிசு – குற்றம்)


மூடரின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 317)

விளக்கம்:
கல்லாத மூடரைப் பார்ப்பதே துன்பம். அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கல்லாத மூடர்களுக்கு, தன்னைப் போன்ற கல்லாதவர் எல்லாம் நல்லவராகவே தெரிவார்கள். கல்லாத மூடர்க்கு எந்த விஷயத்திலும் உள்ள கருத்தை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது.


கணக்கு அறிந்தவர்!

கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. – (திருமந்திரம் – 316)

விளக்கம்:
நன்கு கல்வி கற்றவர்களே இறைவனைக் காணும் வழி தெரிந்தவர் ஆவார்கள். அவ்வாறு வழி தெரிந்தவர்களால், இறைவனின் தன்மையை உணர முடியும். அவர்களுக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும், அந்த இறைவன் பரவியிருக்கும் தன்மையை அவர்கள் உணர்வார்கள்.