தோன்றிய துயரெல்லாம் துடைப்பான்

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. – (திருமந்திரம் – 323)

விளக்கம்:
நம் மனத்தில் தோன்றும் மாயைகளை எல்லாம் துடைப்பவன் சிவபெருமானே அன்றி வேறு யார்? அந்த ஈசனின் திருவடியை எந்நாளும் ஏற்று நிற்போம். முதல்வனான அவன் திருநாமத்தை இடைவிடாமல் பற்றி நிற்க முயற்சி செய்வோம். அப்படிப் பற்றி நின்றால் நடுநிலையாகிய யோகநிலையில் நின்றவர் ஆவோம்.

ஏன்று – ஏற்று,  மூன்று – முயன்று என்பதன் திரிபு, நான்று – பற்றி


நடுவுநிலையில் நின்று சிவன் ஆவோம்

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.  – (திருமந்திரம் – 322)

விளக்கம்:
நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானி ஆவார்கள். சிலர் சிவலோகத்தில் தேவர் ஆவார்கள். சிலர் சிவத்தன்மை அடைந்து சிவனாகவே ஆவார்கள்.

“அப்படிப்பட்ட நடுவு நிலை நிற்கும் அடியார்களில் ஒருவனாக நானும் நடுவு நிலையில் நின்றேனே” என்கிறார் திருமூலர்.


சிவத்தன்மை பெறலாம்

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.  – (திருமந்திரம் – 321)

விளக்கம்:
கரிய நிறம் கொண்ட அந்தத் திருமாலும் நடுவு நிலையில் நிற்கிறான். நான்கு வேதங்களை ஓதும் அந்த பிரமனும் நடுவு நிலையில் நிற்கிறான். நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானிகள் ஆவர். நாமும் நடுவு நிலையில் நின்றால், சிவத்தன்மை பெறலாம்.


நடுவு நிலையில் நிற்போம்

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.  – (திருமந்திரம் – 320)

விளக்கம்:
நடுவு நிலையில் நிற்பவர்க்கே ஞானம் கிடைக்கும். நடுவு நிலையில் நிற்பவர்க்கு நரகம் கிடையாது. நடுவு நிலையில் நிற்பவர் சொர்க்கத்தை அடைந்து அங்கே தேவர் ஆவார்.

“நானும் அவ்வழி நின்றேனே!” என்கிறார் திருமூலர்.