மன்னனின் கடமை

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே. – (திருமந்திரம் – 240)

விளக்கம்:
இந்த உலகில் நம் அனைவருக்குமே ஆளுக்கொரு வேடம் அளிக்கப்பட்டிருக்கிறது. கொண்ட வேடத்திற்கு என்று சில கடமைகள் உண்டு. கடமையைச் செய்யாமல் வெறும் வேடம் மட்டும் போட்டுக்கொள்வதால் என்ன பயன்? தமது கடமைகளைச் செய்யாதவர்களை, அந்நாட்டின் வலிமை மிகுந்த மன்னன் நெறிப்படுத்த வேண்டும். அது மன்னனின் கடமை. மன்னன் தனது இந்தக் கடமையைச் சரிவரச் செய்தால், அவனுக்கு வீடுபேறு கிடைக்கும்.


ஆட்சி செய்யும் முறை

நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. – (திருமந்திரம் – 239)

விளக்கம்:
ஒரு நாட்டின் மன்னன் தினமும் தன்னுடைய ஆட்சி நன்னெறிப்படி நடக்கிறதா என்பதை ஆராய்ந்து, தினமும் நீதிமுறைகளின் படி தவறுகளைச் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாள்தோறும் நாட்டின் வளம் குன்றும், மக்களிடையே அறியாமை வளரும். மன்னனின் செல்வம் நாள்தோறும் குறைந்து அவன் புகழும் மங்கி விடும்.


கல்லாத அரசனை விட காலன் நல்லவன்

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே. – (திருமந்திரம் – 238)

விளக்கம்:
கல்வி இல்லாத அரசனும், உயிரைப் பறிக்கும் யமனும் ஒப்பிட்டு பார்த்தால் ஒன்றே ஆவர். சொல்லப்போனால் கல்லாத அரசனை விட அந்த யமன் மிகவும் நல்லவன். கல்வி இல்லாத அரசன் இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்று ஆராய்ந்து பார்க்க மாட்டான். அறவழி விசாரணை ஏதும் இன்றி கொல் என்று ஆனையிடுவான். ஆனால் அற வழியில் நிற்கும் நல்லவர்களை, யமன் அவ்வளவு லேசில் அணுக மாட்டான்.

(ஓரான் – ஆராய மாட்டான்)


புண்ணிய போகன்

தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. – (திருமந்திரம் – 237)

விளக்கம்:
அந்தணர்களின் சிவ சிந்தனையால் அவர்களின் அகப்பற்று, புறப்பற்று இரண்டும் அகலும். அகங்காரம் நீங்கும். சிவனைத் தவிர வேறு எதையும் அவர்கள் சிந்தை நாடாது. பிரணவத்தில் ஓர்ந்து அவர்கள் செய்யும் ஆகுதியை உண்ண தாமரை மலரில் வீற்றிருக்கும் அந்த புண்ணிய போகன் பிரமன் வருவான்.


சிறப்புடைய அந்தணர்கள்

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே. – (திருமந்திரம் – 236)

விளக்கம்:
நம்முடைய பிராணன் உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றுடன் ஒருங்கே இயங்கும் காலத்தில் நாம் நலமுடன் இருப்போம். மகிழ்ச்சியாக நல்லதையே பேசுவோம். அப்படி நலமுடன் இருக்கும் காலத்திலேயே அந்தணர்கள் வெற்றி தரும் சிவபெருமானை நாடி இருப்பார்கள். அவனைத் தேடிச்சென்று வணங்குவார்கள்.


நாதாந்த சித்தியும் முத்தியும்

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே. – (திருமந்திரம் – 235)

விளக்கம்:
வேதாந்த நெறியில் நின்று ஞானம் பெறுவதற்கு உரிய ஊழ் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. அந்த வாய்ப்பில்லாதவர்கள் நாத வடிவில் சிவனை நாடுவார்கள். ஞானத்தின் முடிவாய் விளங்கும் அந்தச் சிவனின் பக்கம் தம் சிந்தையை வைத்திருக்கும் அந்தணர்க்கு நாதாந்த சித்தியும் முத்தியும் கிடைக்கும்.


அந்தணர்கள் வாழும் நாடு

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே. – (திருமந்திரம் – 234)

விளக்கம்:
அழகிய அருள் வடிவான வேதங்களைப் படித்து, அவற்றின் மெய்ப்பொருளைச்  சிந்தை செய்யும் அந்தணர்கள் வாழும் நாடு வளம் மிகுந்த பூமியாக விளங்கும். அந்த வளம் என்றும் குறைவுபடாது. அந்த நிலத்தின் மன்னன் நல்ல ஆட்சியைத் தருவான். அந்த நாட்டில் காலையும் மாலையும் வேள்விகள் குறைவின்றி நடக்கும்.

அந்தண்மை – அழகிய அருள் தன்மை,  நந்துதல் – குறைதல்,  நரபதி – மன்னன்


வேதம் தெரிந்த அந்தணர்

மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே. – (திருமந்திரம் – 233)

விளக்கம்:
பிறப்பினால் அந்தணராக இருப்பது முக்கியமில்லை. உண்மையான அந்தணர்கள் தமக்குரிய வேதங்களைப் படித்து உண்மையை அறிவார்கள். அதனால் தூய்மையான பாதை எது, குறை உள்ள பாதை எது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். மற்றபடி பூணூல், குடுமி போன்றவை எல்லாம் வெறும் கோலாகலம் தான் என்பதை உணர்வார்கள். எல்லாவற்றிலும் நன்மை தீமைகளைப் பார்க்கத் தெரிந்தவர்களே வேதம் தெரிந்த அந்தணர் ஆவார்கள்.


தூய்மையான அந்தணர்கள்

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. – (திருமந்திரம் – 232)

விளக்கம்:
அறிவு, அறியாமை – இவை இரண்டுமே தேவை இல்லாத வழி சிறந்த வழியாகும். தூய்மையான அந்தணர்கள் அந்தச் சிறந்த வழியிலே சென்று குருவின் உபதேசத்தினால் சிவனின் திருவடியை அடைவார்கள். தம்முடைய விதி, வினைப்பயன் ஆகியவற்றிற்குக் காரணமான புறக்காரியங்களை விட்டு விட்டு யோக வழியிலே சென்று சமாதி நிலையை அடைவார்கள்.


அவர் பிராமணர் இல்லை

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.  – (திருமந்திரம் – 231)

விளக்கம்:
சத்தியத்தைக் கடைபிடிக்காமல், தனக்கென்று எந்த ஞானமும் இல்லாமல், மனத்தில் பதிந்து விட்ட ஆசைகளை விட்டு உண்மைப் பொருளை ஆராயும் உணர்வு இல்லாமல், பக்தியும் இல்லாமல், பரம்பொருளைப் பற்றிய உண்மையும் புரியாமல் இருப்பவர் பிராமணர் ஆக மாட்டார். அவர் பித்து பிடித்த மூடராவார்.

விட்டோரும் – விட்டு + ஓரும்