இன்னொரு நிழல்

ஆவிட் (Ovid) எனும் ரோம் நாட்டுக் கவிஞர் எழுதிய துரோகம் பற்றிய கவிதை ஒன்றை விருத்தமாக எழுத முயன்றேன்.

கரும்பாய் இனித்தவள் தீஞ்செய்கை
…. கசந்தும் உவப்பது அவள்தடவுகை!
அரும்பாய் மணப்பவள் எயிற்றினிலே
…. அமுதூறும் விடம்போல் பொய்யுமூறும்!
துரும்பென உணர்ந்தேன் வஞ்சியவள்
…. துடியிடை யில்நகக் குறிகண்டு!
தரும்என துயிர்தரும் சுகமனைத்தில்
…. தவிரஇன் னொருநிழல் விழக்கண்டேனே!


அது ஒரு காலம்

அது ஒரு காலம் –
மனிதன் அன்புடன் இருந்தான்.

அது ஒரு காலம் –
அவன் குரலிலே தன்மை இருந்தது.

அது ஒரு காலம் –
உலகில் நிபந்தனையற்ற அன்பு இருந்தது.

அது ஒரு காலம் –
வாழ்க்கை ஒரு இனிய பாடலாய் ஒலித்தது.

அது ஒரு காலம் –
அந்த பாடல் உணர்வு மிக்கதாய் இருந்தது.

பிறகொரு நாள் –
எல்லாம் மாறிற்று.

கனவு கண்டேன் ஒரு நாள் –
கனவினுள் கனவு வந்தது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அது பயமறியாத இள வயது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அப்போது வாழ்வதில் அர்த்தம் இருந்தது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அன்பு ஒரு நாளும் சாகாதெனெ.

கனவு கண்டேன் ஒரு நாள் –
கடவுளை கருணை உள்ளவராக.

பிறகொரு நாள் –
கனவெல்லாம் செலவழிந்த நிலை.
வாழ்வு கனவைக் கொன்றது.

Inspired by the movie – Les Misérables 2012


வெக்கை!

னியினால் அமையப் பெற்ற கோட்டை –
தனிமையில் நான் மட்டும் கூட்டமாக!
புரியாத குளிர் தாங்க முடியாமல்
எரித்து விட்டேன் அணிந்திருந்த உடைகளை!

வெறுமை!

மொத்த உலகும் என் அன்புப் பிடியில்
இருந்த அந்த கண நேர விநோத
நிலையில் தோன்றியதிது –

அறியாமையும் அவலமும்
தவிர்த்து பார்த்தால்,
புவியில் செய்யப்படும்
ஒவ்வொரு தீவினையும்
முன்னால் நிறைந்து நிற்கும் வெறுமையை
நிரப்பும் முயற்சி அது.
அதன் பின்னால் காத்துக் கிடக்கும்
மரணத்தை மறுக்கும் செயல் அது என்பது.

இப்போது புரிகிறது –
உலகின் ஒவ்வொருவரையும்
நான் வெறுக்க முடியுமென்பது!


இந்த கவிதைக்கு பெயர் இல்லை!

பெயர் வைத்தே பழகினோம்
எல்லாவற்றிற்கும்!
பெயரில்லா உயர்திணை இல்லை உலகினில்!
பெயரில்லா அஃறிணையும் இல்லை!

அணுவின் கருவிற்கும் பெயரிட்டோம்!
எல்லை இல்லா இப் படைப்பை
இயற்கை என்னும் சொல்லில் அடக்கி விட்டோம்!

பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சமத்திற்கும்
பெயர் வைத்தோம் மேதாவிகளாய்!

பெயர்களை கொண்டாடுகிறோம்.
பெயர்களை கண்டிக்கிறோம்.
பெயரை பிடித்தே தொங்குகிறோம் நாம்!

பெயர் இல்லாமலிருந்தால் ஒரு வேளை
அந்த சூட்சமத்தை உணர்ந்திருக்கலாம் நாம்!


அந்திம காலம்

கலி முற்றி விட்டதாம்.
இயற்கையை மீறி விட்டோமாம்.
ஏதோ கல்கி அவதாரமாம்.
கர்த்தர் வேறு வருகிறாராம்.

என்னை பொறுத்த வரை
என் சாவில் இந்த உலகம்
அழிந்து விடும்!


எல்லை தொடத்தான்!

இல்லை ஒரு எல்லை அவ் வின்பம்
எல்லை தாண்டும் போது கிடைப்பது
எல்லை தொடுதல்  சுகம்
எல்லை தாண்டுதல் சாகசம்
எல்லை கடக்க நினைத்தல்  போதை
எல்லை கடந்தபின் விரியும் உன் எல்லை மேலும்
அதுவும் நான் தொடத் தானே!