இன்னொரு நிழல்

ஆவிட் (Ovid) எனும் ரோம் நாட்டுக் கவிஞர் எழுதிய துரோகம் பற்றிய கவிதை ஒன்றை விருத்தமாக எழுத முயன்றேன்.

கரும்பாய் இனித்தவள் தீஞ்செய்கை
…. கசந்தும் உவப்பது அவள்தடவுகை!
அரும்பாய் மணப்பவள் எயிற்றினிலே
…. அமுதூறும் விடம்போல் பொய்யுமூறும்!
துரும்பென உணர்ந்தேன் வஞ்சியவள்
…. துடியிடை யில்நகக் குறிகண்டு!
தரும்என துயிர்தரும் சுகமனைத்தில்
…. தவிரஇன் னொருநிழல் விழக்கண்டேனே!


ஊழிக்காலம்

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. – (திருமந்திரம் – 65)

ஊழிக்காலத்தில் மழைக்காலம், கோடைக்காலம் எல்லாம் நின்று எங்கும் ஒரே பனி மயமாக இருந்தது. ஏரிகளில் எல்லாம் நீர் ஓடாமல் நின்று விட்டது. அந்த ஊழிக்காலத்தில் சிவபெருமான் ஆகமங்களை அன்னை பராசக்திக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும்  அருளினான்.