சுடுகாட்டுத்தீயில் நின்று நம் ஆன்மாவைத் தாங்கிப் பிடிக்கிறான்

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.  – (திருமந்திரம் – 222)

விளக்கம்:
நாம் செய்யும் வேள்விகளின் தீயின் உள்ளே நம் இறைவனாம் சிவபெருமான் வசிக்கிறான். அவன் சுடுகாட்டுத் தீயிலும் உள்நின்று ஆடி, நமது சாரமான ஆன்மாவைத் தாங்கிப் பிடிக்கிறான். வேள்வித்தீயும் சுடுகாட்டுத்தீயும் தவிர மற்ற அக்னிகள் எல்லாம் வினைகளைத் தரக்கூடியவை. அந்த வினைகளின் அளவு பெரிய மத்தால் கடையப்படுவது போல் ஒலி எழுப்பும் கடலின் அளவு ஆகும்.


குளிர்ச்சியான ஒளி!

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.  – (திருமந்திரம் – 221)

விளக்கம்:
நாம் செய்யும் வேள்விகளின் தலைவன் யார் தெரியுமா? அவன் எல்லா ஒளிகளுக்கும் மேலான ஒளியாக இருப்பவன், இறப்பு என்பதே இல்லாதவன். நம் உள்ளத்திலும் அவன் மூன்று கண்களுடன் ஒளி வீசி வசிக்கிறான். ஏழு உலகங்களிலும் பரவி இருக்கின்ற அவனுடைய ஒளி குளிர்ச்சியானது, அருள் நிறைந்தது. நாம் செய்யும் வேள்விகள் அந்த சிவபெருமானை நினைந்து இருக்க வேண்டும்.


வேள்விகளால் அருஞ்செல்வம் கிடைக்கும்

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றீரே.  – (திருமந்திரம் – 220)

விளக்கம்:
நாம் தேடும் பொன்னும் பொருளும் துன்பத்தைத் தரக்கூடியவை என்பதால் தான், நம் தலைவனாம் சிவபெருமான் அருமையான ஞானச்செல்வங்களை முன்பே நமக்குத் தந்துள்ளான். அந்த சிவபெருமானை நினைத்து நாம் செய்யும் வேள்விகளால் கிடைக்கக் கூடிய உண்மையான இன்பத்தை நினைத்துப் பார்ப்போம். அந்த இன்பத்தைப் பெற சிறந்த வேள்விகளைச் செய்வோம்.


வேள்வித்தீ வினைகளைப் பொசுக்கும்

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.  – (திருமந்திரம் – 219)

விளக்கம்:
ஆழ்ந்த அகலில் நின்று எரியும் திரி, விளக்கில் உள்ள எண்ணெய் எல்லாவற்றையும் காலி செய்கிறது. அது போல நாம் செய்யும் வேள்விகளின் தீ நமது ஊழ்வினைகளை அகற்றும். நமது வினைகளால் ஏற்பட்ட நோய்களும், துன்பங்களும் தீரும். இறைவனைப் போற்றி நாம் செய்யும் வேள்விகள் வினைகளைச் சுட்டுப் பொசுக்கும்.


புருவ மத்தியின் சுடர்

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.  – (திருமந்திரம் – 218)

விளக்கம்:
நெய் நின்று எரியும் வேள்வித்தீயை வளர்ப்பதுடன், புருவ மத்தியில் விளங்கும் சுடரின் இயல்பையும் அறிந்து கொள்வோம். புருவ மத்தியின் சுடரை நாம் உணரும் நாள், நம்முடைய பாவங்கள் எல்லாம் நீங்கும் நல்ல நாளாகும். தொடர்ந்து புருவ மத்தியின் சுடரை நின்று எரியச் செய்வதே இன்பம் தரும் சிறந்த வேள்வியாகும்.

தீயதுவாமே – தீ (வேள்வி) + அதுவாமே


ஆகமங்களை விரும்பிக் கற்போம்

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 217)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இரு வேறு மலர்களின் வண்டுகளைப் போன்றவர்கள். அவர்களுடைய விருப்பங்களும் வேறு வேறாகவே இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். வேதங்களையும் சிவாகமத்தையும் புரிந்து கொண்டுக் கற்கிறார்கள். இதனால் அவர்களிடம் குண்டலினி சக்தியும் ஞான சக்தியும் மேம்பட்டு விளங்குகிறது.


தூய்மையான நெறி

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.  – (திருமந்திரம் – 216)

விளக்கம்:
நமக்கெல்லாம் நெருங்கிய துணையாக இருப்பது, அந்தணர்கள் வளர்க்கும் அக்னிக்குள் அக்னியாக இருக்கும் இறைவனே. அந்தணர்கள் இல்லறத்தில் இருந்தாலும், அக்னிக்குள் உட்பொருளாய் விளங்கும் அந்த இறைபொருளைப் புரிந்து கொள்வார்கள். தமது மனைவியுடன் சேர்ந்து அக்னிக் காரியங்களை மெய்ப்பொருள் உணர்ந்து செய்வார்கள். இது தூய்மையான வாழ்க்கை நெறியாகும்.


நம் விதியை நாமே முடிவு செய்யலாம்

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.  – (திருமந்திரம் – 215)

விளக்கம்:
அரிய வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தவறாமல் யாகங்களைச் செய்வார்கள். மோட்சத்தை அடையும் பொருட்டு, தாங்கள் உண்ணும் முன் பிறர்க்கு தானம் செய்வார்கள். தம் விதியை தானே முடிவு செய்யும் திறன் வேண்டி மெய்நெறியை நாடுவார்கள். அந்த உண்மை நெறியிலே தங்கள் அறிவாலே அந்தத் திறனைப் பெறுவார்கள்.


வேள்வியின் பயன்கள்

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.  – (திருமந்திரம் – 214)

விளக்கம்:
வெற்றி தரும் வேதத்தை தன்னுடைய முதல் பொருளாகக் கொண்டுள்ள அந்தணர்கள் தொடர்ந்து செய்யும் அக்னி வேள்வியினாலே வானம் தவறாமல் மழை பொழிகிறது. இந்த நிலம் நல்ல விளைச்சலைத் தருகிறது. எட்டுத்திசையில் உள்ள மக்களும், எட்டுத்திசைகளைக் காக்கும் திக்குப்பாலகர்களும் நன்மை பெறுகிறார்கள்.


ருசிக்காக இல்லாமல் பசிக்காகச் சாப்பிடுவோம்

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.  – (திருமந்திரம் – 213)

விளக்கம்:
உணவில் அறுசுவையையும் விரும்பி வேண்டுபவர்கள், பசுக்கள் முதலான விலங்கினத்தைப் போன்றவர்கள். ஏற்கனவே நம்முடைய ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு எண்ணில்லாத துன்பங்களைத் தந்துள்ளன. வாழ்வில் நம்மை வருத்தும் வினைகள் ஒன்றிரண்டு அல்ல, அவை ஏராளம். நாம் அறுசுவை போன்ற விஷயங்களை வெறுத்து ஈசனை வேண்டி நின்றால் நம்முடைய வறுமை நீங்கப் பெறலாம்.