ருசிக்காக இல்லாமல் பசிக்காகச் சாப்பிடுவோம்

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.  – (திருமந்திரம் – 213)

விளக்கம்:
உணவில் அறுசுவையையும் விரும்பி வேண்டுபவர்கள், பசுக்கள் முதலான விலங்கினத்தைப் போன்றவர்கள். ஏற்கனவே நம்முடைய ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு எண்ணில்லாத துன்பங்களைத் தந்துள்ளன. வாழ்வில் நம்மை வருத்தும் வினைகள் ஒன்றிரண்டு அல்ல, அவை ஏராளம். நாம் அறுசுவை போன்ற விஷயங்களை வெறுத்து ஈசனை வேண்டி நின்றால் நம்முடைய வறுமை நீங்கப் பெறலாம்.


உறவுகள் வினையை விடக் கொடியது

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.  – (திருமந்திரம் – 212)

விளக்கம்:
பெருகி வரும் உறவுகள் நம்முடைய வினையை விட கொடிய விஷயமாகும். அவர்களால் நமது வினை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப்பிறவியில் நமது வாழ்நாள் முடிவதற்கு முன்பே ஒருநாள் நம்முடைய மெய்யுணர்வு என்னும் விளக்கை ஏற்றி, தொடர்ந்து அந்த விளக்கை அணையாமல் காக்க வேண்டும். மெய்யுணர்வு பெற்றால் உண்மைப் பொருளை அறியலாம், திரும்பத் திரும்ப நாம் சென்று விழும் அந்தப் பிறவிக்குழியையும் மூடலாம்.


வயிற்றை நிரப்பியே வைத்திருக்க முடியாது

கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.  – (திருமந்திரம் – 211)

விளக்கம்:
கற்குழியாகிய வயிற்றை நிரப்ப பொன்னும் பொருளும் தேடி சேர்த்து வைப்பார். ஆனால் வயிறு எப்போதும் நிரம்பி இருக்கும்படி செய்வது முடியாத செயல் என்பதை நாம் உணர்வதேயில்லை. இதை உணர்ந்து தேவையான நேரத்தை பொருள் தேடுவதிலும், மற்ற நேரத்தை சிவனின் திருவடியை நாடுவதிலும் கழித்தால் குற்றம் இல்லாதவராய் ஆவோம்.

கற்குழி – நிரப்ப முடியாத வயிறு,   கனகம் – பொன்


வறுமையிலும் இறைவனைத் துதிப்போம்

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. – (திருமந்திரம் – 210)

விளக்கம்:
தினமும் நாம் பொய்க்குழியாகிய வயிற்றை நிரப்ப வேண்டியவராய் உள்ளோம். பொழுது விடியவும் உணவுத் தேவைக்காக வேலை செய்து உழைக்க கிளம்புகிறோம். வயிற்றுத் தேவைக்காக நாம் அலைந்து திரிந்தாலும் மறக்காமல் ஈசனை துதிப்போம். ஈசனை துதித்தால் வினை தீரும், வினை தீர்ந்தால் வறுமை அகலும்.

குற்றமில்லாத வாழ்வு நடத்தி இறைவனை வணங்கி வந்தால் வயிற்றுப்பாடு தானே தீரும்.

புலரி – சூரியன்,  தூர் – நிரப்பு,  ஏத்துமின் – வணங்குங்கள்.


வறுமை வந்தால் வாழ்வு இல்லை

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ராயினார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.  – (திருமந்திரம் – 209)

விளக்கம்:
வறுமை வந்தால் வாழ்க்கை கிழிந்த புடைவை போல் பயனில்லாமல் போய்விடும். மனைவியும், பிள்ளைகளுமே அன்பில்லாதவராய் ஆவார்கள். உறவினர்களும் விட்டு விலகுவார்கள், அவர்களுடன் கொடுக்கல், வாங்கல் எதுவும் இல்லாமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இராது. நாட்டு நடப்பு எதிலும் அவருக்கு பங்கில்லை. ஏதோ இயங்குகிறார் இந்த உலகத்தில், அவ்வளவுதான்.