என் ஒவ்வொரு அசைவிலும் சிவன் இருக்கிறான்

தானொரு கூறு சதாசிவன் எம்மிறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே. – (திருமந்திரம் – 112)

விளக்கம்:
எம் இறைவனான சதாசிவன் உலகில் உள்ள எல்லாப் பொருளிலும் தான் ஒரு அங்கமாக விளங்குகிறான். வானுலகிலும் தான் ஒரு அங்கமாக எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான். எம் தலைவனான அவன் என் உடலில் உயிராக கலந்திருந்து என் ஒவ்வொரு அசைவிலும் அவன் விளங்கிறான்.

(கூறு – பகுதி,  மருவி – கலந்து,  கோன் – தலைவன்,  சலம் – அசைவு)


அவரவர் தன்மைக்கு ஏற்ப காட்சி தருவான்

பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. – (திருமந்திரம் – 111)

விளக்கம்:
சிவபெருமான் நம்முடைய உடலாகவும், உயிராகவும் விளங்குகிறான்.  நம்மிலே கலந்திருக்கும் மேலானவன் அவன் . அந்த சிவனே, வரம் தரும் திருமாலாகவும், பிரமனாகவும் விளங்குகிறான். பக்தர்கள் ஒவ்வொருவரின் தரத்திற்கேற்ப பல தன்மைகளில் காட்சி தருகிறான். யாருக்கும் விளங்காதவாறு மறைந்து நின்று அழித்தல் தொழில் செய்யும் உருத்திரனும் அவனே!

(பரம் – மேலான,   கரத்து – மறைவு,   கழிவு செய்தான் – அழிவுத் தொழில் செய்தான்)


சோதிக்கும் கடவுள்

சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. – (திருமந்திரம் – 110)

விளக்கம்:
பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவராகவும், பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவராகவும் விளங்குவது ஆதிக்கடவுளான சிவபெருமானே ஆகும். அவன் ஒளி வீசும் பேரொளிச் சுடராக உள்ளான். மூடர்கள் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரை வெவ்வேறானவராக எண்ணி பேதித்துப் பிதற்றுகிறார்கள்.

(சோதித்த – ஒளி விடுகின்ற,  ஆதர்கள் – மூடர்கள்)

இந்தப் பாடலில் சோதித்த என்னும் சொல் ஒளி விடுகின்ற என்னும் பொருளில் வருகிறது.  கடவுள் சோதிக்கிறார் என்றால் கடவுள் ஒளி விடுகிறார் என்று அர்த்தம். கடவுள் நம்மைத் தொடர்ந்து சோதிக்கட்டும்.


வாசம் செய்கிறான்… வாசனை பரப்புகிறான்…

வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. – (திருமந்திரம் – 109)

விளக்கம்:
மனிதர்களாகிய நம் அனைவரின் உடலிலும், தேன் நிறைந்த கொன்றை மலர் அணிந்த சிவபெருமான் அமர்ந்திருக்கிறான். வானுலகில் உள்ள தேவர்களின் உடலிலும் அந்த சிவபெருமான் வாசம் செய்கிறார். நம்முடைய பிறவிப் பயன் எதுவென்றால்,  நம் உடலில் மணம் பரப்பி வாசம் செய்யும் அந்த சிவபெருமானை உணர்வது தான்.


திருமூலருக்கு சிவபெருமானின் கட்டளை

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே. – (திருமந்திரம் – 108)

விளக்கம்:
அழிவில்லாத தன்மை கொண்ட தேவர்கள் நிறைந்த திருச்சபையில், பால் போன்ற மேனி கொண்ட அந்த சிவபெருமானைப் பணிந்து வணங்கினேன். அந்த சிவபெருமான் “நீ திருமாலுக்கும் பிரமனுக்கும் ஒப்பாவாய்! மண்ணுலகில் உள்ள மக்களுக்கெல்லாம் எம் திருவடியின் சிறப்பை எடுத்துச் சொல்!” என்றான்.

(ஒலக்கம் – திருச்சபை,  உலப்பிலி – அழிவில்லாத,  ஞாலம் – பூமி)


சிவனின் உறவினர்

பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே. – (திருமந்திரம் – 107)

விளக்கம்:
பக்தர்கள் அடையும் பயனை எண்ணிப் பார்க்கும் போது, பிரமனும் திருமாலும் சிவபெருமானுக்கு வேறானவர்கள் இல்லை. அவர்கள் மூன்று கண்களை உடைய சிவனது உறவினர்களே ஆவர். அதனால் அவர்களையும் வணங்கி நாம் பயன் பெறலாம்.

(நயனம் – கண்,  தமர் – சுற்றத்தார்)


சங்கரன் என்றால் சுகம் தருபவன்

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. – (திருமந்திரம் – 106)

விளக்கம்:
சிவன், சதாசிவன், மகேசுரன் என மூன்று பேராகச் சொன்னாலும்,   சதாசிவன், மகேசுரன்,  உருத்திரன், திருமால், பிரமன் என்று ஐந்து பேராகச் சொன்னாலும் எல்லாம் ஒருவரே. சங்கரன் என்னும் ஒரே கடவுள் தான் மூன்றாகவும், ஐந்தாகவும் வகுத்துச் சொல்லப்பட்டு திருச்சிற்றம்பலச் சபையில் விளங்குகிறான். சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனச் சிவனது நிலைகளை ஒன்பதாகச் சொல்வதும் உண்டு.


தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
நீசர் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. – (திருமந்திரம் – 105)

விளக்கம்:
ஈசன் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளுக்கு அப்பாற்பட்டவன். தாமரை மொக்கு போன்ற அந்த சிவபெருமான்  உலகின் பெருந்தெய்வம் ஆவான். தெய்வ நினைப்பில்லாத நீசர்கள் அது இது என்று பிதற்றுவார்கள். மனத் தூய்மை உடையவர்கள் இறைவனின் வேர் அறிந்தார்களே!

(தூசு பிடித்தவர் – தூய்மையானவர்)


மூவரும் ஒருவரே!

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.   –  (திருமந்திரம் – 104)

விளக்கம்:
ஆதிப்பிரானான சிவன், அழகிய மணிவண்ணனாகிய திருமால், தாமரை மலரில் எழுந்தருளும் பிரமன் – இவர்கள் மூவரும் அழித்தல், காத்தல், படைத்தல்  ஆகிய தமது தொழில்களினால் வேறுபட்டுத் தோன்றுகிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூவரும் ஒருவரே என்பது புரியும். இந்த உலகத்தார் உண்மை புரியாமல், இவர்கள் வெவ்வேறானவர்கள் என்று நினைத்து தமக்குள் பிணங்கி நிற்கிறார்களே!


தளர்விலன் சங்கரன்!

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே.   –  (திருமந்திரம் – 103)

விளக்கம்:
சிவபெருமானால் படைக்கப்பட்ட இந்த உலகம் எப்போதும் இளமையானது, அழகுள்ளது, ஒரு எல்லைக்குள் இருக்கிறது. இந்த உலகின் மொத்த காலமும் கணக்கிட முடியாதது. இதையெல்லாம் உணர்ந்தால் அந்த சங்கரன் சோர்வே இல்லாதவன் என்பது புரியும். அடியார்கள் சொல் அளவில்  பிரமனையும் திருமாலையும் சேர்த்தே புகழ்கிறார்கள், ஆனால் எல்லா பெருமையும் சிவபெருமானையே சேர வேண்டும்.