சில பல கிறுக்கல்கள்

[liveblog]காலம் நம்மைக் கடப்பதில்லை. நாமும் காலத்தைக் கடப்பதில்லை. காலத்துடன் ஒருங்கிணைந்த பயணம் நம்முடையது.

மனிதன் வடிவமைத்த கான்செப்ட்களில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று கடவுள், மற்றொன்று பணம்.

மனிதன் கண்டுபிடித்த கடவுளை மறுப்பவர்கள் பணத்தையும் மறுப்பது தான் நியாயம்.

கடவுள், பணம் இரண்டுமே உருவமாகவும், அருவமாகவும் அருள் பாலிப்பவை.

முட்டைகள் தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்வதற்காக கோழிகளை இடுகின்றன.


மரணம் என்னும் ஒரு வசீகர மர்மம்

மரணத்தைப் போல ஒரு வசீகரமான விஷயம் இருக்குமான்னு தெரியலை. அந்த வசீகரத்தின் முக்கிய காரணம் அதன் பின்னால் இருக்கும் மர்மம். மர்மமான விஷயங்கள் வசீகரித்தை உண்டாக்குவது தானே இயற்கை? மரணம் வாழ்வுக்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் சாவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. கவிஞர் வைரமுத்து தவம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பார் “எனக்குத் தெரியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல், எனக்குத் தெரியாமல் என் இறப்பும் நேர வேண்டும்”. எவ்வளவு அர்த்தமுள்ள தவம்!

சமீபத்தில் நேர்ந்த அம்மாவின் மரணம் இப்படி ஒரு ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது. அப்பேர்ப்பட்ட சாவு அது, விஜயதசமி அன்று மதிய நேரம், கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தார். சிகிச்சைக்காக போன ஆஸ்பத்திரியின் உள்ளே நடந்தே தான் போனார், நாடி பிடித்துப் பார்த்த டாக்டர் பல்ஸ் ரொம்ப குறைந்து விட்டதாக சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதற்குள் உயிரை விட்டு விட்டார்.

தன்னைத் தேடி வந்த மரணத்திடம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தன்னை ஒப்படைத்ததாகவே தோன்றியது எனக்கு.  சாகும் கலை என்னும் தலைப்பில் ஓஷோ மணிக்கணக்கில் பேசியிருக்கிறார், நானும் கேட்டிருக்கிறேன். ’நீங்க எல்லாம் பேசுவீங்க, எழுதுவீங்க, படிப்பீங்க, ஆனா அது எனக்கு கை வந்த கலை’ன்னு பத்து நிமிஷத்தில் செய்து காட்டி விட்டார் அம்மா.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)

திருமூலர் சொன்ன மாதிரி காலப்போக்கில் இறந்து போன அம்மாவை மறந்தாலும் ‘dead like me’ எனச் சொல்லாமல் சொன்ன செய்தியை மறக்க முடியாது.


பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்!

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.  – (திருமந்திரம் – 52)

விளக்கம்:
வேதத்தை அதன் பொருள் உணராமல், ஓசையளவில் ஓதுபவர் எல்லாம் வேதியர் ஆக மாட்டார். வேதம் இறைவனால் கொடுக்கப்பட்டது பிரம்மப் பொருளை உணரவும், அந்தணர் செய்யும் வேள்விக்காகவும். நாமெல்லாம் மெய்ப் பொருளை உணர்ந்து கொள்வதற்காகவே வேதம் உரைக்கப்பட்டது!

Those who speak the Vedas, without know the meaning are not pundits.
God spoke the Vedas to reveal its meaning,
God spoke the Vedas to perform the Holy Poojas,
God spoke them to make us manifesting the truth.

ஒரு ப்ரீகுவல் கதை

வட்டகிரி, அப்படின்னு ஒரு மலைக்காடு. அங்கே ஒரு முனிவர் முனிவராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு பொன்னாசை, பெண்ணாசை எதுவுமே கிடையாது. கடுமையா தவம் செஞ்சு இந்த பிறவிலேயே கடவுளை அடையணும் அப்படிங்கிறதுதான் அவர் ஆசை. அவர்கிட்ட ஒரு சீடன் இருந்தான். முனிவருக்கு வேணுங்கிற எடுபிடி வேலையெல்லாம் செஞ்சிட்டு மிச்ச நேரத்தில தானும் தவம் செய்வான்.

முனிவரோட உண்மையான தவத்தை பார்த்த தேவர்கள் அவரை சொர்க்கத்துக்கு கூப்பிட்டாங்க. ரொம்ப வருஷம் கூடவே இருந்ததால சீடனுக்கும் அனுமதி கிடைச்சது. சொர்க்கத்துக்கு போற வழில சீடனோட சந்தோஷம் அளவு கடந்ததா இருந்தது. பேசிக்கிட்டே வந்தான். “குருவே! சொர்க்கத்துல பணிவிடை செய்ய தேவதைகள் இருப்பாங்க. அவங்கள மாதிரி அழகு நாம பூமில பார்க்கவே முடியாது. இயற்கையாகவே அவங்க மேல ஒரு நறுமணம் இருக்கும். இனிமையான பாடலெல்லாம் பாடுவாங்க”. முனிவர் பதிலேதும் சொல்லவில்லை. உணர்ச்சி எதுவுமே இல்லாமல் வந்தார்.

சொர்க்கத்தில் முனிவருக்கு சரியான வரவேற்பு. தேவாதி தேவர்களெல்லாம் வந்து வாழ்த்தினாங்க. முனிவருக்கு ஒரு சிறப்பான இடம் கொடுக்க முடிவாயிற்று. அங்கே தங்கத்திலான மரங்கள் நிழல் கொடுத்தன. அதன் இலைகளெல்லாம் மரகதம். வைரங்கள் பூக்களாய் பூத்திருந்தன. மணக்க மணக்க அறுசுவை சாப்பாடு. வசதியான படுக்கை. கை கால் அமுக்கி விட முற்றும் துறந்தவளாய் ஒரு அழகான தேவதை.

முனிவருக்கு கிடைத்த உபசாரங்களை பார்த்த சீடனுக்கு ஆனந்தக் கண்ணீர். “வாழ்நாள் முழுவதும் நீங்க செஞ்ச தவத்துக்கு கெடச்ச வரத்த பார்த்தீங்களா.”

இதைக் கேட்ட அவருக்கு ஒரே கோபம். சீடனை பார்த்து “இவ்வளவு வருஷம் என் கூட இருந்து உனக்கு எதுவுமே புரியலை. உனக்கு என்னைப் பத்தியும் தெரியலை. இங்கே நடப்பதும் புரியலை.”

இன்னும் சொன்னார் “ஒண்ணு புரிஞ்சுக்கோ. இதெல்லாம் எனக்கு கெடைக்கிற பரிசு இல்லை. அந்த தேவதைக்கு கெடைக்கும் தண்டனை.”


கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை!

கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை – ஆனால் மனிதன்? மனிதன் இறையுள் வாழ்கிறான், ஆனால் அதைப் பற்றிய உணர்வு இல்லாமல். மனிதன் இறையினுள் பிறக்கிறான், இறையை சுவாசிக்கிறான், ஒரு நாள் இறையினுள் கலந்து விடுவான்.

கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை – ஆனால் மனிதன்? இறை தான் நம்மை சூழ்ந்துள்ள கடல், அது நமக்கு உள்ளேயும் வெளியேயும் பரவியுள்ளது. கடவுள் என்பது ஒரு நபர் அல்ல, நம்மை சுற்றி நிரம்பி வழியும் தெய்வீக இருப்பு.

இறை வழிபட வேண்டிய விஷயம் அல்ல. அது வாழ்ந்து உணர வேண்டும். அதற்காக எங்கும் போக வேண்டியதில்லை, நாம் இறையின் உள்ளேயே வாழ்கிறோம்.

இறையினை உணர நமக்கு மதம் எதுவும் தேவையில்லை, இந்த நொடி நம் மேல் இறை பொழிகிறது. ஆனால் நம்மை நாமே பூட்டிக் கொண்டிள்ளோம். நம் கதவு யுக யுகமாக தட்டப்படுகிறது, நாம் அதை கேட்க விரும்பவில்லை.

பழைய விவிலிய கதை ஒன்று உண்டு. ஆடம் தனக்கிடப்பட்ட கட்டளையை மீறிய போது கடவுள் அவனை தேடி வந்தார். அப்போது ஆடம் ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொண்டான். அவனுக்கு கடவுளை நேராக பார்க்கும் தைரியம் இல்லை. கடவுள் அந்த ஏதேன் தோட்டத்தில் “ஆடம்! நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்கிறார். ஆடம் அதற்கு பதில் சொல்லவில்லை. இது கதை இல்லை, நம்முடைய நிலை இது தான். நாம் கடவுளிடமிருந்து ஒளிந்து கொண்டிருக்கிறோம்.

From Osho’s discourse on ‘Talks on Kabir’