யோகத்தினால் நரை, முதுமை நீங்கும்

நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே – 734

விளக்கம்:
குண்டலினி என்பது நீல ஒளியைக் கொண்ட பராசக்தி ஆகும். குண்டலினியாகிய சக்தியோடு மனம் பொருந்தி இருந்து, அதில் கிடைக்கும் இறையனுபவமே நிலையானது என்பதை உணர்ந்தவர்க்கு, நரை மாறும், முதுமையான தோற்றம் மாறி இளமையாக உனர்வார்கள். இது நம் நந்தியம்பெருமானின் வாக்கு.

நேரிழையாள் – நல்ல அணிகலன்களை அணிந்துள்ள சக்தி
சாலவும் புல்லி – மிகவும் பொருந்தி
சதம் – நிலையானது
ஞாலம்  – உலகம்
திரை – முதுமையினால் தோன்றும் தோல் சுருக்கம்


மூலாதாரம் இருக்கும் இடம்

மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே – 733

விளக்கம்:
நம் உடலில் மலம் சேரும் இடமான குதத்தில் இருந்து இரு விரற்கிடை அளவுக்கு மேலேயும், நாம் அதைப்பற்றிப் பேசக் கூச்சப்படும் குறிக்குக் கீழேயுமான இடத்தில் மூலாதாரம் உள்ளது. சூடு தணியாத இந்த உடலில் வசிக்கும் சிவபெருமான், மூலாதாரத்திலும் குடியிருக்கிறான். யோகத்தின் போது நாம் நம் மனத்தை மூலாதாரத்தில் நிறுத்தி அங்குள்ள அபானனை மேலே எழுப்பிப் பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சியினால், உபதேசம் இல்லாமலேயே பல நன்மைகளைக் காணலாம்.


மூச்சின் இயக்கத்தை மட்டுமே சிந்திப்போம்

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே – 732

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது மூச்சுக்காற்றைக் கொப்பூழ்ப் பகுதிக்கு கீழே செல்ல விடாமல் தடுத்து மேலே செலுத்த வேண்டும். மூச்சின் இயக்கத்தை மட்டுமே சிந்தித்து மூச்சை மேலே எழுப்பி பயிற்சி செய்வதால் நிகழும் சிவமந்திரத்தை உணரலாம். சிவமந்திரத்தினால் மூச்சுக்காற்றை தலையின் உச்சியில் நிறுத்தலாம். மூச்சு உச்சியில் நிலைபெற்றால் நாம் சிவ அம்சம் பெற்றவர் ஆவோம்.

உந்திச்சூழி – கொப்பூழ்ச்சுழி
முகடு – உச்சி
அபானன் – நாபிக் கமலத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் மற்றும் குதம் போன்ற இடங்களில் உள்ள வாயு


மனம் அமிழ்ந்து யோகப்பயிற்சி செய்வோம்

திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே – 731

விளக்கம்:
அம்ஸ மந்திரத்தில் ‘அம்’ என்பது மூச்சினை உள் வாங்குதற்கும், ‘ஸ’ என்பது மூச்சினை வெளிவிடுதற்கும் உரியனவாகும். பிராணாயாமத்தில் மனம் அமிழ்ந்து பயிற்சி செய்து வந்தால், அகாரமாகிய மூச்சை இழுத்தலும், சகாரமாகிய மூச்சை வெளிவிடுதலும் ஆகிய பயிற்சி அம்ச மந்திரத்தை நெற்றிப்பொட்டிலே ஸ்திரமாக நிகழச்செய்யும். பயிற்சியிலே மனம் பொருந்தி இருந்து சாதகம் செய்யும் யோகி நாதத்தை முழுமையாக உணர்வான். அறநெறியின்படி இது தானாகவே நிகழும்.

பிராணாயாமப் பயிற்சி, தாமாகவே நம்முள்ளே மந்திரத்தை உருவேற்றும். தனியாக உச்சரிக்க வேண்டியதில்லை.

உறப்பெறவே – மனதுக்கு நெருக்கமாக
திறத்திறம் – மிகவும் ஸ்திரமாக


சத்தியார் கோயில்

சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே – 730

விளக்கம்:
நம்முடைய உடல், சக்தியாகிய குண்டலினி குடியிருக்கும் கோயிலாகும். இக்கோயிலிலே நாம் நம்முடைய மனத்தை மத்தியிலே நிலைபெறச் செய்து, இடப்பக்கமும் வலப்பக்கமும் மாற்றி மாற்றி பிராணப் பயிற்சி செய்து வந்தால், சிவநடனத்திற்கு உரிய வாத்திய ஒலிகளைக் கேட்கலாம். வாத்திய ஒலியைத் தொடர்ந்து, சிவபெருமானின்  இனிய நடனத்தையும் காணலாம். இந்த உண்மை நந்தியம்பெருமானின் ஆணையாகும்.

சத்தியார் – சக்தியாகிய குண்டலினி
மத்தியானம் – மத்திய தானம் (மத்தியில் இருக்கும் இடம்)


பிராணாயாமத்தில் மனம் பொருந்தி இருக்க வேண்டும்

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே – 729

விளக்கம்:
பிராணாயாமத்தில் வலது பக்க மூச்சை நூற்று அறுபத்து ஆறு மாத்திரை அளவும், இடது பக்க மூச்சை நூற்று அறுபத்து ஆறு மாத்திரை அளவும் மாற்றி மாற்றிப் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சியின் போது ஒவ்வொரு நூற்று அறுபத்து ஆறு மாத்திரை அளவு நேரமும் மனம் மூச்சிலேயே பொருந்தி இருக்க வேண்டும். அப்படிப் பொருந்தி இருந்தால், அந்த நூற்று அறுபத்து ஆறு மாத்திரை அளவு நேரமும் சகசிரதளத்தில் மேல் வசிக்கும் சிவனின் அடியைச் சேர்ந்து இருக்கலாம்.

எதிரிட – பொருந்தி இருந்திட


மூன்று மடக்கு உடைப் பாம்பு

மூன்று மடக்குஉடைப் பாம்புஇரண்டும் எட்டுஉள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
நான்றஇம் முட்டை இரண்டையும் கட்டியிட்டு
ஊன்றி யிருக்க உடம்பழி யாதே – 728

விளக்கம்:
மூன்று வளைவுகளைக் கொண்ட குண்டலினியாகிய பாம்பு இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டும் துணை கொண்டு சகசிரதளத்தை எட்டி விடும். சிரசிற்கு மேல் பிராணன் பன்னிரெண்டு அங்குலம் நீளும்படியாக, இடைகலை, பிங்கலை ஆகிய முட்டுக்கால்களை உறுதியாகக் கட்டி யோகத்தில் ஊன்றி இருந்தால், இந்த உடலுக்கு கேடு ஏதும் விளையாது.

ஏன்ற இயந்திரம் – ஏற்றுக்கொள்ளும் இயந்திரம்
முட்டு இரண்டையும் – முட்டுக்கால்


பிராணாயாமத்தினால் கபம், வாதம், பித்தம் நீங்கும்

அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே – 727

விளக்கம்:
மனத்தூய்மையோடு பிராணாயாமம் செய்து வந்தால் மனமும் உடலும் குளுமை என்னும் மந்திரமை கிடைக்கப்பெறும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அக்குளுமையுடன் மாலை நேரத்தில் பிராணாயாமம் செய்து வந்தால், உடலில் உள்ள கபம் நீங்கும். மதிய நேரம் பிராணாயாமம் செய்து வந்தால், வஞ்சகம் கொண்ட வாதம் நீங்கும். செம்மையான விடியற்காலை நேரத்தில் பிராணாயாமம் செய்து வந்தால், உடலில் உள்ள பித்தம் அகலும். கபம், வாதம், பித்தம் ஆகியன அகலும் போது, இந்த உடலுக்கு நரை, மூப்பு ஆகியன இல்லாது போகும்.

ஐ – கபம்
செஞ்சிறு காலை – செம்மையான விடியற்காலை


மனத்தை சுத்திகரிப்போம்

சுழற்றிக் கொடுக்கவே சுத்தி கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே – 726

விளக்கம்:
மனத்தில் உள்ள அசுத்தங்களை எல்லாம் கழற்றி விட்டு, பிராணாயாமத்தில் பூரித்து இருந்தால் உடலும் சுத்திகரிக்கப்பட்டு தூய்மை பெறும். தூய்மையான மனத்தோடு, மூச்சுக்காற்றை சுழற்றி பிராணாயாமம் செய்ய வல்லவர்கள் உடலும் மனமும் வெப்பம் குறைந்து குளுமை பெறுவார்கள். அக்குளுமை இறைவனைக் காட்டும் மந்திர மையாய் அமையும்.

சுத்தி கழியும் – அழுக்குகள் நீங்கும்
கழற்றி மலத்தை – அசுத்தங்களை நீக்கி
அழற்றித் தவிர்ந்து – வெப்பம் நீங்கி
அஞ்சனம் – மறைபொருள் காட்டும் மந்திர மை


நம்முடைய உடல் ஒரு கோயில்

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே – 725

விளக்கம்:
யோகப்பயிற்சி செய்வதற்கு முன்பு, இந்த உடலை இழுக்காக நினைத்து அதை சரியாக பராமரிக்காமல் இருந்து வந்தேன். யோகப்பயிற்சியின் போது, இந்த உடலுக்குள் தானாக வந்து சேர்ந்த இறைபொருள் ஒன்று இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய உடல், உத்தமனான சிவபெருமான் குடியிருக்கும் கோயில் என்பதை நான் புரிந்து கொண்டதால், இப்போது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்கிறேன். அதற்கான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்கிறேன்.

உறுபொருள் – தானாக வந்து அமர்ந்த இறைபொருள்