சிவனையும் சக்தியையும் பிரித்துப் பார்க்க முடியாது

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே. – (திருமந்திரம் – 381)

விளக்கம்:
மேலான விஷயங்களுக்கு எல்லாம் மேலானவன் நம் சிவபெருமான். சிவபெருமானிடம் இருந்து பிரிக்க முடியாத ஞான நிலையாக விளங்குபவள் சக்தி. உலகமெங்கும் பரந்து நிற்கும் அந்தப் பேரொளியில் சிவனும் விளங்குகிறான். தீமை ஏதும் இல்லாத சக்தியும் அந்தப் பேரொளியில் விளங்குகிறாள். அருட் பேரொளியில் சிவனும், சக்தியும் சேர்ந்து விளங்குவதால் படைப்புக்கள் யாவும் நிகழ்கின்றன.


சிரசில் சிவனை உணரலாம்

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. – (திருமந்திரம் – 380)

விளக்கம்:
நெடுங்காலம் தியானம் செய்து, அதிலேயே தனது கவனத்தைக் குவிப்பவர்களுக்கு குண்டலினி சக்தி தனது மூலாதார நிலையில் இருந்து வெளிப்படும். அவர்களுடைய குண்டலினி சக்தி, விதிக்கப்பட்டபடி சிரசினை சென்று அடையும். மொத்த உலகிற்கும் ஒரே ஒளியாக நிற்கும் சிவபெருமானை, அவர்கள் தமது சிரசில் உணர்வார்கள்.


தன்னைக் கொடுத்து அறிவோம் சிவனை!

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே. – (திருமந்திரம் – 379)

விளக்கம்:
“தமக்கெல்லாம் பேரொளியாகக் காட்சி கொடுத்த நம் சிவபெருமானை, பிரமன், திருமால் முதலிய தேவர்கள் வழிபட்டார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போல, தன்னையே இறைவனிடம் ஒப்படைத்து வழிபடவில்லை. தன்னைக் கொடுத்தால் சிவனை அறியலாம். தன்னைக் கொடுத்தவர்க்கு இறைவனும் தன்னைத் தருவான், இன்பம் தருவான். நாம் வலிமை பெறும் பொருட்டு தம் திருவடியைப் பற்றிக்கொள்ளத் தருகிறான் நம் பெருமான். ஆனால் அந்தத் தேவர்கள் என்னைப் போல அவன் திருவடியைச் சார்ந்திருக்கவில்லை” – திருமூலர்.


அவனைச் சுற்றியே உலகம் இயங்குகிறது

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்
டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே. – (திருமந்திரம் – 378)

விளக்கம்:
உலகில் உள்ள யாவற்றிலும் கலந்திருக்கும் பரஞ்சுடராம் நம் சிவபெருமான். இந்த உலகின் படைப்பு யாவையும் தறி போன்று விளங்கும் நம் பரஞ்சுடரைச் சுற்றியே இயங்குகிறது. இந்த இயக்கத்தைப் புரிந்து மெய்ந்நெறி கண்டவர்கள், நம் சிவபெருமானை விடாமல் அவனையே வலம் வருவார்கள்.


ஊனத்தின் உள்ளே உயிர்போல்!

தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங் கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொரு ளண்மைய தாமே. – (திருமந்திரம் – 377)

விளக்கம்:
உடலின் உள்ளே இருக்கும் உயிரை உணர்வது போல, சிவபெருமானை நாம் நம்முள்ளே தான் உணர முடியும். இது புரியாமல், தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்ட பிரமனும், பெரிய கடலை இருப்பிடமாகக் கொண்ட திருமாலும், நம் பெருமானை புற உலகில் தேடினார்கள். அவர்கள் சிவபெருமானின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை.


சிவன் சேவடி!

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே. – (திருமந்திரம் – 376)

விளக்கம்:
மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்ட திருமாலும், பாடல் வடிவிலான மந்திரங்களால் முனிவர்கள் போற்றும் பிரமனும், நம் சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சுற்றி அலைந்தார்கள். ஆனால் தாம் கொண்டிருந்த அகங்காரத்தினால் அவர்களால் சிவன் திருவடியை அடைய முடியவில்லை. நாம் நம் பெருமானை மனத்திற்கு நெருக்கமாக வைத்து வழிபட்டால், தாமரை மலர் போன்ற சிவந்த அவன் திருவடியை அடையலாம்.


நீளியன்!

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே. – (திருமந்திரம் – 375)

விளக்கம்:
சிவபெருமான் வானம், பூமி முதலிய எல்லா உலகங்களையும் தனக்குள் கொண்டு நீண்டு எழுந்து நின்றான். பேரொளியாக நின்ற அவனது வடிவம் பார்ப்பவர்களுக்கு அச்சம் தருவதாக இருந்தது. பிரமனும், திருமாலும், தங்கள் செருக்கினால், சிவனது திருமுடியையும் திருவடியையும் ஆராயச் சென்றார்கள். அவர்களால் அடி, முடி இரண்டையுமே காண முடியவில்லை.


ஊனாய் உயிராய் உணர்வாய்

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்கித் திருவுரு வாய் அண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே. – (திருமந்திரம் – 374)

விளக்கம்:
சிவபெருமான் நமது உடலாகவும், உயிராகவும், உணர்வு என்னு அக்கினியாகவும் இருக்கிறான். அவன் இந்த உலகின் மூத்தவன். அவன் வானோங்கிய அளவுக்கு, உயரமான திருவுருவம் கொண்டவனாக இருக்கிறான். இந்த உலகத்தைத் தாங்கும் தூணாக இருப்பவன் நம் சிவபெருமானே! சூரியனையும், குளிர்ந்த சந்திரனையும் தாண்டி அனைத்து உலகையும் அவன் ஆள்கிறான்.


சிவபெருமானின் ஆளும் திறன்

ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந்
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவனாண்மை யாலே. – (திருமந்திரம் – 373)

விளக்கம்:
ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் நம் அண்ணலான சிவபெருமான், ஏழு உலக உயரத்திற்கு அக்னிப் பிழம்பாக ஓங்கி எழுந்து நின்ற போது, பிரமனாலும் திருமாலாலும் நம் பெருமானது திருவடியைக் காண முடியவில்லை. வானுலகிலும் ஏழுலகிலும் பரவி இருக்கும் அந்த நீலகண்டனை நான் அறிந்து கொண்டேன், அவன் என்னை ஆளும் திறத்தினாலே!


திருவடியைத் தேடி …

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே. – (திருமந்திரம் – 372)

விளக்கம்:
பிரமனும் திருமாலும் தங்கள் அறியாமையால், தாமே தலைவர் என அகங்காரம் கொண்டனர். சிவபெருமான் ஒளிப்பிழம்பாய் பரந்து நின்று காட்சி போது, அவர்களால் நம் பெருமானின் திருவடியைத் தேடிக் காண முடியாமல் புலம்பித் தவித்தார்கள்.