பரியங்கயோகத்தின் கருத்தழகு

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வெள்ளியஞ் சோரா தெழுமே – 837

விளக்கம்:
பரியங்கயோகம் என்பது நம்முள் இருக்கும் குண்டலினி சக்தியை மேலே உள்ள சகசிரதளத்திற்கு ஏற்றி அங்கிருக்கும் சிவத்துடன் சேர்ப்பதாகும்,  அந்தச் சேர்க்கையில் கிடைக்கும் இன்பத்தின் தன்மையை நாம் உணர்ந்து கொள்வதற்காக, திருமூலர் அப்பயிற்சியை ஆண் பெண் கலவியுடன் ஒப்பிடுகிறார். இவ்வழகிய கருத்தை உள்வாங்கி, நாம் நமது புத்தி திருந்தப் பெற்று மேன்மை பெறுவோம். பரியங்கயோகத்தின் கருத்தை உணர்ந்து, மனம் ஒன்றி யோகப்பயிற்சி செய்யும் போது, நம்முள் இருக்கும் சிவசக்தியர் வருத்தம் நீங்கி இன்பம் பெறுவர். நம்முடைய மூச்சுப்பயிற்சியில் விளையும் உயிர்சக்தி வீணாகாமல், மேல் எழுந்து சகசிரதளத்தில் சேரும். உயிர்சக்தி சரியாக சகசிரதளத்தை அடையும் போது, நமக்குச் சோர்வு என்பதே ஏற்படாது.

புதன் – புத்தி, திருத்தல் – மேன்மை பெற்று, மங்கை பங்கன் – சிவபெருமான், துருத்தி – மூச்சுப்பயிற்சி


குண்டலினியாகிய அழகிய நங்கை

வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓரானந்தம்
தங்களில் பொன்இடை வெள்ளிதா ழாமுனம்
திங்களில் செவ்வாய் புதைந்திருந் தாரே – 836

விளக்கம்:
மூச்சுப் பயிற்சியின் போது, வெண்மையான ஒளி மிகுந்த சகசிரதளத்திற்கும், சனி போன்ற இருள் மிகுந்த மூலாதாரத்திற்கும் இடையே நகர்பவள் குண்டலினியாகிய நங்கை. அந்நங்கையை யோகப்பயிற்சியால் உச்சந்தலைக்கு மேல் இருக்கும் சகசிரதளத்திற்கு மேலே எழச் செய்வோம். அங்கே சக்தியின் திங்கள் போன்ற அழகிய முகத்தில், தமது சிவந்த வாயைப் புதைத்துப் புணரும் சிவத்துக்குக் கிடைக்கும் ஆனந்தம் பேரானந்தம். அந்நிலையில் நம்முடைய உயிர்சக்தி சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் கலந்து நாம் சிவ இன்பம் பெறலாம்.

யோகப்பயிற்சியில் கிடைக்கும் இன்பத்தை நாம் உணர்ந்து கொள்வதற்காக, திருமூலர் அப்பயிற்சியை ஆண் பெண் கலவியுடன் ஒப்பிடுகிறார்.

வெங்கதிர் – வெண்மையான ஒளி மிகுந்த சகசிரதளம், சனி – இருள் மிகுந்த மூலாதாரம், புல்லிய – புணர்ந்த


சித்தம் கலங்காது செய்யும் பரியங்க யோகம்

வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே – 835

விளக்கம்:
உடலையும் மனத்தையும் பரியங்கயோகத்தில் இருத்தி, சக்தியாகிய குண்டலினியை சகசிரதளத்தில் இருக்கும் சிவபெருமானுடன் சேரச் செய்து, சித்தம் கலங்காமல் யோகப்பயிற்சி செய்ய வேண்டும். அத்தகைய கடுமையான பயிற்சியை நாம் செய்தால், பத்துத் திசைகளில் இருக்கும் பதினெட்டு சிவகணங்களுக்கும் ஞான சூரியனாய் நிற்கும் சிவபெருமான் நமக்கும் ஞானம் வழங்கி அருள் செய்வான்.

பத்து வகை – பத்துத் திசைகள், பதிணென் கணம் – பதினெட்டு சிவ கணங்கள்


கரியை விலக்கி அக்கினியைக் காண்போம்

வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே – 834

விளக்கம்:
விந்து எனும் நம் உயிர்சக்தி சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் கலக்க விடாமல், உலக விஷயங்கள் என்னும் கரியைக் கொண்டு மூடி வைத்துள்ளார் நம்முடைய சிவபெருமான். அதாவது புறக்கலவியிலேயே நம்முடைய நாட்டம் எல்லாம் செல்கிறது.

பரியங்க யோகம் பயிலும் யோகியர், புறக்கலவியை விட்டு அகக்கலவியைக் காண, மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய அக்கினியை சுழுமுனை வழியாக மேலே ஏறச் செய்து, வலிமை உடையவராய், உள்நாக்கில் அடக்கி வைத்து சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் சேரச் செய்வர்.

வெள்ளி – வெண்ணிற விந்து, பொன் – பொன் நிறமாகிய நாதம், கள்ளத் தட்டானார் – மறைந்திருக்கும் சிவபெருமான், கொள்ளி – குண்டலினியாகிய அக்கினி, பறிய – முன்னே செல்ல, குழல் – சுழுமுனை, உண்ணா – உள் நாக்கு, வள்ளி – வண்மை உடைய


எண்ணி எண்ணி மகிழலாம்!

ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே – 832

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நிற்பது எல்லோரும் செய்யக்கூடிய பயிற்சி அல்ல, அது கடுமையான பயிற்சி. ஆகாய கங்கையை தலையில் வைத்திருக்கும் சிவபெருமானைப் போல, உச்சந்தலையில் அமுதம் ஊறப்பெற்ற சிவயோகிகளுக்கு மட்டுமே பரியங்கயோகம் சாத்தியமாகும். சிவயோகிகள் ஐந்து நாழிகை நேரம் பரியங்கயோகத்தில் இருந்து, தனது உச்சந்தலையில், நீர்நிலையில் தேக்கப்படும் தண்ணீரைப் போல, அமுதம் ஊறப் பெறுவார்கள்.

சிவயோகிகள் பரியங்கயோகத்தில், சிவசக்தியரை எண்ண மாட்டாமல் எண்ணி எண்ணி மகிழ்வார்கள்.

ஒண்ணாத – இயலாத/எளிதில் செய்ய முடியாத, உற்றவர் – நட்பு கொண்டவர்/யோகம் கைவரப் பெற்றவர், பண் – நீர்நிலை


செய்வதற்கு அரிய பரியங்கயோகம்!

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே – 831

விளக்கம்:
முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவளும், மார்பில் சந்தனம் பூசப்பெற்று வாசனை மிகுந்தவளாகவும் இருப்பவள் குண்டலினியாகிய சக்தி. அந்த குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருத்தாமல், மேலே எழச்செய்து, சகசிரதளத்தில் இருக்கும் சிவனைத் தொட்டுத் தழுவி இன்பம் பெறச் செய்வோம். ஐந்து நாழிகை நேரம் பரியங்கயோகத்தில் நிற்கும் யோகிகளால் மட்டுமே சிவசக்தியரை கூடச் செய்வது சாத்தியம்.

செய்வதற்கு அரியதாகிய, ஐந்து நாழிகை நேர பரியங்கயோகம் செய்யும் யோகிகள் மட்டுமே சிவசக்தியரை ஒன்று சேரக் காண்பார்கள்.

பஞ்ச கடிகை – ஐந்து நாழிகை நேரம், சரிவளை முன்கைச்சி – முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவள்.


மனம் நிறையச் செய்யும் யோகம்

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே – 830

விளக்கம்:
சிவசக்தி சேர்ந்திருக்கும் பரியங்கயோகத்தில் ஐந்து நாழிகைகள் தொடர்ந்து நின்று ஆறாவது நாழிகையிலும் தொடர்ந்தால், மனம் நிறைந்த இன்பம் பெருகும். அந்த இன்பத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் காணாது.

ஐந்து நாழிகை நேரம் குண்டலினி சக்தியும், சகசிரதள சிவனும் சேர்ந்து இருக்கும்படி யோகம் செய்வது, பரியங்கயோகம் ஆகும்.

கடிகை – நாழிகை (24 நிமிடங்கள்), வாய் கொளாது – சொல்ல வார்த்தைகள் காணாது


உடலும் மனமும் நம் வசப்படும்!

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே – 829

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, சிவசக்தியை ஒன்று சேரக் காண்பவர்களுக்கு ஞானம் எல்லாம் வசப்படும். எல்லையில்லாத இன்பம் கிடைக்கும். மனம் வசப்பட்டு அங்கும் இங்கும் அலையாது நிற்கும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் நம் வசப்பட்டு நம்முடைய கட்டுப்ப்பாட்டில் இயங்கும்.

உடலும் மனமும் நம் வசத்தில் நின்று, நமக்கு நாமே தலைவனாகலாம்.

அஞ்சு – ஐந்து பொறிகள்


யோக இன்பத்தில் நிலை கொள்வோம்!

அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே – 828

விளக்கம்:
மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய சக்தியும், சகசிரதளத்தில் இருக்கும் சிவனும் ஒன்று சேரும் தத்துவத்தை புரிந்து கொள்ள, அச்சேர்க்கையை அங்கப்புணர்ச்சியாகிய உடலுறவுடன் ஒப்பிடலாம்.

அங்கப்புணர்ச்சியில் ஒரு தலைவன், கலவியின் போது தனது விந்தை சேதப்படாமல், நன்றாகத் தேங்கும்படி செய்து தலைவிக்குக் கொடுக்கிறான். பரியங்கயோகத்தில் யோகியானவன், குண்டலினி சக்தி சகசிரதளத்தை அடையும் போது, உச்சந்தலையில் ஊறும் அமுதத்தை தேக்கி நிறுத்தி சாதகம் செய்கிறான்.

யோகநிலையில் ஏற்படும் இன்பத்தை புரிந்து கொள்வதற்காக, அந்த இன்பம் மனித உடல் புணர்ச்சியோடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது என்பதை இந்த பாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

அங்கம் – உடல், பங்கப் படாமல் பரிகரித்து – சேதம் ஏற்படாதவாறு அடக்கி


காதல் யோகம்!

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே – 827

விளக்கம்:
முந்தைய பாடல்களில் பார்த்தபடி, குண்டலினி சக்தி மேலேறி சகசிரதளத்தை அடைவது என்பது, சிவனும் சக்தியும் செய்யும் காதல் யோகம் ஆகும்..

இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு மூச்சுக்களையும், கவனத்தை வெளியே சிதற விடாமல், சுழுமுனையில் நிறுத்தி மேலே ஏற்றினால் உச்சந்தலைக்கு மேல் உள்ள மதி மண்டலத்தில் வான் கங்கை ஊறும். இவ்வாறு குண்டலினி சக்தியை மேலே ஏற்றி, நாம் பரியங்கயோகத்தில் நின்றால் நம்முடைய முதுக்குத்தண்டு ஒருகாலும் தளராது. உடலும் தளராமல் நீண்ட காலம் வாழலாம்.

இடைகலை, பிங்கலை ஆகிய இரு சக்கரங்களைக் கொண்ட வண்டியை, அங்கேயும் இங்கேயுமாக பாதை மாற்றாமல், மேலே ஏற்றுவோம்.

கண்டன் – தலைவனாகிய சிவபெருமான், கண்டி – தலைவியாகிய சக்தி, மண்டலம் – உச்சந்தலைக்கு மேல் விளங்கும் மதி மண்டலம், தண்டு – முதுகுத்தண்டு